Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தி.மு.க.,வினரின் "சரித்திரத்தை' எழுதும் போலீசார்: உயரதிகாரிகளுக்கு மேலிடம் அதிரடி உத்தரவு

தி.மு.க.,வினரின் "சரித்திரத்தை' எழுதும் போலீசார்: உயரதிகாரிகளுக்கு மேலிடம் அதிரடி உத்தரவு

தி.மு.க.,வினரின் "சரித்திரத்தை' எழுதும் போலீசார்: உயரதிகாரிகளுக்கு மேலிடம் அதிரடி உத்தரவு

தி.மு.க.,வினரின் "சரித்திரத்தை' எழுதும் போலீசார்: உயரதிகாரிகளுக்கு மேலிடம் அதிரடி உத்தரவு

ADDED : செப் 18, 2011 01:09 AM


Google News

கோவை: நில அபகரிப்பு வழக்கில் தொடர்புடைய மாஜி அமைச்சர்கள், மாஜி எம்.

எல்.ஏ.,க்கள், தி.மு.க.,பிரமுகர்கள் 'சரித்திரத்தில்' இடம்பெற்றுவிட்டனர். இவர்களை பற்றிய 'சரித்திரப் பதிவேடு' (ஹிஸ்ட்ரி ஷீட்) எழுதி, ரகசியமாக கண்காணிக்க போலீஸ் உயரதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



நில அபகரிப்பு தொடர்பாக, கோவை மாவட்டத்தில் 383, ஈரோட்டில் 859, நீலகிரியில் 121, திருப்பூரில் 479, சேலத்தில் 994, நாமக்கல்லில் 1174, தர்மபுரியில் 694 மற்றும் கிருஷ்ணகிரியில் 845 புகார்கள் போலீசாரிடம் அளிக்கப்பட்டுள்ளன. எட்டு மாவட்டங்களிலும் மொத்தம் 1,202 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதாக போலீசார் மதிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக, நில அபகரிப்புக்கு எதிரான விசாரணைப்பிரிவு போலீசார் 196 வழக்குகள் பதிவு செய்து தி.மு.க., மாஜி அமைச்சர்கள், மாஜி எம்.எல்.ஏ.,கள் உள்ளிட்ட 177 பேரை கைது செய்துள்ளனர்; 169 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது. அடுத்த ஓரிரு மாதங்களில் மேலும் 500 பேர் நில அபகரிப்பு வழக்குகளில் கைதாகும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மாஜி அமைச்சரும், கோவை புறநகர் மாவட்ட தி.மு.க., செயலாளருமான பழனிச்சாமி, தன் மீதான நில மோசடி வழக்கில் கைதாகாமல் தவிர்க்க ஐகோர்ட்டில் முன் ஜாமின் பெற்றுள்ளார். எனினும், கோர்ட் உத்தரவுப்படி அவிநாசிபாளையம் போலீசில் இன்னமும் ஆஜராகவில்லை.



