ADDED : செப் 20, 2011 09:39 PM
வத்திராயிருப்பு:வத்திராயிருப்பில் ஆட்டிறைச்சி விற்பவர்கள் ரோட்டில்
ஆடுகளை வெட்டுவதோடு, நோய்தாக்கிய சுகாதாரமற்ற இறைச்சியை விற்பனை
செய்கின்றனர்.
வத்திராயிருப்பில் ஆட்டிறைச்சிக்கூடம் பல ஆண்டுகளாக செயல்படாததால், ஆட்டு
இறைச்சி கடைக்காரர்கள், தங்கள் கடைகளுக்கு முன் ஆடுகளை வெட்டி, இறைச்சி
விற்பனை செய்கின்றனர். அதிகாலை நேரங்களில் ரோடானது ரத்தக்காடாக
காட்சியளிக்கிறது. கழிவுகளையும் ரோடுகளில் வீசுவதால் ரோடு முழுவதும் சிதறி
கிடக்கின்றன.
இதனால் கடைகள் அமைந்துள்ள மெயின் பஜாரிலிருந்து, நாடார் பஜார்
வரை சுகாதாரக்கேடாக உள்ளது. இவர்கள் வெட்டும் ஆடுகள் தரமானதா என்பதை
கண்காணித்து, இறைச்சிகளுக்கு சுகாதார அலுவலரால் சீல் வைக்கும் நடைமுறை,
நீண்டஆண்டுகளாக நிறுத்தப்பட்டதால், நோய் தாக்கிய ஆடு, இறந்த, இறக்கும்
நிலையில் உள்ள ஆடுகளை குறைந்த விலைக்கு வாங்கி, இறைச்சியாக விற்பனை
செய்கின்றனர். இதன் இறைச்சியை அடுத்தடுத்த நாட்கள் தொடர்ந்து வைத்தும்
விற்பனை செய்வதால், அதை வாங்கி செல்வோர் வாந்தி, பேதிக்கு ஆளாகின்றனர். இதை
பேரூராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விடுவதால்
சுகாதாரக்கேடு தொடர்கிறது. இப்பிரச்னையில் நடவடிக்கை எடுக்க கோரி
முதல்வர், கலெக்டருக்கு 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கையெழுத்திட்டு
புகார் அனுப்பியுள்ளனர்.