
'போஸ்டர்' பிரமுகரின் கனவை கலைத்த ஆளுங்கட்சியினர்! ''மக்கள் மனசுல பதியற மாதிரி பேசுங்கன்னு, பேச்சாளர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்காங்க வே...!'' என, விவாதத்தை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''எந்தக் கட்சியிலங்க...'' என விசாரித்தார் அந்தோணிசாமி.
''தி.மு.க.,வுல தான் வே...
''பட்டிமன்ற பேச்சாளர் லியோனி, நடிகர்கள் சந்திரசேகர், குமரிமுத்து போன்றவங்க இடம் பிடிச்சிருக்காங்க... போன தேர்தல்ல சூறாவளி பிரசாரம் செய்த வடிவேலு, இந்த தேர்தல்ல பிரசாரம் செய்யலை வே...'' என்றார் அண்ணாச்சி.
''என்ன காரணம்ங்க...'' என ஆர்வமாக கேட்டார் அந்தோணிசாமி.
''போன தேர்தல்ல நடிகருக்கு குவிஞ்ச கூட்டமெல்லாம், அப்படியே ஓட்டா மாறும்னு, கட்சியில எதிர்பார்த்தாவ... ஆனா, எல்லாமே அவரை பார்க்க குவிஞ்ச கூட்டம்ங்கறது, 'ரிசல்ட்'டுக்கு அப்பறம் தான் தெரிஞ்சது... அதனால, இந்த முறை அவரை கூப்பிடலையாம்... நடிகரும், 'ஆளை விட்டா போதும்'னு, 'எஸ்கேப்' ஆகிட்டாரு வே...'' என்றார் அண்ணாச்சி.
''போஸ்டர் பிரமுகர் கனவை, ஆளுங்கட்சிக்காரங்க கலைச்சிட்டாங்க பா...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார் அன்வர்பாய்.
''எந்த ஊர் விவகாரம் ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.
''மதுரையில இருக்கற அந்த பிரமுகர், கட்சியைச் சேர்ந்தவங்களோட பிறந்த நாள், நினைவு நாள், கட்சி துவங்கிய நாள், கோர்ட் தீர்ப்பு வெளியாகும் நாள்ன்னு, எந்த நாளா இருந்தாலும், 'பஞ்ச்' வசனங்கள் நிறைஞ்ச போஸ்டர்களை ஊர் முழுக்க ஒட்டிடுவாரு பா... இவர், உள்ளாட்சித் தேர்தல்ல, 'சீட்' கிடைக்கும்ன்னு எதிர்பார்த்தாரு... நகர செயலர் அனுப்பிய லிஸ்ட்டிலும் அவர் பெயர் இருந்துச்சு... அதனால, மாநகராட்சி துணை மேயர் பதவியை பிடிச்சுடலாம்னு, நினைச்சிட்டு இருந்தார்...
''ஆனா, 'போஸ்டர் ஒட்டியே பிரபலமாகிட்டாரு... அவருக்கு எதுக்கு பதவி?'ன்னு, லோக்கல் பிரமுகர்கள் போட்டுக் கொடுத்துட்டாங்க... அதனால, கடைசி நேரத்துல அவரை கழட்டி விட்டுட்டாங்க பா...'' என்றதும், பக்கத்து வீட்டுக்காரர், சுரேஷிடம் இருந்து போன் வரவே, அந்த விஷயத்தை முடித்தார் அன்வர்பாய்.
''ஒரே துறையில அடுத்தடுத்து, நான்கு அதிகாரிகள், 'ரிடையர்டு' ஆகப்போறா ஓய்...'' என, கடைசி தகவலுக்குள் நுழைந்தார் குப்பண்ணா.
''விளக்கமா சொல்லும் வே...'' என்றார் அண்ணாச்சி.
''கல்வித்துறையில இருக்கற வசந்தி, கருணாகரன் உட்பட, நான்கு இயக்குனர்கள், வர்ற மார்ச் மாசத்துல இருந்து, வரிசையா அடுத்தடுத்து, 'ரிடையர்டு' ஆகப்போறா... இவா எல்லாம், 'ரிடையர்டு' ஆகறதால, நான்கு இணை இயக்குனர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கப் போறது ஓய்...'' எனக் கூறிவிட்டு, குப்பண்ணா கிளம்ப, மற்றவர்களும் நடையைக் கட்டினர்.


