பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் இன்று துவக்கம்
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் இன்று துவக்கம்
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் இன்று துவக்கம்
ADDED : ஜூலை 31, 2011 10:56 PM
புதுடில்லி:பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, பார்லிமென்ட் மழைக்காலக்
கூட்டத் தொடர், இன்று துவங்குகிறது. ஸ்பெக்ட்ரம், லோக்பால், தெலுங்கானா
உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க, பா.ஜ.,
உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தயார் நிலையில் உள்ளன. இதையடுத்து,
'பார்லிமென்டில் எதிர்க்கட்சிகளின் சவாலை சந்திக்கத் தயார்' என, பிரதமர்
மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே,
பார்லிமென்ட் மழைக்காலக் கூட்டத் தொடர், இன்று துவங்கி, ஐந்து வாரங்களுக்கு
நடக்கிறது. பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பின், நீண்ட நாட்கள் கழித்து,
மீண்டும் பார்லிமென்ட் கூடவுள்ளதால், அரசியல் வட்டாரத்தில் பெரும்
எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்த இடைப்பட்ட காலத்தில், மத்திய அரசுக்கு
நெருக்கடி ஏற்படுத்தும் வகையிலான, பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளன.
லோக்பால் சட்ட மசோதாவை, இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்ற, மத்திய அரசு
முடிவு செய்துள்ளது. ஆனால், லோக்பால் சட்ட மசோதாவிலிருந்து, பிரதமர் பதவி
வகிப்போருக்கு விலக்கு அளிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளதை,
எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.தெலுங்கானா விவகாரமும், தற்போது
உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தனி மாநிலம் அமைக்க, நடவடிக்கை எடுக்காத மத்திய
அரசைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.,க்களே
தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில்,
சமீபத்தில் கோர்ட்டில் வாதாடிய முன்னாள் அமைச்சர் ராஜா, பிரதமர் மன்மோகன்
சிங், உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் பெயரையும் தெரிவித்து
இருந்தார்.'பிரதமருக்குத் தெரிந்தே, ஒதுக்கீடு நடந்தது' என, ராஜா தரப்பில்
கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. பா.ஜ., இடதுசாரிக் கட்சியினர், இந்த
விவகாரத்தை, லோக்சபாவில் எழுப்பத் திட்டமிட்டுள்ளனர்.மேலும், தமிழக
மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படும் பிரச்னையை, லோக்சபாவில்
எழுப்பவும், பா.ஜ., அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் முடிவு செய்துள்ளன.
மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள, மத வன்முறை தடுப்பு மசோதாவுக்கும்,
குறிப்பிட்ட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.இந்த விவகாரங்களை,
பார்லிமென்டில் எழுப்பி, அரசுக்குப் பெரிய அளவில் நெருக்கடி கொடுக்க,
எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. தேவைப்பட்டால், விலைவாசி உயர்வு உள்ளிட்ட
பிரச்னைகளை முன்வைத்து, அரசுக்கு எதிராக, நம்பிக்கை இல்லாத் தீர்மானம்
கொண்டு வரும் திட்டமும், எதிர்க்கட்சிகளிடம் உள்ளது. பா.ஜ., வை சமாளிக்க,
எடியூரப்பா விவகாரத்தை, காங்கிரஸ் கட்சியினர் கையில் எடுக்க
திட்டமிட்டுள்ளனர்.
அனைத்துக் கட்சி கூட்டம்: இதற்கிடையே, பார்லிமென்ட் நடவடிக்கைகள் சுமுகமாக
நடப்பதை உறுதி செய்யும் வகையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை, லோக்சபா
சபாநாயகர் மீரா குமார் நேற்று கூட்டினார். இதில், அனைத்துக் கட்சித்
தலைவர்களும் பங்கேற்றனர்.இதன்பின், பிரதமர் மன்மோகன் சிங்
செய்தியாளர்களிடம் கூறியதாவது:எதிர்க்கட்சிகள், பார்லிமென்டில் எழுப்பவுள்ள
பிரச்னைகளைப் பார்த்து, நாங்கள் பயப்படவில்லை. சவாலை சந்திக்கத் தயார்.
எதிர்க்கட்சிகளை சமாளிப்பதற்கு, எங்களிடமும் சில விஷயங்கள் உள்ளன.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து, கோர்ட் விசாரித்து வருகிறது. எனவே, இந்த
விவகாரத்தில், கோர்ட் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக, பார்லிமென்ட் எந்த
முடிவும் எடுக்க முடியாது.
மழைக்காலக் கூட்டத் தொடர் சுமுகமாக நடக்கும்
என்ற நம்பிக்கை உள்ளது. கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த வேண்டிய கடமை,
அனைத்துக் கட்சிகளுக்கும் உள்ளது.லோக்பால் விவகாரம் பற்றி பார்லிமென்டில்
முடிவு எடுக்கப்படும். ஜனநாயகத்தில், பார்லிமென்ட் என்பது, இறையாண்மை மிக்க
ஒரு அமைப்பு. அதைச் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். தெலுங்கானா
பிரச்னைக்கும், சுமுகத் தீர்வு காணப்படும்.இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங்
கூறினார்.அரசுக்கு நெருக்கடி சுஷ்மா ஆவேசம்: லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர்
சுஷ்மா சுவராஜ் கூறியதாவது:பார்லிமென்ட் கூட்டத் தொடர் கூடுவதற்கு முன்பே,
பிரதமர் பிரச்னையை ஆரம்பித்து விட்டார். பிரச்னையை அவர் தான், முதலில்
துவக்கியுள்ளார். நாளை (இன்று) பார்லிமென்ட் கூடட்டும், யாருடைய வில்லில்
இருந்து, அம்புகள் அதிகமாக ஏவப்படுகிறது என, பார்த்து விடுவோம்.
பார்லிமென்டில் அனைத்து பிரச்னைகள் பற்றியும் பேசப்பட வேண்டும். விலைவாசி
உயர்வு, உள்நாட்டுப் பாதுகாப்பு, தெலுங்கானா ஆகிய பிரச்னைகள், அவசியம்
பேசப்பட வேண்டியவை.அதேபோல், அணு ஆயுதம் வழங்கும் நாடுகள் விதித்துள்ள
நிபந்தனைகள், தமிழக மீனவர்கள் இந்திய கடற்படையால் தாக்கப்படும் சம்பவங்கள்
ஆகிய சர்வதேச பிரச்னைகள் குறித்தும், சபையில் விவாதிக்க வேண்டும் என,
ஏற்கனவே நோட்டீஸ் கொடுத்துள்ளோம்.இவ்வாறு சுஷ்மா கூறினார்.