PUBLISHED ON : ஆக 05, 2011 12:00 AM

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றப் பொதுச் செயலர் மீனாட்சி சுந்தரம்: தமிழகத்தில் பற்றி எரியும் பிரச்னையாக உள்ள சமச்சீர் கல்வித் திட்டத்தைப் பற்றி எதுவுமே கூறாத பட்ஜெட், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள், பொதுமக்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது.
டவுட் தனபாலு: அதுக்குத் தான், 'ரிடையர்டு' ஆன பிறகும், சங்கப் பதவியை மட்டும், விடாம பிடிச்சுட்டு இருக்கக் கூடாதுங்கிறது... 'விஷயம் கோர்ட்டுல இருக்கும்போது, அதை எதிர்க்கட்சிக்காரங்க வேணா அரசியல் ஆக்கலாம்; ஆட்சியாளர்கள் அப்படி செய்ய முடியாது'ன்னு உங்களை மாதிரி ஆசிரியர்களுக்கே தெரியலைன்னா, மத்தவங்களுக்கு எப்படி சொல்லித் தருவீங்க...?
தி.மு.க., தலைவர் கருணாநிதி: தி.மு.க., ஆட்சிக்காலத்தில், காலை 10.30க்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது, ராகு காலத்தை மனதில் வைத்து தான் என கூறியிருந்தார். இன்று பகுத்தறிவுச் சுடர் ஜெயலலிதா, பட்ஜெட், சரியாக 10.40க்கு தாக்கல் செய்யப்படும் என அறிவித்துவிட்டு, பட்ஜெட்டைப் படிக்கச் செய்திருக்கிறார்.
டவுட் தனபாலு: அந்தம்மா, தன்னை எப்போதும் பகுத்தறிவுச் சுடர்னு சொல்லிக்கிட்டதே இல்லை... ஊரறிய கோவிலுக்குப் போய் சாமி கும்பிடறது தான் அவங்க வழக்கம்... சில பேர் மாதிரி, ராமர் குடிகாரர்னு சொல்லிட்டே, காளஹஸ்தி கோவில்ல பரிகார பூஜை பண்றதில்லை...!
தமிழக மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன்: மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவீத ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது. உலமாக்களின் உதவித்தொகை அதிகரிப்பும் வரவேற்கத்தக்கது. பல்வேறு இலவச திட்டங்களுக்கு, ஏழைகளின் நலனை முன்னிட்டு செய்யப்பட்ட நிதி உதவிகளும் வரவேற்கத்தக்கதே.
டவுட் தனபாலு: என்னங்க இது, அறிக்கை பூரா, 'வரவேற்கத்தக்கதாவே' இருக்கு... இவ்வளவு வரவேற்றீங்கன்னா, அந்தம்மாவாலேயே தாங்க முடியாதே... ஸ்டாலின் கைது பத்தி அறிக்கை விட்டதுல முதல்வர் கோபமா இருக்காருன்னு யாராவது சொன்னாங்களா...?