Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மிக்சி, கிரைண்டர், பேன், லேப்-டாப், ஆடு, மாடு வழங்கும் திட்டம் துவங்கியது

மிக்சி, கிரைண்டர், பேன், லேப்-டாப், ஆடு, மாடு வழங்கும் திட்டம் துவங்கியது

மிக்சி, கிரைண்டர், பேன், லேப்-டாப், ஆடு, மாடு வழங்கும் திட்டம் துவங்கியது

மிக்சி, கிரைண்டர், பேன், லேப்-டாப், ஆடு, மாடு வழங்கும் திட்டம் துவங்கியது

UPDATED : செப் 17, 2011 05:37 AMADDED : செப் 15, 2011 11:27 PM


Google News
Latest Tamil News
திருவள்ளூர்:பெண்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மாணவ - மாணவியருக்கு மடிக்கணினிகள் (லேப்-டாப்), கிராமப்புற ஏழை, எளியோருக்கு கறவை மாடு, ஆடுகள் வழங்கும் திட்டங்களை, முதல்வர் ஜெயலலிதா, திருவள்ளூரில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் துவக்கி வைத்தார்.

சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின் போது, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், அனைத்து மக்களுக்கும், இலவச மின்விசிறி, மிக்சி, கிரைண்டர், 10ம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ - மாணவியருக்கு சிறப்பு ஊக்கத் தொகை மற்றும் மடிக்கணினிகளும், கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு, இலவச கறவை மாடுகள், ஆடுகள் வழங்கப்படும் என, முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார்.தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றிய முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட இலவச திட்டங்கள், செப்டம்பர் 15ம் தேதி அண்ணாதுரை பிறந்தநாளன்று துவக்கி வைக்கப்படும் என, அறிவித்தார்.மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின், 103வது பிறந்தநாளான நேற்று, அரசின் இந்த இலவச திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டன. திருவள்ளூரில் நடைபெற்ற அரசு விழாவில், முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



திட்டம்: நடப்பாண்டில், 912 கோடி ரூபாய் செலவில், 9 லட்சத்து, 12 ஆயிரம் மடிக்கணினிகளும், 1,250 கோடி ரூபாய் செலவில், 25 லட்சம் குடும்பங்களுக்கு மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர், 56 கோடி ரூபாய் செலவில், 12 ஆயிரம் குடும்பங்களுக்கு, கலப்பின ஜெர்சி கறவை மாடுகளும், 135 கோடி ரூபாய் செலவில், முதல்கட்டமாக, 1 லட்சம் குடும்பங்களுக்கு, தலா, நான்கு ஆடுகள் வழங்கப்படும்.திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சியில், பயனாளிகள், தலா ஏழு பேருக்கு, இலவச மிக்சி, கிரைண்டர், மடிக்கணினி, கறவை மாடுகள், ஆடுகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.



தலைமைச் செயலர் தேபேந்திரநாத் சாரங்கி வரவேற்றார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ரமணா முன்னிலை வகித்தார். சபாநாயகர் ஜெயக்குமார், விழாவுக்கு தலைமை ஏற்றார்.நிதியமைச்சர் பன்னீர் செல்வம், வேளாண்துறை அமைச்சர் செங்கோட்டையன், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் சம்பத், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் சிவபதி, தொழில் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பங்கேற்றனர்.



திக்குமுக்காடியது திருவள்ளூர் நகரம் : இலவச திட்டத்தை துவக்கி வைக்க, திருவள்ளூரில் உள்ள காக்களூர் தனியார் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்ட ஹெலிகாப்டர் தளத்துக்கு, முதல்வர் ஜெயலலிதா, காலை, 10.42 மணிக்கு வந்தார். அருகில் உள்ள விழா மேடைக்கு, 10.47 மணிக்கு காரில் வந்தார்.

அங்கிருந்த மக்கள் கூட்டத்தை பார்த்து முதல்வர் கையசைத்ததும், தொண்டர்கள் மகிழ்ச்சி பொங்க உற்சாகம் அடைந்தனர். தொடர்ந்து, அரசு நலத் திட்டங்களை வழங்கி பேசிவிட்டு, 12.35 மணிக்கு மேடையை விட்டு இறங்கினார். தொண்டர்களை பார்த்து கையசைத்துவிட்டு, 12.42 மணிக்கு, ஹெலிகாப்டரில் சென்னைக்கு புறப்பட்டார்.

* முதல்வரின் வருகையையொட்டி, வீரராகவ பெருமாள் கோவில் தேரடியில் இருந்து, காக்களூர் வரை, 3 கி.மீ., தூரத்துக்கு, சாலையின் ஒருபுறம், மெகா சைஸ் டிஜிட்டல் பேனர்களை கட்சியினர் வைத்திருந்தனர்.

* எட்டு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த, 2,700 போலீசார், பணியில் ஈடுபட்டிருந்தனர்.

* தேரடி- காக்களூர் வரை, குடிநீர் பாக்கெட்டுகள், மோர், டீ, காபி, தயிர் சாதம், எலுமிச்சை சாதம், சுண்டல், வேர்க்கடலை ஆகிய திடீர் தின்பண்ட கடைகள் ஏராளமாக முளைத்தன. இக்கடைகளில் வியாபாரம் சூடுபிடித்திருந்தது.

* மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால், அனைவரும் முதல்வரின் பேச்சைக் கேட்கும் வகையில், ஆங்காங்கே, டிஜிட்டல் ஸ்கிரீன்கள் வைக்கப்பட்டிருந்தன.

* விழா மேடை அமைந்துள்ள இடத்தில் இருந்து, இருபுறமும், 2 கி.மீ., தூரத்துக்கு மக்கள் கூட்டம் இருந்தது.

* முதல்வரின் வருகையையொட்டி, மாவட்டத்தில் பல பகுதிகளில் இருந்து, திருவள்ளூருக்கு அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us