Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இது உங்கள் இடம்/இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

PUBLISHED ON : ஆக 21, 2011 12:00 AM


Google News
Latest Tamil News

மனம் திறந்து நேரு பேசியது அந்தக் காலம்...வீ.சுந்தர மகாலிங்கம், திருவனந்தபுரத்திலிருந்து எழுதுகிறார்: நேரு பிரதமராக இருந்தபோது, மக்களோடு மக்களாக கலந்து, பொதுக்கூட்டங்களில் மக்களிடையே புகுந்து, தனக்கு அளித்த மாலைகளை, மக்களுக்கு அளித்து மகிழ்ந்தார்.

சுதந்திர தினத்தன்று, மக்கள் கூட்டத்தில் அவர் பேசும்போது, எதிர்கால இந்தியா, எழுச்சியும், மறுமலர்ச்சியும் பெற உணர்ச்சிகரமாகப் பேசியதை யாராலும் மறக்க முடியாது.



அன்று, திறந்த வெளியில், தன்னையே மறந்து, மனம் திறந்து பேசுவார். இன்றைக்கு எப்படி இருக்கிறது? சுதந்திர, குடியரசு தினத்தில், குண்டு துளைக்காத கூண்டில், பலத்த பாதுகாப்புடன் நின்று, இந்திய மக்களின் சுதந்திர, சுபிட்சமான வாழ்வு பற்றி, பிரதமரும், ஜனாதிபதியும் பேச, நாம் கேட்கும் நிலை உள்ளது.



நம் நாட்டின் வளர்ச்சியை சீர்குலைக்க, நடந்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தலால், நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கிறது.

அல்-குவைதா, லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்பினர், இந்தியாவுக்குள் புகுந்து, குருவி சுடுவது போல், மக்களை சுட்டுக் கொன்று விட்டு, தப்பிச் செல்கின்றனர்.

அவர்களில் ஒன்றிரண்டு பேர் சிக்கினாலும் கோர்ட்டில் விசாரணை செய்து, அதை நிறைவேற்றாத வண்ணம், தூக்குத் தண்டனை தந்து, கருணை மனு அளிக்கவும் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.



இதனால், பல வருடங்கள் காலதாமதம் ஏற்படுகிறது.எதற்கெல்லாமோ சட்டத்திருத்தம் கொண்டு வரும் மத்திய அரசு, இந்த விஷயத்தில், தனிக் கோர்ட்டுகள் விசாரித்து தண்டனை தருவதோடு நிறுத்தி, உடனே நிறைவேற்றிட வேண்டும். தூக்குத் தண்டனையை ஜனாதிபதி உறுதி செய்த பின்பும், காலதாமதத்தை காட்டி, மீண்டும் கோர்ட்டுக்கு செல்வதைத் தடுக்க வேண்டும். இல்லையெனில், பயங்கரவாதிகள் சுலபமாக தப்பிக்கலாம் என்ற எண்ணம் வலுப்பெறும்.மனிதநேயம் கொண்டு குற்றவாளிகளுக்கு இரக்கம் காட்டிவிட்டு, இறந்த நூற்றுக்கணக்கான மக்களின் உயிர்களையும், குடும்பங்களையும் மறக்கலாமா?



அதிக ஆர்வக் கோளாறு!

டாக்டர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: முன்னாள் முதல்வர் கருணாநிதி, சிறந்த தமிழறிஞர் என்பதில் எந்த ஐயமுமில்லை. ஆனால், தேர்தல் தோல்வி மற்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால், தற்போது குழம்பியுள்ளார் என்பதற்கு, அவரது 'ஜெயா' நாமகரண விளக்கம் ஒரு எடுத்துக்காட்டு.தி.மு.க., ஊடகங்களில், 'ஜெயா அரசு' என, தினமும் தொடர்ந்து உச்சரிக்கப்படுவதற்கு, அவரது யோசனையே காரணம் என கூறப்படுகிறது.

