மெல்போர்ன் நகரில் விஷமத்தனம் : உலக இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சி
மெல்போர்ன் நகரில் விஷமத்தனம் : உலக இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சி
மெல்போர்ன் நகரில் விஷமத்தனம் : உலக இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சி
ADDED : செப் 19, 2011 11:38 PM

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடக்க உள்ள கலாசார விழாவில், இந்துக்களின் தெய்வமான விநாயகரை இழிவுபடுத்தும் விதத்தில், ஒரு நாடகம் இடம்பெற உள்ளதாக வெளியான தகவல்கள், உலகளவில் இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத் தலைநகர் மெல்போர்ன் நகரில், அக்டோபர் 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை, உலக கலை மற்றும் கலாசார மாநாட்டின் ஐந்தாவது ஆண்டு விழா நடக்க உள்ளது. இதில், பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. அவற்றில் ஒன்றாக, ஆஸ்திரேலியாவின் 'பேக் டு பேக் தியேட்டர்' என்ற நாடக அமைப்பு, 'தி கணேஷ் வெர்சஸ் தி தேர்டு ரெய்க்' என்ற ஒரு நாடகத்தை அரங்கேற்ற உள்ளது. இதுகுறித்து விழாவிற்கான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இந்துக்களின் புனிதச் சின்னமான,'ஸ்வஸ்திக்' அடையாளத்தை ஜெர்மனியின் நாஜிக்கள் திருடி, தங்கள் நோக்கத்திற்காகப் பயன்படுத்தினர். அந்த அடையாளத்தை இழக்க விரும்பாத இந்துக்களின் தெய்வமான விநாயகர், ஹிட்லரை நேரில் சந்தித்து விவாதத்தில் ஈடுபடுகிறார். இந்தக் காட்சிகள் மூலம் வரலாற்றின் முக்கிய சம்பவங்கள் நினைவூட்டப்படுகின்றன' என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாடகம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள விளம்பரங்களிலும், ஹிட்லரைப் போல் தோற்றம் உடைய ஒருவர் முன், வேட்டியை பஞ்சகச்சமாக கட்டிக் கொண்டு, யானைத் தலையை அணிந்த ஒரு குண்டான மனிதர் நிற்பது போல காட்டப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பும், விளம்பரமும், உலகளவில் இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள இந்து ஆர்வலர் ராஜன் சேத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,'விநாயகர் கோவில்களிலும், வீடுகளிலும் வழிபடப்படுபவர். நாடகங்களில் பலரும் பார்த்து சிரிப்பதற்கான கதாபாத்திரம் அல்ல. அவர் நாஜிக்களால் சித்ரவதைக்குள்ளாவது, அவர்களுடன் விவாதிப்பது போன்ற காட்சிகள் சம்பந்தமில்லாதவை. இந்துக்களின் மனதைப் புண்படுத்துபவை' என்று தெரிவித்துள்ளார்.
'பேக் டு பேக் தியேட்டர்' அமைப்பின் சிறப்புத் தயாரிப்பாளர் அலைஸ் நாஷ் கூறியுள்ள பதிலில்,'அந்நாடகத்தில் இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் எவ்விதக் காட்சிகளும் இடம் பெறவில்லை' என்று குறிப்பிட்டுள்ளார். ஆஸ்திரேலியத் தலைநகர் சிட்னியைச் சேர்ந்த ஒரு ஆடை வடிவமைப்பு நிறுவனம், சமீபத்தில், பெண்களின் உள்ளாடையில் இந்துக்களின் தெய்வமான லட்சுமியின் படத்தை அச்சிட்டுப் பின், அதற்கு எதிர்ப்பு எழுந்தவுடன் மன்னிப்புக் கேட்டது குறிப்பிடத்தக்கது.


