ADDED : ஆக 15, 2011 10:26 AM

ரமலான் நோன்பு நோற்க இருக்கும் இவ்வேளையில், தர்மம் செய்வது மிக மிக அவசியம்.
தர்மத்தின் பெருமையைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள். அதைக் கேட்போமா!
வசதி இல்லாத ஒருவன் மனம் நொந்தவனாக உங்களிடம் ஏதேனும் கேட்டால் அவனை விரட்டாதீர்கள். கொஞ்சமாவது கொடுத்து அனுப்புங்கள் அல்லது இனிய வார்த்தைகளால் பதில் சொல்லுங்கள். அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த செல்வத்தை நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று சோதிப்பதற்காக சில சமயங்களில் வானவர்களை உங்களிடம் அனுப்புகிறான்.
ஒருவர் தர்மம் செய்கிறார் என்றால் அவர் அல்லாஹ்வின் மீது கொண்ட நல்லெண்ணத்தின் காரணமே ஆகும். ஒருவர் தர்மம் செய்வதில் கஞ்சத்தனம் செய்கிறார் என்றால் அவர் அல்லாஹ்வின் மீது கொண்ட நம்பிக்கை கொள்ளாத தவறான எண்ணத்தின் காரணமே ஆகும்.
கஞ்சத்தனத்தைப் பற்றி பயப்படுங்கள். ஏனென்றால் உங்கள் முன்னோர்கள் கஞ்சத்தனத்தின் காரணமாகத்தான் அழிந்து போனார்கள். தர்மம் கொடுப்பதால் இருக்கும் செல்வம் அழிந்து போவதில்லை.
ஒருவர் தர்மம் செய்ய தனது கரத்தை நீட்டும்போது, வாங்குவோரின் கரத்தில் விழுவதற்கு முன்பே அல்லாஹ்வின் கரத்தில் விழுந்து விடுகிறது. இறைவன் அதை ஒப்புக் கொண்டு, கொடுத்தவருக்கு பாவமன்னிப்பை அளிக்கிறான்.
ஒவ்வொரு நாளும் அதிகாலையில் இரண்டு வானவர்கள் இறங்கி அவர்களில் ஒருவர், 'இறைவா! உன் பாதையில் செலவு செய்வோருக்கு உரிய பரக்கத்தை அருள்வாயாக,'' என்றும், மற்றொரு வானவர், ''செலவு செய்யாதவருக்கு அழிவைக் கொடுப்பாயாக,'' என்றும் இறைவனிடம் பிரார்த்தனை புரிகின்றனர்.
தர்மத்திலேயே மிகவும் சிறந்தது ண்ணீர் கொடுப்பது தான். தர்மம் செய்யும்போது, வருகின்ற துன்பமும் துயரமும் அல்லாஹ்வின் கருணையின் அறிகுறியாகும். எண்ணங்களைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன. தனது வாழ்நாளெல்லாம் தர்மம் செய்யாத கஞ்சனாக இருந்துவிட்டு, மரணவேளையில் கொடைவள்ளலாக மாறும் மனிதனை பார்த்து இறைவன் கோபமடைகிறான்.
தான் பாவியாக இருந்தாலும், தர்மம் செய்கின்ற ஒரு கொடையாளி அல்லாஹ்வின் தோழனாவான். தொழுகையாளியாக இருந்து கொண்டு தர்மம் செய்யாத ஒரு கஞ்சன் அல்லாஹ்வின் பாவியாவான். மனித உடம்பின் அமைப்பில் 360 எலும்புகள் இணையப் பெற்றுள்ளன. ஒவ்வொரு இணைப்புக்கும் தினமும் தர்மம் செய்வது மனிதனுக்கு அவசியமான செயலாகும். நீங்கள் தர்மம் செய்தால் அதனை உங்கள் பெற்றோருக்காக கொடுங்கள். உங்கள் பெற்றோருக்காக கிடைக்கும் நன்மை உங்களுக்கும் கிடைக்கும்.
அனாதைக் குழந்தைகளின் தலையை இரக்கத்துடன் தடவுங்கள். ஏழை, எளியவர்களுக்கு உணவு கொடுங்கள். கருணை உள்ளம் கொண்டவன் தங்கும் இடம் சொர்க்கமாகும். கஞ்சத்தனம் கொண்டவன் நரகத்தில் தங்குவான். கடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை ஆகிய மூன்றும் நம்மை நாசப்படுத்திவிடும். பணக்காரனிடம் இருக்கும் கஞ்சத்தனமும், ஏழைகளிடம் தற்பெருமையும், மக்கள் தலைவர்களிடம் அநியாயமும், முதியோர்களிடம் உலக ஆசையும்
இருப்பதை அல்லாஹ் வெறுக்கிறான். கஞ்சன் அல்லாஹ்வை விட்டு தூரத்தில் இருக்கிறான். எனவே, விருப்பத்துடன் தர்மம் செய்யுங்கள். வெறுப்புடன் தர்மம் செய்யாதீர்கள்.