'ஜெய' என்றால், 'வெற்றி' என்றும்,



'ஜெயா' என்றால், 'வெற்றி பெறாத' என்றும் அதற்குப் பொருளாம்!அதாவது, 'ஜெய' என்ற வடமொழிச் சொல்லுக்கு, 'ஜெயா' என்பதும், தமிழ்ச்சொல் எதிர்மறை என்கிறார் முத்தமிழ்க் காவலர். 'ஜெயா' என்பதை, அதன் ஒலியை வைத்து, ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் ஆக்கியிருக்கிறார், நட - நடா, விழு - விழா, நில் - நில்லா, தூங்கு - தூங்கா என்பது போல். என்னே அவர் தமிழார்வம்!'ஜெய' என்றாலும், வடமொழியில் ஒரே பொருள் வெற்றி தான். 'ஜெய' எனும் வடமொழிச் சொல்லை, 'ஜெயா' என்று கூறுவதால், அது தமிழ் இலக்கண விதிப்படி எதிர்மறை ஆகுமா? கிருஷ்ண - கிருஷ்ணா, ராம - ராமா, சிவ - சிவா என்பவை அதற்கு எடுத்துக்காட்டு. வடமொழியில், 'அ' சேர்க்கும் போது தான் எதிர்மறையாகும். உதாரணத்திற்கு, நியாயம் - அநியாயம், பயம் - அபயம், ஞானம் - அஞ்ஞானம்.தன் தமிழ்ப் புலமையைக் காட்ட வந்த கருணாநிதி, தன் வடமொழி அறியாமையை, இப்படி

பகிரங்கமாக பறைசாற்றியிருக்க வேண்டாம்.



வேனில்ஏற்றிவிட ஆர்வம்!



கச்சைகட்டி எல்.பாரதி, ஊராட்சித் துணைத்தலைவர் (பணி நிறைவு), மதுரையிலிருந்து எழுதுகிறார்: இன்று, கூலி வேலை செய்யும் சாதாரண மக்கள் கூட, தன் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி, மெட்ரிக்குலேஷன் பள்ளியில் சேர்க்கின்றனர். குழந்தைகள் நான்கு வார்த்தை ஆங்கிலத்தில் பேசினால், உடனே தாய் தன் குழந்தைக்கு முத்தமிட்டு கொஞ்சுவதை, எல்லார் வீட்டிலும் காணமுடிகிறது. தமிழகத்தில், சாதாரண நடுத்தர குடும்பத்தின் பெற்றோர், காலை, 7 மணி முதல், 9 மணி வரை, தன் குழந்தைகளை பள்ளி வேனில் ஏற்றிவிட காத்திருக்கும் காட்சி, பரவலாக காணப்படுகிறது.



தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த சமச்சீர் கல்வி தரமற்றது; இது தான் உண்மை. தி.மு.க., தலைவர் கருணாநிதி, தன் ஆட்சி ஏற்பட்ட முதல் ஆண்டிலேயே, சமச்சீர் கல்வியை ஏன் கொண்டுவரவில்லை?அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரியுடன், இலங்கை தமிழர் பிரச்னையை பற்றி, ஆங்கிலத்தில் சரளமாக பேசினார் முதல்வர் ஜெயலலிதா. தன்னைப் போலவே, தமிழகத்தில் உள்ள குழந்தைகள் அனைவரின் கல்வி தரத்தையும் உயர்த்தி, ஆங்கிலம் பேச வைக்க வேண்டும் என அவர் விரும்பினார். இது தவறா?சமச்சீர் கல்வியை ஆதரிக்கும் கருணாநிதி, ராமதாஸ், வைகோ போன்றோரின் பேரன், பேத்திகள், எந்த பள்ளியில் படிக்கின்றனர் என்ற வெள்ளை அறிக்கையை வெளியிட முடியுமா?கல்வியின் தரம் உயர, தமிழக முதல்வர் போராடி கொண்டிருக்கிறார். அதை ஆதரிக்க மனம் இல்லாவிட்டாலும், எதிர்க்காமல் இருந்தால் போதும். சமச்சீர் கல்வி விஷயத்தில், முதல்வர் நடவடிக்கை சரியானது தான்.



