சொத்து கணக்கை வெளியிட்டார் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல்
சொத்து கணக்கை வெளியிட்டார் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல்
சொத்து கணக்கை வெளியிட்டார் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல்

புதுடில்லி : ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தனக்கு 2.49 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சமூக ஆர்வலர் சுபாஷ் அகர்வால் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஜனாதிபதியின் சொத்து விவரங்களை கேட்டிருந்தார். ஆனால், அவரது சொத்து விவரங்களை கேட்கும் உரிமை தனக்கு இல்லை எனவும், எனினும் ஜனாதிபதி தானாக முன்வந்து சொத்து விவரங்களை அளித்தால், அது மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்கும் என, தகவல் கமிஷனர் சைலேஷ் காந்தி தெரிவித்திருந்தார்.
முன்னதாக ஜனாதிபதியின் செயலகம், அவரது சொத்து விவரங்களை வெளியிட மறுப்பு தெரிவித்திருந்தது. இதற்கிடையே, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தன்னுடைய இணையதளத்தில் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார். அவற்றின் விவரம்
வருமாறு: அசையா சொத்துக்களின் மதிப்பு 83.83 லட்சம் ரூபாய் அளவுக்கும், அசையும் சொத்துக்களின் மதிப்பு 1 கோடியே 66 லட்சம் ரூபாய் அளவுக்கும் உள்ளது. ஜனாதிபதியின் சொந்த மாநிலமான மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் 39.60 லட்சத்தில் வீடும், 9.82 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3.82 எக்டேர் நிலத்தில் பண்ணை வீடும் உள்ளது.
ஜால்கான் மாவட்டத்தில் தந்தை மூலம் அளிக்கப்பட்ட 7.81 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3.57 எக்டேர் அளவு விவசாய நிலமும், துலி மாவட்டத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான விவசாய நிலமும் உள்ளது. ஜால்கான் மாவட்டத்தில் 1997 மற்றும் 98ம் ஆண்டுகளில் பிரதிபா பாட்டீல் 1.19 எக்டேர் மற்றும் 1.49 எக்டேர் அளவுக்கு நிலங்களை வாங்கியுள்ளார். இவற்றின் மதிப்பு 3.64 லட்சம் மற்றும் 2.90 லட்சம் ரூபாய்.
பல்வேறு வங்கிகளில் பிரதிபா பாட்டீலுக்கு 68.80 லட்சம் ரூபாய் அளவுக்கு நிரந்தர வைப்பு நிதியும், ஆர்.இ.சி.எல்., நிறுவன பங்கு பத்திரத்தில் 29 லட்சம் ரூபாய் முதலீடும், தபால் அலுவலக சேமிப்பு பத்திரத்தில் 4.71 லட்சம் ரூபாய் முதலீடும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 12.60 லட்சமும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
தங்க நகைகள் 31 லட்சம் ரூபாய் அளவுக்கும், வெள்ளி பொருட்கள் 69 ஆயிரம் ரூபாய்க்கும் உள்ளது. வங்கி சேமிப்பு கணக்கில் 16.33 லட்சம் ரூபாய் உள்ளது. கையிருப்பு 1.87 லட்சம் ரூபாய் அளவுக்கு உள்ளது. பங்குச் சந்தையில் 21 ஆயிரத்து 775 ரூபாய்க்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. சஞ்சீவினி சேமிப்புத் திட்டத்தில் 66 ஆயிரத்து 640 ரூபாய் அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது.