Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/விரைவில் தேசிய நானோ தொழில்நுட்ப கொள்கை : ஆராய்ச்சிக்கு ரூ. 10 ஆயிரம் கோடி முதலீடு

விரைவில் தேசிய நானோ தொழில்நுட்ப கொள்கை : ஆராய்ச்சிக்கு ரூ. 10 ஆயிரம் கோடி முதலீடு

விரைவில் தேசிய நானோ தொழில்நுட்ப கொள்கை : ஆராய்ச்சிக்கு ரூ. 10 ஆயிரம் கோடி முதலீடு

விரைவில் தேசிய நானோ தொழில்நுட்ப கொள்கை : ஆராய்ச்சிக்கு ரூ. 10 ஆயிரம் கோடி முதலீடு

ADDED : ஆக 25, 2011 11:56 PM


Google News

சென்னை : ''தேசிய நானோ தொழில்நுட்பக் கொள்கை விரைவில் உருவாக்கப்படும்,'' என, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைமை கட்டுப்பாட்டு அதிகாரி செல்வமூர்த்தி கூறினார்.



சென்னை பல்கலைக்கழக நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில் நடக்கும் மூன்று நாள் தேசிய மாநாட்டை நேற்று துவக்கி வைத்து அவர் பேசியதாவது: நானோ தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொண்டு, தேசிய கொள்கை வடிவமைக்கப்பட்டு வருகிறது.

நானோ தொழில்நுட்பத்தை வேளாண்மையில் பயன்படுத்தினால், விரைவில் இரண்டாம் பசுமை புரட்சியை எட்டிவிட முடியும்.



உணவு தானியங்களை சேமித்து வைக்கும்போது, 25 சதவீதம் வீணாகிறது. நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, உணவு தானியங்களை முறையாக பேக்கிங் செய்தால், வீணாவது தடுக்கப்படும். மேலும், இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மாசடைந்த தண்ணீரை சுத்தப்படுத்தினால், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முடியும். மருத்துவ துறையில் நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பாதிப்புக்குள்ளான பகுதியில், நேரடியாக மருந்தை செலுத்த முடியும். இதனால், குறைந்த அளவு மருந்தில் நிறைவான பலனை பெறமுடியும். குறைந்த மருந்து பயன்படுத்தும் போது பக்கவிளைவும் குறையும்; செலவும் குறையும். இதுபோன்று, கட்டுமான தொழில் உட்பட எல்லா துறைகளிலும் நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிக பயன் பெற முடியும். எனவே, நானோ தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். முதல் கட்டமாக, நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சியில், 10 ஆயிரம் கோடி முதலீடு செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நம் ஆராய்ச்சி பலன்கள், பொதுமக்களை சென்றடைய வேண்டும். ஆராய்ச்சி முடிவுகள் உற்பத்தியை பெருக்க உதவ வேண்டும். இவ்வாறு செல்வமூர்த்தி கூறினார். சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் பேசும்போது, ''நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சி திட்டங்களில், சென்னை பல்கலைக் கழகத்தை ஈடுபடுத்த வேண்டும்,'' என, வேண்டுகோள் விடுத்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us