இவைபுலம்பல்!



ச.பிரசன்னா, சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'திராவிடம் என்ற சொல்லே கெட்ட வார்த்தை' என்ற ராமதாசின் பேச்சு, மிகப் பெரிய காமெடி. அதே திராவிடக் கட்சிகளோடு இருபதாண்டுகள் இருந்தவரா இப்படிப் பேசுவது?குடும்ப ஆதிக்கமும் ஒரு காரணம் என, இப்போது ஆலாபனை செய்கிறார் ராமதாஸ். குடும்பத் திருமணத்துக்கு பத்திரிகை வைக்கும் போது கூட்டணியை முடிவு செய்தவர் தானே இவர்? மகனான அன்புமணிக்கு, ராஜ்யசபா சீட் தர வேண்டும் என்ற நிபந்தனையோடு கூட்டு சேர்ந்தவர், சீட் கிடைக்க வாய்ப்பில்லை என்றதும், 'குடும்ப ஆதிக்கம்' என, தி.மு.க.,வை குறை சொல்வது ஏன்? எந்த பொதுக்குழு, செயற்குழு, அவருக்கு, 31 சீட்டுகள் போதும் என, அனுமதி தந்தது?



காங்கிரசை 'கை' அடக்க நினைத்து, பா.ம.க.,வை தன்னுடன் தி.மு.க., சேர்த்ததே மகா தவறு; தனக்கு தானே குழி பறித்த செயல். செல்லாக்காசு என தெரிந்தும், ராமதாசை சேர்க்காதிருந்தால், மேலும் சில இடங்களில் தி.மு.க., வென்றிருக்கலாம்.தி.மு.க.,வின் தோல்விக்கு, ஆயிரம் காரணம் உண்டு என்றாலும், அணி சேர்ந்தது அதில் ஒன்று.

ராமதாஸ் - அன்புமணி சொல்பவை புகார் அல்ல; புலம்பல்கள்!





ஆதிதிராவிட மாணவர் விடுதிகள் சீராகுமா?

க.கேசவன், பரமக்குடி, ராமநாதபுரத்திலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில் உள்ள, 1,059 அரசு ஆதிதிராவிட மாணவர் விடுதிகளை சீர்படுத்தும் வகையில், தமிழக அரசு செயல்படுவது வரவேற்கத்தக்கது.ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர், செயலர் மற்றும் ஆணையர், சில விடுதிகளை ஆராய்ந்ததில், பல்வேறு வெளி மாணவர்கள் அங்கு தங்கியிருந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறைக்கு, மாணவர்களுடைய முழு விவரத்தையும் தெரிவிக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது, வரவேற்கத்தக்கது.



கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நான், இவ்வகை விடுதியில் தங்கி படித்துள்ளேன். விடுதியில் தங்கியிருக்கும் மாணவனை விட, நண்பரின் உதவியுடன் தங்கியிருக்கும் வெளி மாணவன் தான், அதிகாரத்துடன், அனைத்து சுகங்களையும் அனுபவிப்பான். எதிர்த்து கேட்டால், அடிதடி தான் நடக்கும்.விடுதி காப்பாளரோ, இதை கண்டுகொள்வதே இல்லை. ஒருவேளை அவர் எதிர்த்து பேசினாலும், மாணவர்கள் அதை சட்டை செய்வதில்லை. எத்தனையோ மாணவர்கள், அரசு விடுதி கிடைக்காமல், வெளியிடங்களில், வாடகைக்கு தங்கிப் படிக்கின்றனர்.'காந்தி நோட்டை' அதிகாரிகளுக்கு கொடுப்பதால், அரசியல் மற்றும் பணபலம் உள்ளவர்களுக்கு மட்டுமே, இவ்விடுதிகளில் தங்க இடம் கிடைக்கிறதே தவிர, தகுதி, மதிப்பெண் அடிப்படையில் கிடைப்பதில்லை.



