ஸ்பெக்ட்ரம் வழக்கு குறித்து விசாரிக்கும் ஜே.பி.சி., கூட்டத்தில்...கடும் அமளி
ஸ்பெக்ட்ரம் வழக்கு குறித்து விசாரிக்கும் ஜே.பி.சி., கூட்டத்தில்...கடும் அமளி
ஸ்பெக்ட்ரம் வழக்கு குறித்து விசாரிக்கும் ஜே.பி.சி., கூட்டத்தில்...கடும் அமளி

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும், பார்லிமென்டின் கூட்டுக்குழு(ஜே.பி.சி.,) கூட்டத்தில் கடும் அமளி ஏற்பட்டது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து மத்திய நிதியமைச்சகம் சார்பில், பிரதமர் அலுவலகத்திற்கு ஒரு கடிதம் எழுதப்பட்டிருந்தது. மிகவும் ரகசியமான அந்த கடிதத்தில், அப்போதைய நிதியமைச்சர் நினைத்திருந்தால் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டை தடுத்திருக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த கடிதம் பெறப்பட்டு, தற்போது கோர்ட்டிலும் சுப்ரமணியசாமி தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, இந்த கடித விவகாரத்தால் மத்திய அமைச்சர்களான சிதம்பரத்திற்கும், பிரணாப் முகர்ஜிக்கும் இடையில் பெரும் புகைச்சல் ஏற்பட்டு, காங்கிரஸ் தலைவர் சோனியா தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த பிரச்னையை பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் பெரிதாக்கியுள்ளதால், மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இந்த சூழ்நிலையில் இந்த கடித விவகாரம், ஜே.பி.சி., கூட்டத்திலும் பெரும் பிரச்னையை கிளப்பியது. ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த, பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது.
பி.சி.சாக்கோ தலைமை யிலான இக்குழுவில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான அனைத்து விவரங்களையும் வரவழைத்து ஆராய்ந்து, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரித்தும் வருகிறது. நேற்று இந்த கூட்டம் பார்லிமென்டின் அனெக்ஸ் கட்டட அரங்கில் நடைபெற்றது.ஏற்கனவே திட்டமிட்டு இருந்தபடி நேற்றைய கூட்டத்தில், தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலர் நிருபேந்திர மிஸ்ரா விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், கூட்டம் துவங்கியதுமே,எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவருமே ஒன்றிணைந்தனர்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் எல்லாமே கூட்டுக்குழுவின் முன்பாக சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டிருக்கும் இந்த மிக முக்கிய கடிதம் மட்டும், நிதியமைச்சகம் சார்பில் கூட்டுக்குழு முன்பாக சமர்ப்பிக்கப்படவில்லை. முக்கியமான இந்த கடிதம் மட்டும் ரகசியமாக மறைக்கப்பட்டதேன்? தற்செயலாக நடந்ததா அல்லது வேண்டுமென்றே சமர்ப்பிக்கப்படாமல் உள்ளதா என்று சரமாரியாக கேள்விகள் எழுப்பப்பட்டன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.,யான சீத்தாராம் யெச்சூரிதான், இந்த கேள்விகளை ஆரம்பித்து வைத்தார். கூட்டுக்குழு என்பது பார்லிமென்டின் அதிகாரத்திற்கு உட்பட்ட ஒன்று. அப்படியிருக்கும்போது, கூட்டுக்குழுவுக்கு தரும் ஆவணங்களில் சிலவற்றை மட்டும் நிதியமைச்சகம் தராமல் இருந்தால் அது முழுக்க முழுக்க உரிமை மீறல் செயலாகும். தற்செயலாக இந்த கடிதம் விடுபட்டு இருந்தாலுமே கூட, அது மிகவும் சீரியசான விஷயம் என்று யெச்சூரி கூறினார்.
பா.ஜ.,வின் மூத்த எம்.பி.,யான எஸ்.எஸ்.அலுவாலியா பேசுகையில், 'கூட்டுக்குழுவின் விசாரணையை அலட்சியப்படுத்தும் வகையில் இந்த செயல் இருக்குமோ என தெரிகிறது. இந்த கடிதம் ஏன் விடுபட்டது என்பது பற்றிய முழு விவரங்களும் தெரிந்தாக வேண்டும். எனவே இதுபற்றி விசாரித்து அறியும் வகையில், நிதியமைச்சக செயலரை நேரில் அழைக்க வேண்டும்' என்று கூறினார்.
கூட்டத்தில் பேசிய பிற எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். குறிப்பிட்ட கடிதம் மட்டும் மறைக்கப்பட்டிருப்பதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன என்பது பற்றி அனைவருக்கும் தெரிந்தாக வேண்டுமென்று வாதிட்டனர். இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய தலைவர் சாக்கோ,'நிதியமைச்சக செயலரை அழைப்பது என்பது கடினம். காரணம் இதுபோன்ற ஒரு சிறிய கடிதம் விடுபட்டுப்போனதற்காக போய் அவரை அழைப்பதா' என்று கூற அனைத்து உறுப்பினர்களும் கடுப்பாகிவிட்டனர்.
சாக்கோவின் பதிலால் சமாதானம் அடையாத எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இது சாதாரண கடிதம் அல்ல என்று வாதிட்டனர். செயலரை இல்லாவிட்டாலும்கூட நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளையாவது அழைத்து இதுபற்றி விளக்கம் கேட்க வேண்டுமென்று அனைவரும் வலியுறுத்தினர். இதையடுத்து பேசிய சாக்கோ, 'நிதியமைச்சகத்தின் கடிதம் குறித்து உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று நிதித்துறை செயலர் ஆர்.எஸ்.குஜ்ராலை, அக்டோபர் 13ம் தேதி நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றார்.
சிதம்பரமும் ஆஜராவாரா?: ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக பார்லிமென்டின் கூட்டுக்குழு விசாரணை நடத்தி வரும் நிலையில், இவ்விவகாரத்தில் உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் பெயர் பெரிதாக அடிபட்டும் வருகிறது. இந்நிலையில், கூட்டுக்குழு விசாரணை முன்பாக சிதம்பரமும் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடைய, 1998ம் ஆண்டிற்கு பிறகு இருந்த முன்னாள் நிதியமைச்சர்கள்,நிதித்துறை செயலர்கள் அனைவரையுமே சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜர்படுத்த வேண்டுமென பார்லிமென்ட் கூட்டுக்குழு சார்பில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த வரிசையில் சிதம்பரமும் வருவார் என்பதால், இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று கூட்டுக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது டில்லி நிருபர் -