/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ராஜாஜிக்கு மணி மண்டபம் அமைக்க கோரிக்கை : தொரப்பள்ளி மக்கள் பெரும் எதிர்பார்ப்புராஜாஜிக்கு மணி மண்டபம் அமைக்க கோரிக்கை : தொரப்பள்ளி மக்கள் பெரும் எதிர்பார்ப்பு
ராஜாஜிக்கு மணி மண்டபம் அமைக்க கோரிக்கை : தொரப்பள்ளி மக்கள் பெரும் எதிர்பார்ப்பு
ராஜாஜிக்கு மணி மண்டபம் அமைக்க கோரிக்கை : தொரப்பள்ளி மக்கள் பெரும் எதிர்பார்ப்பு
ராஜாஜிக்கு மணி மண்டபம் அமைக்க கோரிக்கை : தொரப்பள்ளி மக்கள் பெரும் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 24, 2011 12:57 AM
ஓசூர்: ஓசூர் அருகே ராஜாஜி பிறந்த ஊரில் ராஜாஜிக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
ஓசூர் அடுத்த தொரப்பள்ளி கிராமத்தில் பிறந்து சுதந்திரத்துக்காக போராடிய ராஜாஜி முதல்வர், கவர்னர், இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளை வகித்தார். ராஜாஜி கடந்த 1878ம் ஆண்டு ஓசூர் அடுத்த தொரப்பள்ளியில் ஓட்டு வீட்டில் பிறந்தார். ஓசூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வியை முடித்த அவர், பின் பெங்களூருவில் உயர்கல்வி படித்து சென்னை மாநில கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தார். காந்தியடிகளின் கொள்கையில் மிகுந்த ஈடுப்பாடு கொண்டு அவருடன் பல்வேறு சுதந்திர போராட்டங்களில் பங்கேற்றார். ஆரம்பத்தில் சேலம் நகராட்சி கவுன்சிலராக தன்னுடைய அரசியல் வாழ்க்கையை துவங்கிய ராஜாஜி அதன்பின் படிபடியாக உயர்ந்து நகராட்சி தலைவர், பிரதம அமைச்சர், முதல்வர், மத்திய அமைச்சர், கவர்னர் உள்ளிட்ட பதவிகளில் அலங்கரித்தார். சுதந்திர இந்தியாவில் முதல் கவர்னர் ஜெனரலாக பதவியேற்றார். பாரத் ரத்னா உள்ளிட்ட பல்வேறு உயர் விருதுகளை பெற்றுள்ளார். இவரை பெருமைப்படுத்தும் வகையில் 1978ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் ஓசூர் அடுத்த தொரப்பள்ளியில் ராஜாஜி பிறந்த வீட்டை அரசுடமையாக்கி நினைவு இல்லமாக மாற்றினார்.
இந்த நினைவு இல்லத்தில் ராஜாஜி பிறந்து வளர்ந்த விதம், அவர் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் இந்திய தலைவர்களுடன் அவர் பங்கேற்ற வரலாற்று சிறப்பு மிக்க பல்வேறு அரிய புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
பள்ளி மாணவர்கள், சுற்றுலா பயணிகள் தினசரி இந்த ராஜாஜி நினைவு இல்லத்துக்கு வந்து சுற்றி பார்த்து செல்கின்றனர். கடந்த தி.மு.க., ஆட்சிக்கு முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் முதல்வராக இருந்த ஜெயலலிதா ராஜாஜியை மேலும் பெருமைப்படுத்தும் வகையில் ஓசூர் அருகே மோரனப்பள்ளியில் ஒரு ஏக்கர் நிலம் தேர்வு செய்து ராஜாஜிக்கு மணி மண்டபம் கட்ட உத்தரவிட்டார். அதன்பின் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் நிலம் தேர்வு செய்ததோடு புறக்கணிக்கப்பட்டது. இதனால், தொரப்பள்ளி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அதிருப்தியடைந்தனர். ராஜாஜி பிறந்த ஊருக்கு எந்த அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கப்படவில்லை. குறிப்பாக சாலை, பஸ் வசதி மற்றும் ஆற்றுப்பாலம் என எதுவும் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். இதனால், இந்தியாவின் உயர்ந்த பதவியில் இருந்து நாட்டிற்கு சேவை ஆற்றிய ஒரு தலைவரின் ஊர் இன்றும் அடிப்படை வசதிகளை பெறாமல் இன்னும் குக்கிராமமாகவே செயல்படுகிறது. சுற்றுலா பயணிகள், தொரப்பள்ளியில் உள்ள ராஜாஜி நினைவுக்கு இடத்துக்கு வந்து செல்லமுடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தற்போது அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளதால், கடந்த ஆட்சியில் தொரப்பள்ளியில் புறக்கணிக்கப்பட்ட ராஜாஜி மண்டபம் திட்டத்தை அமைத்து அப்பகுதி பொதுமக்களின் முக்கிய அடிப்படை வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு கிராம மக்களிடம் எழுந்துள்ளது.