சில விடுதிகளில், நூலக வசதி, விளையாட்டு உபகரணம், செய்தித்தாள் படிக்கும் வசதிகள் இருந்தும், அதை பயன்படுத்த அனுமதி வழங்குவதில்லை.இதுபோன்ற குறைகளை கண்டறிய, பணி நிறைவடைந்த அரசு அதிகாரியின் தலைமையில், குழு ஒன்றை அரசு நியமித்து, தக்க நடவடிக்கை எடுக்க, முதல்வர் முன்வர வேண்டும். அப்போதுதான், 'எதிர்கால இந்தியா, இளைஞர்களின் கையில் உள்ளது' எனக் கூறிக் கொள்வதில் அர்த்தம் இருக்கும்.





முதல்வர்மனது வைப்பாரா?ரா.நாயகம், தமிழ்நாடு திருக்கோவில் ஓய்வுபெற்ற பணியாளர்கள் சங்கம், மதுரையிலிருந்து எழுதுகிறார்: கடந்த 22 ஆண்டுகளாக, பணிக்கொடை கேட்டு போராடும் கோவில் பணியாளர்கள் மீது, முதல்வர் கருணை காட்ட வேண்டும். பணி நிறைவடைந்தவர்களுக்கு, ஓய்வூதியமாக, 800 ரூபாய் கிடைக்கச் செய்ததே, முந்தைய, அ.தி.மு.க., அரசு தான் என்பதை அனைவரும் அறிவர்.அப்போது, அரசு டிபாசிட் செய்த, 50 கோடி ரூபாயில், 2,500 பேருக்கு மாதம், 800 ரூபாய் வீதம் தரப்பட்டது. அதுபோக, மீதமுள்ள வட்டியே, 21 கோடி ரூபாய் உள்ளது எனக் கூறப்படுகிறது.



அரசு இதை, 100 கோடி ரூபாயாக்கினால், எங்களுக்கும், பணி நிறைவடைந்த நாளில் பெற்ற அடிப்படை சம்பளத்தையும், அதற்குரிய பஞ்சப்படியையும் சேர்த்தே ஓய்வூதியம் வழங்க முடியும்.ஒவ்வொரு கோவில் நிதியிலிருந்தும், 16 சதவீத வருமானத்தை பெற்று இயங்கும் அறநிலையத் துறையினர், எஜமானர்கள் போலவும், அங்கு பணியாற்றும் கோவில் ஊழியர்கள், கொத்தடிமை போலவும் நடத்தப்படுகின்றனர்.கருணைத் தொகையும், குடும்ப ஓய்வூதியமும் கேட்டால், 'அரசாணை இல்லை; தர இயலாது' என, பதில் வருகிறது. இந்த நிலை மாற, முதல்வர் மனது வைக்க வேண்டும்.



பா.ம.க.,இருக்குமா?என்.மதியழகன், பெண்ணாடத்திலிருந்து எழுதுகிறார்: உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின், மதுக்கடைகளை அடித்து நொறுக்கப் போவதாக, ராமதாஸ் அறிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின், பாட்டாளி மக்கள் கட்சி இருக்குமா என்பதை, அவர் முடிவு செய்து கொள்வது நல்லது. ஜெ.,வை, கருணாநிதி போல நினைத்துக் கொண்டாரோ?சென்னை கடற்கரை சாலையில், ஒரு முறை துண்டைக் காணோம், துணியைக் காணோம் என ஓடியதை, மறந்து விட்டார் போலும்! அடித்து நொறுக்கும் போராட்டத் தேதியை அறிவித்துவிட்டு, எந்த ஊர் கடையை அடித்து நொறுக்கப் போகிறார் என்பதை ராமதாஸ் தெளிவாய் சொல்லட்டும்.



