தனி பிரிவில் மனு கொடுத்தால் நடவடிக்கை இல்லை! பொதுமக்கள் அதிருப்தி
தனி பிரிவில் மனு கொடுத்தால் நடவடிக்கை இல்லை! பொதுமக்கள் அதிருப்தி
தனி பிரிவில் மனு கொடுத்தால் நடவடிக்கை இல்லை! பொதுமக்கள் அதிருப்தி
ADDED : ஜூலை 08, 2024 04:38 AM

சென்னை : - மாவட்ட அளவிலான அதிகாரிகளிடம் மனு கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், கோட்டையில் மனு கொடுத்தால் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், தினமும் நுாற்றுக்கணக்கானோர், சென்னை தலைமை செயலகம் வந்து, முதல்வரின் தனிப்பிரிவில் மனு கொடுக்கின்றனர்.
முன்பெல்லாம் மனு கொடுக்க, தலைமை செயலகம் செல்ல, பொதுமக்கள் எளிதாக அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால், மனு கொடுக்க வந்தவர்களில் சிலர், திடீர் போராட்டத்தில் ஈடுபடுவது, தற்கொலைக்கு முயற்சிப்பது போன்ற சம்பவங்கள் அரங்கேறியதால், போலீஸ் கெடுபிடி அதிகரித்தது.
மனு அளிக்க வருபவரின் முழு விபரங்களை கேட்டு, மனுவின் விபரங்களை அறிந்து, பலத்த சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர்.
சிலருக்கு போலீசாரே உதவியாக சென்று, மனு கொடுத்த பின் வெளியே அனுப்புகின்றனர்.
புலம்பல்
இப்படி பலத்த சோதனைக்கு இடையில் மனு கொடுத்தாலும் தீர்வு கிடைப்பதில்லை.
மனு மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமலேயே, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக, அதிகாரிகள் கடிதம் அனுப்புகின்றனர் என, மனு கொடுத்தவர்கள் புலம்புவது அதிகரித்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் பெருநகரை சேர்ந்த ராஜாகிருஷ்ணதேவராயர் என்பவர், கழிவுநீர் கால்வாயை சரி செய்யக்கோரி, முதல்வர் தனிப்பிரிவில், ஆன்லைன் வாயிலாக மனு அளித்துள்ளார்.
அதற்கு, 'உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டது. சம்பந்தப்பட்ட இடத்தில், வாடகைதாரர் வசித்து வருகிறார். கழிவுநீர் சாலையில் வராத வகையில் தற்காலிகமாக தடுக்கப்பட்டுள்ளது.
'மழைக்காலம் முடிந்ததும் உறை இறக்கப்பட்டு தீர்வு காண்பதாக, கட்டட உரிமையாளரிடம் இருந்து கடிதம் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, பதில் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இன்று வரை பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை.
குடிநீர் குழாய் மீது சாக்கடை நீர் விடப்படுகிறது என, அவர் மீண்டும் மனு அனுப்பி உள்ளார்.
அடுத்து, அப்பகுதியில் தேவேந்திரன் கோவில் நிலத்திற்கு சொந்தமான நிலத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மனு அளித்துள்ளார்.
நிலத்திற்கு கோவில் பெயரில் வழங்கப்பட்ட பட்டா விபரத்தையும் தெரிவித்துள்ளார். அதற்கு, அந்த இடம் கிராம நத்தம் என்பதால், ஆக்கிரமிப்புகளை அகற்றிட வழிவகை இல்லை என, வருவாய் துறை அதிகாரிகள் கடிதம் அனுப்பி உள்ளனர்.
ஒரே பதில்
இதுகுறித்து, ராஜா கிருஷ்ணதேவராயர் கூறுகையில், “முதல்வர் தனிப்பிரிவில் கொடுக்கும் மனுக்களுக்கு, எவ்வித விசாரணையும் நடத்தாமல், அதிகாரிகள் ஒரே பதிலை திரும்ப திரும்ப அனுப்புகின்றனர். நடவடிக்கை எடுக்காமலே, நடவடிக்கை எடுத்து விட்டதாக பதில் அனுப்புகின்றனர்,” என்றார்.