சிலை திறப்புவிழா என்ற பெயரில் நடந்த "காமெடி' : தங்கபாலு புறக்கணிப்பு
சிலை திறப்புவிழா என்ற பெயரில் நடந்த "காமெடி' : தங்கபாலு புறக்கணிப்பு
சிலை திறப்புவிழா என்ற பெயரில் நடந்த "காமெடி' : தங்கபாலு புறக்கணிப்பு

திருச்சி : கோஷ்டிப் பூசல் காரணமாக, திருச்சியில் நடந்த, முன்னாள் பிரதமர் நேரு சிலை திறப்புவிழாவை, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உட்பட, முக்கிய நிர்வாகிகள் புறக்கணித்தனர்.
திருச்சி மாநகராட்சி, பொன்மலை கோட்டத்துக்கு உட்பட, வில்லியம்ஸ் ரோடு-பென்வெல்ஸ் ரோடு சந்திப்பில், முன்னாள் பிரதமர் நேருவுக்கு சிலை அமைக்க, ஐ.என்.டி.யூ.சி., தொழிற்சங்க தலைவர் கல்யாணராமன் அனுமதி பெற்றார். மூன்று ஆண்டுகளாக சிலை தயாராக இருந்த போதும், சிலை வைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்தது. இது, காங்கிரசார் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, ஜூன் 14ல், நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இதையடுத்து, அன்று இரவு, நேரு சிலை பீடமேற்றப்பட்டது. நேரு சிலை திறப்புவிழா நேற்று மாலை நடந்தது. இதில், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு சிலையை திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டது. தங்கபாலுவை வரவேற்று விளம்பர பேனர் வைக்கப்பட்டது. சிலை அருகே தங்கபாலுவை வரவேற்று, மேயர் சுஜாதா படம் இடம்பெற்ற, தட்டி திடீரென மாயமானது. மாலை 4 மணி விழாவுக்காக மேடை அமைக்கப்பட்டு, சேர்கள் போடப்பட்டிருந்தது. 5.30 மணி வரை தலைவர்களும் வரவில்லை. கூட்டமும் கூடவில்லை. கடைசி வரை தங்கபாலு வரவில்லை. தவிர, சிதம்பரம் ஆதரவாளர் மேயர் சுஜாதா, இளங்கோவன் ஆதரவாளர் கோட்டத்தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ், முன்னாள் எம்.பி., அடைக்கலராஜ், வாழப்பாடி ராமமூர்த்தி மகன் ராம சுகுந்தன் ஆகியோர் உட்பட, முக்கிய நிர்வாகிகள் அனைவரும் விழாவை புறக்கணித்தனர். இறுதியாக, தெற்கு மாவட்ட தலைவர் சுபசோமு சிலையை திறந்து வைத்தார். காங்கிரசார் ஒவ்வொருவரும் பேசி முடித்த பின், 'ஜெய்ஹிந்த்' என்று உச்சரிப்பர். சுபசோமு அதையும் உச்சரிக்கவில்லை. தேசியகீதமும் பாடவில்லை. நன்றி கூட கூறவில்லை. அருகே உள்ள சேவா சங்கம் பள்ளி மாணவியர், 30 பேருக்கு தலா, 2 இலவச நோட்டு மட்டும் வழங்கப்பட்டது. மீதமிருந்த நோட்டுகளை கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.


