அ.தி.மு.க., மாநகராட்சி மேயர் வேட்பாளர்கள் பட்டியல் இறுதியானது அல்ல: ராமகிருஷ்ணன்
அ.தி.மு.க., மாநகராட்சி மேயர் வேட்பாளர்கள் பட்டியல் இறுதியானது அல்ல: ராமகிருஷ்ணன்
அ.தி.மு.க., மாநகராட்சி மேயர் வேட்பாளர்கள் பட்டியல் இறுதியானது அல்ல: ராமகிருஷ்ணன்
ADDED : செப் 16, 2011 11:18 PM

சென்னை: ''மாநகராட்சி மேயர் வேட்பாளர்கள் பட்டியல் இறுதியானதல்ல; மாறுதலுக்கு உட்பட்டது என அ.தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டது,'' என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன் கூறினார். உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் இடப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன் எம்.பி., ஆகியோர் போயஸ் கார்டனில் உள்ள முதல்வர் ஜெயலலிதா இல்லத்திற்கு நேற்று மாலை வந்தனர். அங்கு, அ.தி.மு.க., இடப்பங்கீடு குழுவினரும், அமைச்சர்களுமான பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோருடன் 45 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வெளியே வந்த ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சித் தேர்தலில் இடப்பங்கீடு பற்றிய முதற்கட்ட பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது. எங்கள் கட்சியின் சார்பில் இடப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த, பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தங்கவேல் எம்.எல்.ஏ., மாநில செயற்குழு உறுப்பினர்கள் சம்பத், நூர் முகமது உள்ளிட்ட நால்வர் குழு அமைக்கப்பட்டுள்ளது. நாளை (இன்று) மாலை மீண்டும் பேச்சுவார்த்தை துவங்கும். கூட்டணிக் கட்சியுடன் சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அ.தி.மு.க., வெளியிட்டுள்ள மாநகராட்சி மேயர் வேட்பாளர்கள் பட்டியல் மாறுதலுக்குரியது. மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் போட்டியிடுவது பற்றி, முதற்கட்ட பேச்சுவார்த்தை நாளை (இன்று) துவங்குகிறது. இவ்வாறு ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன், துணைச் செயலர் மகேந்திரன், ஸ்டாலின், குணசேகரன் ஆகியோருடன் அ.தி.மு.க., இடப்பங்கீடு குழுவினர் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பு 20 நிமிடம் நடந்தது.
வெளியே வந்த தா.பாண்டியன் நிருபர்களிடம் கூறும்போது, ''இடப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி, குணசேகரன், சிவபுண்ணியம், ராமசாமி, சுப்புராயன் ஆகியோர் கொண்ட ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. எங்கள் முடிவை தெரிவித்துள்ளோம். நாளை (இன்று) மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. அ.தி.மு.க., அறிவித்த வேட்பாளர்கள் பட்டியல் பற்றி எங்களுக்கு எந்த அதிருப்தியும் இல்லை,'' என்றார்.