நியாயமான விவாதத்துக்கு தயார் : பிரதமர் மன்மோகன் சிங்
நியாயமான விவாதத்துக்கு தயார் : பிரதமர் மன்மோகன் சிங்
நியாயமான விவாதத்துக்கு தயார் : பிரதமர் மன்மோகன் சிங்
ADDED : ஆக 22, 2011 11:04 PM

கோல்கட்டா: 'லோக்பால் மசோதா குறித்த பிரச்னைக்கு தீர்வு காண, நியாயமான விவாதங்களுக்கு அரசு தயாராக உள்ளது. அரசு தாக்கல் செய்துள்ள லோக்பால் மசோதாவை, பார்லிமென்ட் நிலைக் குழு ஆய்வு செய்து வருகிறது. தேவைப்பட்டால், அந்த மசோதாவில் திருத்தம் செய்யும் அதிகாரம், நிலைக்குழுவுக்கு உள்ளது' என, பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.
கோல்கட்டாவில் நடந்த இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தின் பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில், பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது: அரசு சார்பில், பார்லிமென்டில் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த மசோதா, நிலைக் குழுவின் பரிசீலனையில் உள்ளது. இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ள விஷயங்கள் தொடர்பாக, கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளது எங்களுக்குத் தெரியும். தேவைப்பட்டால், இந்த மசோதாவில் திருத்தம் மேற்கொள்வதற்கான அதிகாரம், நிலைக் குழுவுக்கு உள்ளது. எனவே, தனிப்பட்ட நபர்கள், இந்த மசோதா தொடர்பான தங்களின் ஆலோசனைகளை, மக்கள் பிரதிநிதிகள் மூலமாக, பார்லிமென்டிலோ, நிலைக் குழுவிலோ தெரிவிக்கலாம். சாதாரண மக்கள், தங்களின் சாதாரண தேவைகளைப் பெறுவதற்காக, அரசுத் துறையை அணுகும் போது, லஞ்ச நடவடிக்கைகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அரசின் ஒப்பந்தம் தொடர்பான விவகாரங்களிலும் ஊழல் அதிகரித்துள்ளது. அரசின் விதிமுறைகள் போதுமானதாக இல்லாதது தான், இதற்குக் காõரணம்.இதற்குத் தீர்வு காண, அரசின் தற்போதைய நடைமுறைகளில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டியது அவசியம். அரசின் கொள்கை முடிவுகளில், வெளிப்படையான நடவடிக்கையை ஏற்படுத்த வேண்டும். இதுகுறித்து அமைச்சர்களிடம் வலியுறுத்தியுள்ளேன். விரைவில், இதற்கு தீர்வு ஏற்படும். அரசியல் கட்சிகளின் தேர்தல் நிதி தொடர்பான விவகாரங்களிலும் சீர்திருத்தம் அவசியம். அப்போது தான், கறுப்புப் பணம் புழங்குவதைத் தடுக்க முடியும். ஊழலால், நம் நாட்டின் நற்பண்புகள் சீர்குலைகின்றன. இது மட்டுமல்லாமல், ஊழல் நடவடிக்கைகள், திறமையின்மையையும் ஊக்குவிக்கின்றன.
பொருளாதார சீர்திருத்தங்களால் தான், ஊழல் அதிகரித்து விட்டதாக கூறப்படுவது தவறு. தொழில் துறைக்கான உரிமம் வழங்குவது, இறக்குமதி உரிமம் வழங்குவது போன்ற சீர்திருத்தம் செய்யப்பட்ட விஷயங்களில் ஊழல் குறைந்து விட்டது. இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.
ஆர்ப்பாட்டம்: பிரதமரின் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த இடத்திற்கு வெளியில், காராக்பூர் ஐ.ஐ.டி.,யைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள், பலமான லோக்பால் மசோதாவுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.
3 மாதத்தில் லோக்பால் மசோதா' : 'அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான லோக்பால் மசோதா மூன்று மாதத்தில் அமலாகும்' என, லோக்பால் மசோதா குறித்த நிலைக்குழு தலைவர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், லோக்பால் குறித்த பார்லிமென்ட் நிலைக்குழு தலைவருமான அபிஷேக் சிங்வி கூறியதாவது: லோக்பால் குறித்த பரிந்துரைகளை தாக்கல் செய்ய நிலைக் குழுவுக்கு மூன்று மாதகால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், இந்த காலஅவகாசத்தை நீட்டித்துக் கொள்ளலாம். அன்னா ஹசாரே தயாரித்த லோக்பால் வரைவு மசோதாவா, அரசு தரப்பு லோக்பால் மசோதாவா என்ற விவாதம் தேவையில்லை. அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்க லோக்பால் மசோதா மூன்று மாதத்தில் தாக்கல் செய்யப்படும். ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற பொதுக்கருத்தின் அடிப்படையில் தான், லோக்பால் மசோதா உருவாக்கப்பட்டது. நோக்கம் ஒன்று தான், அதில் சில வேறுபாடுகள் இருக்கலாம். பார்லிமென்ட் நடைமுறைக்கு ஏற்ப, அரசு இந்த லோக்பால் மசோதாவை உருவாக்கியுள்ளது. ஹசாரே உருவாக்கிய போட்டி லோக்பால் மசோதா, சில நிபந்தனைகளை வற்புறுத்துகிறது. இது பிரச்னையை தீர்க்க உதவாது. இவ்வாறு அபிஷேக் சிங்வி கூறினார்.