பட்டா மாறுதல் விபரம் அறிய புது வசதி; மோசடியை தடுக்க வருவாய் துறை முயற்சி
பட்டா மாறுதல் விபரம் அறிய புது வசதி; மோசடியை தடுக்க வருவாய் துறை முயற்சி
பட்டா மாறுதல் விபரம் அறிய புது வசதி; மோசடியை தடுக்க வருவாய் துறை முயற்சி
ADDED : ஜூலை 08, 2024 04:20 AM

சென்னை : சொத்து பரிமாற்றத்தில் மோசடியை தடுக்க, சர்வே எண் வாரியாக, பட்டா மாற்றம் தொடர்பான முந்தைய விபரங்களை தொகுத்து அளிக்கும் புதிய வசதியை, வருவாய் துறை அறிமுகப்படுத்த உள்ளது.
தமிழகத்தில், வீடு, மனை வாங்குவோர், அதன் முந்தைய பத்திரப்பதிவு விபரங்களை அறிய, வில்லங்க சான்றிதழ் பெறுகின்றனர். இதன் வாயிலாக, சொத்தில் ஏதாவது பிரச்னை இருக்கிறதா என்பதை எளிதாக அறியலாம்.
நீர்நிலைகள்
அதேநேரம், சொத்தின் பட்டா யார் பெயரில் உள்ளது; இதற்கு முன் யார் யார் பெயரில் இருந்தது என்ற விபரங்களை அறிய முடியாது. அதனால், சிலர் போலியாக பட்டா தயாரித்து, மக்களை மோசடி செய்து வருகின்றனர்.
இதில், நீர் நிலைகள், அரசு புறம்போக்கு நிலங்கள், அறநிலையத்துறை நிலங்கள் போன்றவற்றை மோசடியாக விற்பதை தடுக்க, வழிகாட்டி மதிப்பு நீக்கப்பட்டுள்ளது.
இந்நிலங்களுக்கான சர்வே எண்கள், சார் - பதிவாளர் அலுவலகங்களில் வெளியிடப்பட்டு உள்ளன. இருப்பினும், பல இடங்களில் அரசு மற்றும் அறநிலையத்துறைக்கு சொந்தமாக நிலங்கள், போலி பட்டாக்கள் வாயிலாக அபகரிக்கப்படுகின்றன.
பட்டா இருக்கிறது என்ற நம்பிக்கையில், பொதுமக்களும் இந்தச் சொத்துக்களை வாங்கி ஏமாறுகின்றனர்.
இதில், ஒரு குறிப்பிட்ட சர்வே எண், எந்தெந்த காலத்தில் யார் யார் பெயருக்கு உட்பிரிவு செய்யப்பட்டது; அதன் மொத்த பரப்பளவு என்ன; தற்போது விற்கப்படும் பரப்பு உண்மையிலேயே பட்டாவுக்கு உட்பட்டதா என்பதை அறிய முடியாத நிலை உள்ளது.
இதுகுறித்து, வருவாய் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
பதிவுத்துறையில், ஒரு சொத்தின் முந்தைய பரிமாற்றங்களை அறிய, வில்லங்க சான்று இருப்பது போன்று, பட்டாவுக்கு தகவல் தொகுப்பு இருக்க வேண்டும். வருவாய் துறையில் கிராம நிர்வாக அலுவலர் நிலையில், இது குறித்த தகவல் தொகுப்பு நிர்வாக பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளது.
அறிக்கையாக தரப்படும்
இந்த விபரங்களை, பொதுமக்கள் ஆன்லைன் வாயிலாக அறிய, புதிய வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதன்படி, ஒரு சொத்தை வாங்கும் நபர், அது குறித்த சர்வே எண்ணை உள்ளீடு செய்தால், அந்த சர்வே எண்ணில், இதற்கு முன் நடந்த பட்டா மாற்ற விபரங்கள் அறிக்கையாக வழங்கப்படும்.
சர்வே எண்ணில் புதிது புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்து உட்பிரிவு எண்கள், அதற்கான பரப்பளவு, யார் பெயரில் வழங்கப்பட்டது, எப்போது வழங்கப்பட்டது போன்ற விபரங்கள், தொகுப்பாக மக்களுக்கு கிடைக்கும். இதனால், போலியாக ஒரு பட்டாவை தயாரித்து நில மோசடி செய்வதை தடுக்கலாம்.
பொது மக்களும் முழு விபரம் அறிந்து, சொத்துக்களை வாங்கலாம். இந்த புதிய வசதி விரைவில் துவக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.