Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ஐ.ஏ.எஸ்., அதிகாரி போல் நடித்து போலீசிடம் சிக்கிய வாலிபர்

ஐ.ஏ.எஸ்., அதிகாரி போல் நடித்து போலீசிடம் சிக்கிய வாலிபர்

ஐ.ஏ.எஸ்., அதிகாரி போல் நடித்து போலீசிடம் சிக்கிய வாலிபர்

ஐ.ஏ.எஸ்., அதிகாரி போல் நடித்து போலீசிடம் சிக்கிய வாலிபர்

ADDED : செப் 08, 2011 12:06 AM


Google News

ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூர் அருகே, பொறியியல் கல்லூரியில், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக நடித்து, அனைவரையும் ஏமாற்றிய, கல்லூரி மாணவரையும், அவருக்கு உதவிய அவரது மாமாவையும்,போலீசார் கைது செய்தனர்.ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நெமிலி கிராமத்தில், ராஜிவ்காந்தி பொறியியல் கல்லூரி உள்ளது.

இக்கல்லூரிக்கு, நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு, 19 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், 42 வயது மதிக்கத்தக்க நபருடன் வந்தார்.நேராக, கல்லூரி அலுவலகத்திற்கு சென்ற அந்த வாலிபர், அங்கிருந்த ஊழியர்களிடம், பொறியியல் கல்லூரி தர நிர்ணயக்குழுத் தலைவர் என, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அதற்கு அத்தாட்சியாக, கடிதம் ஒன்றையும், அவர்களிடம் காண்பித்தார். கடிதமிருந்த கவரின் மேற்பகுதியில், ஜானகிராமன் ஐ.ஏ.எஸ்., தர நிர்ணயக்குழுத் தலைவர், எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.கவருக்குள் இருந்த கடிதத்தில், கல்லூரிகளை தர நிர்ணயம் செய்வதற்காக, கல்லூரிகளை ஆய்வு செய்யும்படி, தமிழக அரசு ஜானகிராமன் ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு, கடிதம் அனுப்பியிருந்ததுபோல் தயாரிக்கப்பட்ட போலி கடிதம் இருந்தது.

அதை உண்மைக் கடிதம் என நம்பிய, கல்லூரி ஊழியர்கள், முதல்வர் மற்றும் பேராசிரியர்கள், அவரை பவ்யமாக வரவேற்று, 'ஏசி' அறையில் அமர வைத்தனர். அவர், கல்லூரிஆவணங்கள், கணக்கு புத்தகங்கள் ஆகியவற்றை வரவழைத்து பார்வையிட்டார். பின், வகுப்புகளைப் பார்வையிட வேண்டும் என்று கூறவே, அவரை, ஊழியர்கள் ஒவ்வொரு வகுப்பறையாக அழைத்து சென்றனர்.



அந்த வாலிபர், மாணவர்களிடம்,'உங்கள் குறைகள் என்ன?' எனக் கேட்டுள்ளார். மாணவர்களும்,'மெஸ் வசதி சரியில்லை. பஸ் வசதி இல்லை' என, குறைகளை அடுக்கியுள்ளனர். அவற்றை கேட்ட வாலிபர், அனைத்து குறைகளையும் தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.பின், அந்த வாலிபர், கல்லூரி ஊழியர்களிடம், 'கல்லூரி தலைமை அலுவலகம் எங்குள்ளது?' எனக் கேட்டுள்ளார். அவர்கள், சென்னை அண்ணாநகரில் உள்ளது எனக் கூறி, முகவரியை கொடுத்துள்ளனர்.கல்லூரியில் வழங்கிய மதிய உணவை சாப்பிட்டுவிட்டு, வாலிபர் சென்னை புறப்பட்டு சென்றார். அவருக்கு துணையாக, கல்லூரி முதல்வர் ஆரோக்கியம், பேராசிரியர் ஒருவரை உடன் அனுப்பியுள்ளார். அவரது உதவியுடன் அந்த வாலிபரும், உடன் வந்த நபரும், கல்லூரியின் தலைமை அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு அவர்களை, கல்லூரி தாளாளரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான மேத்யூ வரவேற்றார்.அவருக்கு வாலிபரைக் கண்டதும் சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் சில கேள்விகளை கேட்டார். அவர் தடுமாறினார். உடனே சென்னை அண்ணாநகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.போலீசார் விரைந்து வந்து விசாரித்தபோது, அந்த வாலிபர் ஐ.ஏ.எஸ்.,அதிகாரி போல் நடித்தது தெரிய வந்தது. அவருக்கு துணையாக அவரது மாமா முருகன், 42, வந்தது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்து, ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பினர். அவரிடம் டி.எஸ்.பி.,கஜேந்திரகுமார் விசாரணை நடத்தினார். அப்போது ருசிகர தகவல்கள் கிடைத்தன.இது குறித்து, டி.எஸ்.பி., கஜேந்திரகுமார் கூறியதாவது:ஐ.ஏ.எஸ்., அதிகாரி போல் நடித்த வாலிபரின் பெயர் ஜானகிராமன், 19. அவரது தந்தை பெயர் அண்ணாமலை. சொந்த ஊர் கடலூர் மாவட்டம் மஞ்சகுப்பம். அண்ணாமலை அங்குள்ள நகராட்சி அலுவலகத்தில், டிராக்டர் டிரைவராகப் பணிபுரிகிறார்.ஜானகிராமன் புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில், பி.சி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வருகிறார். ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ்காந்தி பொறியியல் கல்லூரி மாணவி ஒருவர், மஞ்சகுப்பத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அவர் மீது ஜானகிராமன் காதல் கொண்டார். அவரது காதலை அந்தப் பெண் ஏற்றுக் கொள்ளவில்லை.அந்தப் பெண்ணை காண்பதற்காகவும், அந்தப் பெண்ணுக்கு தன் மீது மரியாதை உண்டாக வேண்டும் என்பதற்காகவும், ஐ.ஏ.எஸ்., அதிகாரி போல் நடிக்க முடிவு செய்துள்ளார். அதற்காக, போலிக் கடிதம் தயாரித்துக் கொண்டு, கல்லூரிக்கு சென்றுள்ளார். தனது மாமாவை உதவிக்கு அழைத்து சென்றுள்ளார்.கல்லூரியில் ஒவ்வொரு வகுப்பாக சென்று, தான் காதலிக்கும் பெண்ணை பார்த்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு, ஜானகிராமன் குறித்த தகவல் எதுவும் தெரியாததால், பேசாமல் இருந்துள்ளார். ஜானகிராமன், முருகன் ஆகியோர் மீது மோசடி, ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு கஜேந்திரகுமார் தெரிவித்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us