/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/புதுகையில் கான்ட்ராக்டர்கள் கடும் போட்டி :சாலைப்பணிகள் மீண்டும் சுணக்கம்புதுகையில் கான்ட்ராக்டர்கள் கடும் போட்டி :சாலைப்பணிகள் மீண்டும் சுணக்கம்
புதுகையில் கான்ட்ராக்டர்கள் கடும் போட்டி :சாலைப்பணிகள் மீண்டும் சுணக்கம்
புதுகையில் கான்ட்ராக்டர்கள் கடும் போட்டி :சாலைப்பணிகள் மீண்டும் சுணக்கம்
புதுகையில் கான்ட்ராக்டர்கள் கடும் போட்டி :சாலைப்பணிகள் மீண்டும் சுணக்கம்
ADDED : ஆக 01, 2011 01:32 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகராட்சியில் காண்ட்ராக்டர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள போட்டியினால் சாலைப் பணிகள் மீண்டும் தடைபட்டுள்ளது.
காண்ட்ராக்டர்களை சமாதானம் செய்து சாலைப் பணிகளை துவக்க அ.தி.மு.க., கவுன்சிலர்களுடன் நகராட்சி நிர்வாகம் இணைந்து முயற்சி மேற்கொண்டுள்ளது. புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டத்தால் சிதிலமடைந்த சாலைகளை செப்பனிட முந்தைய தி.மு.க., ஆட்சி முடியும் தருவாயில் ரூ.8.40 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதையடுத்து சாலைப் பணிகளுக்கான டெண்டர் கோரப்பட்டது. கமிஷன் பங்கீடு செய்வதில் உடன்பாடு ஏற்படாததால் சாலைப் பணிகளை டெண்டர் எடுப்பதில் காண்ட்ராக்டர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட குறைத்து பலர் டெண்டர் கோரியிருந்தனர். இதற்கு உடன்படாத காண்ட்ராக்டர் ஒருவர் சாலைப் பணிகளுக்கான டெண்டருக்கு நீதிமன்றத்தின் மூலம் தடையாணை பெற்றார். இதன்காரணமாக சாலைப் பணிகள் தடைபட்டதோடு, இதற்காக அரசு ஒதுக்கீடு செய்த எட்டு கோடியே 40 லட்சம் ரூபாய் அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. இவை நகர்ப்பகுதி மக்களிடையே அதிருப்தியையும், தி.மு.க.,வுக்கு பெரும் பின்னடைவையும் ஏற்படுத்தியது. சாலைப் பணிகளை மீண்டும் துவக்க நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் குறிப்பாக வர்த்தகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் ஆதரவுடன் சாலை மறியல், நகராட்சி அலுவலகம் முற்றுகை போன்ற போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து நகரின் முக்கிய சாலைகளில் ஒன்றான மேல ராஜவீதி சாலையை அவசரம் கருதி நகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.50 லட்சம் செலவில் செப்பனிடுவதென முடிவுசெய்து நகர்மன்ற கவுன்சில் ஒப்புதலும் பெறப்பட்டது. தொடர்ந்து கடந்த 27ம் தேதி சாலைப் பணிக்கான டெண்டர் கோரப்பட்டது. இதிலும் காண்ட்ராக்டர்களுக்கு இடையே உடன்பாடு ஏற்படாததால் பலர் போட்டிபோட்டு டெண்டர் கோரியிருந்தனர். இவர்களின் ரெங்கராஜன் என்பவரது டெண்டரை ஏற்றுக்கொண்ட நகராட்சி நிர்வாகம் அவருக்கு பணி செய்வதற்கான தடையின்மை சான்றையும் வழங்கியது. சாலை பணிக்கான வாய்ப்பு கிடைக்காததால் ஆத்திரமடைந்த காண்ட்ராக்டர் முருகேசன் மதுரை உயர்நீதிமன்ற கிளையின் மூலம் சாலைப் பணிகளுக்கு ஆகஸ்ட் இரண்டாம் தேதிவரை தடையாணை பெற்றுள்ளார். இதன்காரணமாக சாலைப் பணிகள் இரண்டாவது முறையாக மீண்டும் தடைபட்டுள்ளது. இவை நகர்ப்பகுதி மக்களிடையே அதிருப்தியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நலனை பற்றி கவனத்தில் கொள்ளாமல் இதுபோன்ற வளர்ச்சிப் பணிகளுக்கு தடையாக இருக்கும் காண்ட்ராக்டர்களின் உரிமத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் துவக்கவேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். இதற்கிடையே தடையாணை பெற்றுள்ள காண்ட்ராக்டரை சமாதானம் செய்து சாலைப் பணிகளை விரைவில் துவக்க அ.தி.மு.க., கவுன்சிலர்களுடன் நகராட்சி நிர்வாகம் இணைந்து முயற்சிகள் மேற்கொண்டுவருகிறது. இந்த முயற்சி பலிக்குமா என்பது ஆகஸ்ட் இரண்டாம் தேதிக்கு பின்னரே தெரியவரும்.