தடையில்லா சான்றுக்கு ரூ.4,000 லஞ்சம்:மருத்துவ பல்கலைக்கழக ஓ.ஏ., கைது
தடையில்லா சான்றுக்கு ரூ.4,000 லஞ்சம்:மருத்துவ பல்கலைக்கழக ஓ.ஏ., கைது
தடையில்லா சான்றுக்கு ரூ.4,000 லஞ்சம்:மருத்துவ பல்கலைக்கழக ஓ.ஏ., கைது
ADDED : அக் 04, 2011 11:13 PM
சென்னை:தடையில்லா சான்று தர, 4,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, சென்னை, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை அலுவலக உதவியாளரை, லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.வேலூர் மாவட்டம், கே.கே.நகரைச் சேர்ந்தவர் யாசின் செரீப், 25. சேலம், சண்முகா பிசியோதெரபி கல்லூரியில் படித்து வந்தார். கல்லூரியில் உரிய வசதிகள் இல்லாததால், உரிமம் ரத்தாகி, கல்லூரி மூடப்பட்டது. இதைத் தொடர்ந்து, யாசின் செரீப், கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் சேருவதற்கான இடம் கிடைத்தது.
அக்கல்லூரியில் சேர, சென்னை, கிண்டியில் உள்ள, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகத்தில், தடையில்லா சான்று பெற வேண்டும்.இந்த சான்று பெறுவதற்காக, யாசின் விண்ணப்பித்தார். அப்போது, பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றும், கொளத்தூரைச் சேர்ந்த பார்த்தசாரதி, 48, என்பவர், சான்றிதழ் கிடைக்க, சாதாரணமாக ஒரு மாதமாகும் என்றும், உடனே கிடைக்க வேண்டும் என்றால், 4,000 ரூபாய் லஞ்சமாக தரவேண்டும் என்றும் கேட்டார்.லஞ்சம் தர விரும்பாத யாசின், லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில், வழக்கு பதியப்பட்டது.
தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சுதாகர், இன்ஸ்பெக்டர்கள் அசோக்குமார், கவுதமன், சீனிவாசன் உள்ளிட்டவர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படையினரின் ஆலோசனையின் பேரில், நேற்று காலை யாசின், பார்த்தசாரதியை சந்தித்து ரசாயனம் தடவப்பட்ட, 4,000 ரூபாயை கொடுத்தார். அப்போது, மறைந்திருந்த தனிப்படை போலீசார், பார்த்தசாரதியை கைது செய்தனர். தொடர்ந்து, பார்த்தசாரதியின் வீட்டையும் சோதனையிட்ட போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