'சரித்திரத்தில்' இடம்: நில அபகரிப்பில் ஈடுபட்டோருக்கும், ரவுடியிசத்தில் ஈடுபட்டோருக்கும் 'ஹிஸ்ட்ரி ஷீட்' (சரித்திர பதிவேடு) தயாரிக்குமாறு நில அபகரிப்புக்கு எதிரான விசாரணைப் பிரிவு போலீசாருக்கு மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, நில அபகரிப்பு வழக்குகளில் தொடர்புடைய கோவை மாவட்ட தி.மு.க., துணைச் செயலாளர் ஆனந்தன்(38), சொக்கம்புதூரைச் சேர்ந்த நந்தகோபால்(49), மேட்டுப்பாளையம், கோ- ஆபரேட்டிவ் காலனியைச் சேர்ந்த, மாஜி எம்.எல்.ஏ., அருண்குமார்(49), திருப்பூர் மாவட்டம், செந்தில் நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் புவனேந்திரன்(38), ஈரோட்டைச் சேர்ந்த தி.மு.க., மாஜி அமைச்சர் என்.கே.கே.பி., ராஜா, ஈரோடு மாவட்ட தி.மு.க., துணைச் செயலாளர் விஸ்வநாதன், திருப்பூரைச் சேர்ந்த நாகராஜ்(40), நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தொகுதி மாஜி எம்.எல்.ஏ., ராமசாமி. தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நிர்மலா, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ஜான்பாஷா, சேலம் மாவட்டம், பாப்பாரப் பட்டியைச் சேர்ந்த சுரேஷ், ஓமலூரைச் சேர்ந்த தி.மு.க., நிர்வாகி சின்னராஜ், மகுடஞ்சாவடியைச் சேர்ந்த தி.மு.க., பிரமுகர் பரமேஸ்வரன், ஓமலூரைச் சேர்ந்த சிவலிங்கம் உள்ளிட்ட 60 பேருக்கு 'ஹிஸ்ட்ரி ஷீட்' (சரித்திர பதிவேடு) திறந்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதே போன்று, சட்டம் - ஒழுங்குக்கு கேடு விளைவிக்கும் வகையில் தொடர்ச்சியாக ரவுடியிசத்தில் ஈடுபட்ட 294 பேருக்கும் சரித்திரப்பதிவேடு திறக்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து, நில அபகரிப்புக்கு எதிரான விசாரணைப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில்,' குற்றவாளிகளை பற்றிய சரித்திர பதிவேடுகள் மூன்று விதமாக தயாரிக்கப்பட்டுள்ளன. ஒன்று முதல் ஐந்து கோடி ரூபாய் வரையிலான நிலத்தை அபகரித்தவர்களுக்கான பதிவேடு 'ஏ பிளஸ்' என்றும், ஐந்து கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய நிலத்தை அபகரித்தவர்களுக்கான பதிவேடு 'ஏ பிளஸ், பிளஸ்' என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, ரவுடித்தன செயலில் ஈடுபட்டோருக்கு தனியாகவும் சரித்திர பதிவேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள நபர்கள் ரகசியமாக கண்காணிக்கப்படுவர்' என்றார்.



அதென்ன சரித்திர பதிவேடு? பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அபாயகரமான செயலிலும், அத்துமீறிய செயலிலும் ஈடுபடும் நபர்களுக்கு போலீசார் சரித்திரப்பதிவேடு எழுதுவது வழக்கம். இப்பதிவேட்டில், குற்றம்சாட்டப்பட்ட நபரின் பெயர், முகவரி, செய்யும் தொழில், குற்ற வகை, அவரால் ஏற்பட்ட பாதிப்புகள் என சகலவிதமான விபரங்களும் இடம்பெற்றிருக்கும். அன்றாடம் போலீசார் பகல், இரவில் ரோந்து செல்லும்போது, அவர்கள் வசம் 'சரித்திர பதிவேட்டில்' இடம்பெற்றுள்ளோரின் விபரங்கள் அளிக்கப்பட்டு கண்காணிக்கப்படுவர். சம்பந்தப்பட்ட நபர்கள் வீட்டில் இருக்கிறார்களா, அவர்களால் மக்களுக்கு ஏதும் தொல்லைகள் ஏற்பட்டுள்ளதா, யாருடன் தொடர்பு வைத்துள்ளார்கள், அவர்களது வீட்டுக்கு வந்து செல்லும் நபர்கள் யார் என போலீசார் நிழலாக பின்தொடர்ந்து கண்காணித்து ரகசிய அறிக்கை அளிப்பர். சரித்திர பதிவேட்டில் இடம்பெற்றுள்ள நபர் சந்தேகம் அளிக்கக்கூடிய வகையில் செயல்பட்டால் உடனடியாக பிடித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வர். இப்படிப்பட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிய பதிவேட்டில் தி.மு.க., மாஜி அமைச்சர்கள், மாஜி எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோரும் இடம்பிடித்துவிட்டனர். தற்போது இவர்களில் பலரும் சிறையில் உள்ளனர்; ஜாமினில் சிலர் வெளிவந்துள்ளனர்.



திருப்பூர் முதலிடம்: நில அபகரிப்பில் திருப்பூர் மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. கோவையில் 249 கோடி ரூபாய், ஈரோட்டில் 123 கோடி ரூபாய், நீலகிரியில் 18 கோடி ரூபாய், திருப்பூரில் 294 கோடி ரூபாய், சேலத்தில் 178 கோடி ரூபாய், நாமக்கல்லில் 188 கோடி ரூபாய், தர்மபுரியில் 48 கோடி ரூபாய், கிருஷ்ணகிரியில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் அத்துமீறியும், மிரட்டியும் அரசியல்வாதிகளால் அபகரிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்த விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us