இதுவரை இல்லாத பேரழிவு: கேரள முதல்வர் வேதனை
இதுவரை இல்லாத பேரழிவு: கேரள முதல்வர் வேதனை
இதுவரை இல்லாத பேரழிவு: கேரள முதல்வர் வேதனை

கடுமையான மழை
அப்போது அவர் கூறியதாவது: கேரளாவில் இதுவரை இல்லாத வகையில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு இதயத்தை உலுக்கும் பேரழிவு. அதிகாலை 2 மணி, 4:10 மணியளவில் அடுத்தடுத்து கனமழை, நிலச்சரிவு போன்ற நிகழ்வுகள் நிகழ்ந்தன. திடீரென பொழிந்த அதிகனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. மிகக்கடுமையான மழை பெய்ததால், ஒரு பகுதி அழிந்தது. இதுவரை 93 உடல்களை மீட்டுள்ளோம். இது இன்னும் அதிகரிக்கும். 128 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றிரவு தூங்க சென்ற பலர் அடித்து செல்லப்பட்டனர்.
நிவாரண முகாம்கள்
காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பலர் இன்னும் சிக்கி உள்ளனர். வயநாட்டில் 45 உட்பட மாநிலம் முழுவதும் 118 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு, 5,531 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தீயணைப்பு துறையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து பணியாற்றி வருகின்றனர். மீட்பு பணியில் ராணுவம் மற்றும் கடற்படை குழுவினர் உதவி வருகின்றனர். விமானப்படையின் 2 ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
மீட்பு படையினர்
வயநாட்டில் , தீயணைப்பு படையைச் சேர்ந்த 321 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ராணுவமும் தயார் நிலையில் உள்ளது. 60 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் வயநாட்டை அடைந்துள்ளனர். பெங்களூருவில் இருந்து இன்னும் 89 பேர் வந்து கொண்டு உள்ளனர்.
உறுதி
நிலச்சரிவு குறித்து அறிந்த உடன், பிரதமர் மோடி, ராகுல் உள்ளிட்ட பலர் உதவ முன்வந்துள்ளனர். இந்த பிரச்னையை சமாளிக்க இணைந்து செயல்படுவோம் என உறுதி அளித்துள்ளனர். 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் இடுக்கி உள்ளிட்ட பகுதிகளுக்கு விரைந்துள்ளனர்.
ஒப்படைப்பு
அவசர கால கட்டுப்பாட்டு மையத்திற்கு வரும் தகவல்கள் உடனடியாக பேரிடர் மீட்புக்குழுவிடம் தெரிவிக்கப்படுகிறது. உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்து அடையாளம் கண்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. மண்ணில் புதைந்த உடல்களை கண்டறிய போலீஸ் மோப்பநாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மாயமானவர்கள் டுரோன் மூலம் தேடுதல் பணி நடக்கிறது. காயமடைந்தவர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டு உள்ளன. முண்டக்கை பகுதியில் மீட்பு பணி சவாலாக உள்ளது. கனமழை சாலைகள் துண்டிக்கப்பட்டதால், மீட்பு பணிகள் சவாலாக உள்ளது.
572 மி.மீ.,மழை
48 மணி நேரத்தில் வயநாட்டில் 572 மி.மீ., மழை பெய்துள்ளது. கோழிக்கோடு, திருவனந்தபுரத்தில் மாநில கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது. சூரல்மலை பகுதியில் கணிக்க முடியாத அளவிற்கு சேதம் ஏற்பட்டு உள்ளது. மண்ணில் புதைந்து எரிந்தும் 6 மின்மாற்றிகள் சேதமடைந்தது. 350 வீடுகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். பாதிக்கப்பட்ட மக்கள் சூழ்நிலையை உணர்ந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும். திருவனந்தபுரம், கோழிக்கோட்டில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது.
நிபுணர்கள் வரவழைப்பு
வயநாடு, கோழிக்கோடு பகுதிகளில் இருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு திருச்சூர், கண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு மருத்துவ குழுவினர் சென்றுள்ளனர். 108 ஆம்புலன்சுகளுடன் அவசர கால பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அனைத்து சக்தியை ஒன்று திரட்டி மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளோம். இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.