குருவாயூரில் இன்று வாழைக்குலைகள் சமர்ப்பணம்
குருவாயூரில் இன்று வாழைக்குலைகள் சமர்ப்பணம்
குருவாயூரில் இன்று வாழைக்குலைகள் சமர்ப்பணம்
ADDED : செப் 08, 2011 12:02 AM

குருவாயூர்: ஓணம் பண்டிகையையொட்டி இன்று, குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் விவசாயிகள், தங்கள் நிலத்தில் விளைந்த வாழைக்குலைகளை, சுவாமிக்கு அர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.
கேரளா திருச்சூர் மாவட்டம் குருவாயூரில், பிரசித்திப் பெற்ற கிருஷ்ணன் கோவில் உள்ளது.
இங்கு ஆண்டு தோறும் ஓணம் பண்டிகையை ஒட்டி, உத்திராட நட்சத்திர தினத்தில், குருவாயூர் கிருஷ்ணனுக்கு, விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த வாழைக்குலைகளை, சமர்ப்பிப்பது வழக்கம். அதேபோல், இவ்வாண்டுக்கான இந்நிகழ்ச்சி, இன்று காலை சீவேலி (உற்சவரை யானை மீதேற்றி கோவிலை வலம் வருவது) நிகழ்ச்சிக்கு பின், கிழக்கு சன்னிதி முன்புள்ள கொடிமரத்தின் கீழ், மேல்சாந்தி கிரீசன் நம்பூதிரி முதல் வாழைக்குலையை சுவாமிக்கு சமர்ப்பிப்பர். பல ஆண்டுகளுக்கு முன் வரை, குருவாயூர் தேவஸ்வம் போர்டுக்குச் சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்த விவசாயிகள், தங்களது நிலத்தில் விளைவிக்கப்பட்ட, நேந்திரங்காய் வாழைக்குலைகளை சமர்ப்பித்து வந்தனர். ஆனால், தேவஸ்வத்திற்கு நிலங்கள் இல்லாமல் போய் விட்ட நிலையில், அதுபோன்று விவசாயிகள் வாழைக்குலைகளை சமர்ப்பிப்பது குறைந்து போனது. ஆனாலும், அதை விட அதிகமாக தற்போது பக்தர்கள், 'காழ்ச்ச குலைகள்' என்ற பெயரில், வாழைக் குலைகளை சுவாமிக்கு சமர்ப்பித்து வருகின்றனர். இன்று முழுவதும் சமர்ப்பிக்கப்படும், வாழைக் குலைகளில் ஒரு பகுதி, நாளை ஓணம் பண்டிகையை ஒட்டி, தேவஸ்வத்தால் பராமரிக்கப்பட்டு வரும் கோவில் யானைகளுக்கு வழங்கப்படும்.