Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/கதவு சொல்லும் கலாசார கதைகள்; கண் கலங்க வைத்த ஓவியம்

கதவு சொல்லும் கலாசார கதைகள்; கண் கலங்க வைத்த ஓவியம்

கதவு சொல்லும் கலாசார கதைகள்; கண் கலங்க வைத்த ஓவியம்

கதவு சொல்லும் கலாசார கதைகள்; கண் கலங்க வைத்த ஓவியம்

ADDED : செப் 17, 2011 11:05 PM


Google News
Latest Tamil News

சென்னையைச் சேர்ந்த ஓவியர் சந்தான கிருஷ்ணன், தன் ஓவியங்கள் மூலம் கலாசாரத்தை மீட்டெடுக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்.



கதவை மட்டுமே பிரதானமாக வரைந்து, தேசமெங்கும் சுற்றி வரும் 34 வயது இளைஞர் சந்தான கிருஷ்ணன்.

உலகம் முழுக்க, 30க்கும் மேற்பட்ட ஓவியக் கண்காட்சிகளை நிகழ்த்தி இருக்கும் இவர், தைவான், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கும் சென்று, கை நிறைய விருதுகளை அள்ளி வந்திருக்கிறார். ஒவ்வொரு ஓவியரும் தங்கள் படைப்பின் தனிபாணி மூலம் அறியப்படுவது உண்டு. ஓவியர் மூக்கையாவுக்கு, 'குதிரை'; சந்ருவுக்கு 'எருது'; மனோகருக்கு 'ஆடு'; பாஸ்கருக்கு 'பூனை'; சந்தான கிருஷ்ணனுக்கு 'கதவு'. அக்ரகாரத்து வீடுகள் தான் சந்தான கிருஷ்ணனின், 'கதவு' ஓவியங்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ளன. கும்பகோணம் அரசு கவின்கலை கல்லூரியில் படித்த போது, கல்லூரிக்குச் செல்லும் சாலையில் இருந்த அக்ரகாரத்து வீதிகளும், வீடுகளும், கதவுகளும் ஒவ்வொரு ரகமாக இருந்திருக்கின்றன. மனதை பறிகொடுத்த போது, தொடர்ந்து கதவுகளை வரையும் எண்ணம் அவருக்கு வந்தது. சந்தான கிருஷ்ணனின், 'கதவுகள்' தனிச்சிறப்பானவை.



ஒவ்வொரு கதவுக்குள்ளும், அதற்குப் பின்னாலும், சின்ன சிறுகதைகளை சொல்வது இவருடைய சிறப்பு. நிலையில் இருக்கும் சிற்பங்கள், அதனருகில் இருக்கும் சுவர் சித்திரங்கள் என, ஒவ்வொன்றும் நாம் கடந்து வந்த நாகரிக வளர்ச்சியை சொல்பவை. கதவுகளின் வழியே தெரியும் முற்றம், தாழ்வாரம், புழக்கடை, சமையலறை, புறவாசல், அதன் வழியே தெரியும் அடுத்த வீதி என, நம் வாழ்வை திரும்பிப் பார்க்க செய்பவை. நிலைப்படியில் இருக்கும் கடவுள் சிலைகள் மாறி, கண்ணாடி கிராதிகளானதும், பின்னால் வண்ணங்கள் கொண்டதும், அதன் பின் வெறுங்கதவாகி, இன்று கதவே வீடானது வரை இவருடைய கதவு ஓவியங்கள், பல அர்த்தங்களைச் சொல்லி, நம் கன்னத்தில் அறைபவை. 'கதவு வெறும் கதவு மட்டும் அல்ல; அது வீட்டிற்கு வெளிச்சம் பாய்ச்சும் விளக்கு. நம் பண்பாட்டின், கலாசாரத்தின், குலப் பெருமையின் வெளிப்பாடு. அதனால் தொடர்ந்து கதவுகளை வரைவதன் மூலமாக, சிதைந்து போன நம் கலாசாரத்தை மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது' என்கிறார் சந்தான கிருஷ்ணன்.



சென்னையில் இவரது ஓவியக் கண்காட்சி நடந்த போது, வெளிநாட்டில் குடியேறிய தமிழர் ஒருவர், ஓவியங்களை உற்றுப்பார்த்துக் கொண்டே இருந்துள்ளார்; ஆழமாக ரசிக்கிறார் என்று அவர் அருகில் சென்று பார்த்த சந்தான கிருஷ்ணன் அதிர்ச்சியாகியுள்ளார். 'ஓவியத்தை உற்றுப்பார்த்திருந்த, அவருடைய கண்கள் சிவந்திருந்தன. அடக்க முடியாமல் அழுதபடி, தன் மகளிடம் எதையோ சொல்லிக் கொண்டிருந்தார். அருகில் சென்ற என் கைகளை பற்றி, 'நான் அமெரிக்காவில் குடியேறி பல ஆண்டுகளாகி விட்டன. வெளிநாட்டில் வளர்ந்த என் மகளுக்கு, எப்படி சொந்த ஊரை காண்பிக்கப் போகிறோம் என்று கலக்கத்துடன் இருந்தேன். அந்த குறையை உங்கள் ஓவியம் பூர்த்தி செய்து விட்டது. நீங்கள் வரைந்திருப்பது எங்கள் வீட்டுக் கதவு. இதற்காக எங்கள் தலைமுறையே உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது' என்று அவர் கதறலோடு சொன்னார். இது என் ஓவியத்திற்கு கிடைத்த மறக்க முடியாத அங்கீகாரம்' என்கிறார் சந்தான கிருஷ்ணன்.



முந்தைய கால வீடுகளில், எப்போதும் கதவுகள் திறந்தே இருக்கும். வழிப்போக்கர்கள், உறவினர்கள், அயலார் என எல்லோரும் வந்து புழங்குவதற்கு கதவுகள் அனுமதிக்கும். ஆனால், இன்றைய கதவுகள் அடுத்த வீட்டு எண்ணை கூட தெரிந்து வைத்திருக்காதவை. குவிலென்ஸ் வழியாக வெளியே இருக்கிறவர்களை பார்த்த பின் அனுமதிப்பவை. 'மனிதனின் பேராசையும், பெருங்கோபமும் தான் உறவுகளில் இருந்து நம்மை பிரிப்பவை. நம்மில் கண்ணுக்கு தெரியாமல் பிணைக்கப்பட்டிருக்கும் கண்ணியை அறுந்து விடாமல், கதவுகள் தான் காக்க வேண்டும். அதற்காகத் தான் ஓவியங்கள் மூலம் நான் போராடிக் கொண்டிருக்கிறேன்.' என்ற சந்தான கிருஷ்ணனின் ஆசை, 'எல்லா கதவுகளும் உடைந்து போய், வெளிச்சம் பரவ வேண்டும்' என்பது தான்.



- அ.ப.இராசா -







      Our Apps Available On




      Dinamalar

      Follow us