அடர்ந்த முந்திரித் தோப்புகளில், பதுங்கு குழிகளில் கள்ளச் சாராயம் காய்ச்சி, குறிப்பாக ஆதி திராவிடர்களை நிரந்தரக் குடிகாரர்களாக ஆக்கியவர்கள் யார்?இந்த நிலையை அறிந்து, 2001ல் ஆட்சியிலிருந்த ஜெ., கள்ளச் சாராயத்தை அடியோடு அழித்தார். மீண்டும் கள்ளச் சாராயம் பெருகாமல் இருக்க, 'டாஸ்மாக்' மதுபானக் கடைகளைத் திறந்தார். ஏழைகள் முகம் மலர்ந்தனர்.இதைத்தான் ராமதாசால் பொறுக்க முடியவில்லை. கருணாநிதியை மிரட்டி, 'டாஸ்மாக்' விற்பனை நேரத்தை குறைத்துப் பார்த்தார்; எடுபடவில்லை.செல்வாக்கு இழந்த கட்சியைத் தூக்கி நிறுத்த, இதுபோன்ற மிரட்டல் போராட்டத்தை அறிவித்துள்ளார். ஜெயலலிதாவிடம் இந்த மிரட்டல் பலிக்காது.



கூண்டுக்கிளிபிரதமர்?என்.ராகவன், காரைக்குடியிலிருந்து எழுதுகிறார்: சுதந்திர திருநாளில், தேசியக் கொடியை ஏற்றுவதற்குக் கூட சுதந்திரம் இல்லாமல், பல அடுக்கு பாதுகாப்பு

அரணோடுதான் ஏற்ற முடிகிறது.மக்களது உடைமைகள், பெட்டி, படுக்கைகள் கூட, பயணத்தின்போது, சோதனைக்கு உட்பட வேண்டிய அவல நிலை உள்ளது. ஜனநாயகத்தை தாங்கிக் கொண்டிருக்கும் வேர்களாக இருக்கும் மக்களை, பயங்கரவாதிகள் என, சந்தேகப்படும்படியான சூழ்நிலை நிலவுகிறது.



'பொருளாதார மேதை, கறை படா கரங்களுக்கு குத்தகைக்காரர்' என, பிரதமர் மன்மோகன் சிங் பெயர் எடுத்திருந்தாலும், கிளி ஜோதிடர் கையில் இருக்கும் கூண்டுக் கிளியாகத்தான் அவரால் இருக்க முடிகிறது.அவரைச் சுற்றி உள்ள அதிகார நந்திகள், கட்சித் தலைமை இவர்களின் கண் அசைவில்தான், அரசு செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆகையால், தன்னிச்சையாக முடிவுகள் எடுக்க முடியாமல் தவிக்கிறார்.இதற்கு, ஹசாரே உண்ணாவிரதத்தை அரசு கையாண்ட விதம் ஒரு சான்று. இதைக் காணும்போது, மனம் வேதனைக் கொள்கிறது.



காங்கிரஸ்கனவு!கலை நன்மணி மகிழ்நன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: இந்தியாவின் முதல் சுதந்திரப் போர், காந்தியுடன் முடிந்தது. இரண்டாவது சுதந்திரப் போர் ஜெயப்பிரகாஷ் நாராயணனுடன் முடிந்தது. மூன்றாவது சுதந்திரப் போரை, அன்னா ஹசாரே தொடங்கி வைத்திருக்கிறார்.'ஊழலைப் பொறுத்த வரையில், காங்கிரசாரும் ஹசாரே பக்கம் தான்' என, சிரிப்புக்காட்டி இருக்கிறார் கபில்சிபல். குரங்கு, குட்டியை விட்டு ஆழம் பார்ப்பது போல, உண்ணா விரதம் தொடங்கும் முன்பே, ஹசாரேவை கைது செய்து, அதன் பின்னணியை ஆராய்கிறது காங்கிரஸ்.ராகுல், பிரதமர் சந்திப்பு, சோனியாவின் கட்டளையால் நடந்தது. அதன் பின்பே, இந்த கைது நடவடிக்கை அரங்கேறியது. மூன்றாவது சுதந்திரப் போரை, நசுக்கி விடலாம் என கனவு காண்கிறது காங்கிரஸ். ஆனால், நாட்டில் நடப்பதைப் பார்த்தால், கனவு ஈடேறும் என்பது சந்தேகம் தான்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us