Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஊழலுக்கு எதிராக ஒன்பது கட்சிகள் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் : மூன்றாவது அணியை உருவாக்க முயற்சி

ஊழலுக்கு எதிராக ஒன்பது கட்சிகள் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் : மூன்றாவது அணியை உருவாக்க முயற்சி

ஊழலுக்கு எதிராக ஒன்பது கட்சிகள் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் : மூன்றாவது அணியை உருவாக்க முயற்சி

ஊழலுக்கு எதிராக ஒன்பது கட்சிகள் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் : மூன்றாவது அணியை உருவாக்க முயற்சி

ADDED : ஆக 19, 2011 09:45 PM


Google News
Latest Tamil News

புதுடில்லி : மத்திய அரசு தாக்கல் செய்துள்ள லோக்பால் மசோதாவை தூக்கி எறிந்துவிட்டு, வலுவான லோக்பால் மசோதாவை அமல்படுத்தக் கோரி, அ.தி.மு.க., - இடதுசாரிகள் உள்ளிட்ட முக்கியமான ஒன்பது அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து, வரும் 23ம் தேதி நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளன.

எதிர்க்கட்சிகளின் இந்த திடீர் ஒற்றுமை, மீண்டும் தேசிய அளவில் மூன்றாவது அணியை தோற்றுவிப்பதற்கான புதிய முயற்சியோ என்ற யூகத்தை கிளப்பியுள்ளது.

வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளார். இந்நிலையில், டில்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில், நேற்று மதியம் அ.தி.மு.க., - மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தெலுங்குதேசம், பிஜு ஜனதாதளம், மதசார்பற்ற ஜனதாதளம், ஆர்.எஸ்.பி., - பார்வர்ட் பிளாக், ராஷ்டிரிய லோக்தளம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக கூடினர்.

இரண்டு மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மா.கம்யூ., கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் கராத் கூறியதாவது: பார்லிமென்டில் தற்போது அரசு தாக்கல் செய்திருக்கும் லோக்பால் மசோதா வலுவில்லாதது. இதை ஏற்க முடியாது. மிக பலவீனமான இந்த மசோதா மூலம், ஊழலை முழுவதுமாக ஒழித்துவிட முடியாது. இதை அரசும் வேண்டுமென்றே உணர மறுக்கிறது. எனவே, முழுமையான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும். அதேபோல், நீதித்துறையின் கட்டுப்பாடுகள் குறித்த மசோதா பற்றியும் அரசு பரிசீலித்து வருகிறது. இதுவும் முழுமையில்லாத ஒன்றாக உள்ளது.

தேசிய அளவில் நீதித்துறை ஆணையத்தை அமைக்க மத்திய அரசு முன்வரவேண்டும். கருப்புப் பணம் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பெருமளவில் நிறைந்து கிடக்கிறது. இதை வெளிக்கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தியும், வலுவான லோக்பால் மசோதாவை கொண்டுவரக் கோரியும், வரும் 23ம் தேதி நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள, ஒன்பது கட்சிகளும் கூட்டாக முடிவு செய்துள்ளன.

அன்னா ஹசாரேயின் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுத்தது, அரசின் அரக்க குணத்தை காட்டுகிறது. போராட்ட உரிமையை நசுக்கப்பார்ப்பது கண்டனத்திற்குரியது. மத்திய அரசின் இந்த சர்வாதிகாரப்போக்கை ஏற்க முடியாது. ஒன்பது கட்சிகளும் இணைந்து, இவ்விஷயத்தில் தொடர்ந்து போராடும். இவ்வாறு கராத் கூறினார்.

கூட்டத்தில் யெச்சூரி, பரதன், ராஜா, தம்பிதுரை, தேவகவுடா, அஜித்சிங், அபனிராய் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பா.ஜ., அல்லாத முக்கிய எதிர்க்கட்சிகள் எல்லாம் காங்கிரசுக்கு எதிராக மீண்டும் ஒன்றிணைவது, தேசிய அளவில் மூன்றாவது அணியை தோற்றுவிக்க மேற்கொள்ளும் புதிய முயற்சியோ என்ற யூகங்கள் தலைநகரில் கிளம்பியுள்ளன.

-நமது டில்லி நிருபர்-







      Our Apps Available On




      Dinamalar

      Follow us