முதியோர் ஓய்வூதியத்துக்கு போலி உத்தரவுகள் : அமைச்சர் தங்கமணி தகவல்
முதியோர் ஓய்வூதியத்துக்கு போலி உத்தரவுகள் : அமைச்சர் தங்கமணி தகவல்
முதியோர் ஓய்வூதியத்துக்கு போலி உத்தரவுகள் : அமைச்சர் தங்கமணி தகவல்
ADDED : ஆக 24, 2011 12:10 AM
சென்னை : ''தேர்தலைக் கருத்தில் கொண்டு, முதியோர் ஓய்வூதியத்துக்கு போலி உத்தரவுகள் வழங்கப்பட்டன'' என்று, அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
இதுபற்றி, அவர் கூறியதாவது: சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில், கடந்த ஆட்சியில் தரகர்கள் புகுந்து வசூல் செய்தனர்.
தி.மு.க.,வினரே அரசு அலுவலகங்களில் அமர்ந்து கொண்டு, பணம் கொடுத்தால் செய்து தருவதாகக் கூறினர். தற்போது, தரகர்களை ஒழிக்க, கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியில், முதியோர் ஓய்வூதியத்தை, ஆயிரம் ரூபாயாக உயர்த்தியதுடன், இதற்கென 3,000 கோடி ரூபாயை முதல்வர் ஒதுக்கியுள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கும், இத்திட்டம் செயல்படுத்தப்படும். முதியோர் ஓய்வூதியத்துக்காக மத்திய அரசு நிர்ணயித்துள்ள பயனாளிகள் எண்ணிக்கை, 10.15 லட்சம் பேர். தற்போது, ஓய்வூதியம் பெறுவதற்கான வயது 65ல் இருந்து, 60 ஆக குறைக்கப்பட்டுள்ளதால், கூடுதலாக 5.34 லட்சம் பேரைச் சேர்க்க வேண்டியுள்ளது. மத்திய அரசு 200 ரூபாய் தான் கொடுக்கிறது. அதன்படி, 336.94 கோடி ரூபாயைத் தான் அளிக்கிறது. ஆனால், தமிழக அரசின் நிதி மட்டும் 2,680 கோடி ரூபாய். கடந்த ஆட்சியில் வேலூர், சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, சென்னை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக அதிகமாக, 1 முதல் 2 லட்சம் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் நேரத்தில் புதிய உத்தியாக, முதியோர் ஓய்வூதியம் கிடைக்கும் என, போலி உத்தரவுகளைப் பலருக்குக் கொடுத்துள்ளனர். எட்டு மாதங்களாகியும் இவர்களுக்குப் பணம் வரவில்லை.
பள்ளிகளில் டிச.31க்குள் சான்றிதழ்கள்
இதுபற்றி, அமைச்சர் தங்கமணி கூறியதாவது: அனைத்துப் பள்ளிகளிலும், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களிடம், சான்றிதழுக்காக செப்டம்பர் 30க்குள் மனுக்களைப் பெற வேண்டுமென தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள் இந்த மனுக்களை அக்டோபர் 15க்குள், தாலுகா அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும். அவற்றைச் சரிபார்த்து, டிசம்பர் 31ம் தேதிக்குள் மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும். இத்திட்டம், செப்டம்பர் முதல் தேதி துவக்கப்படுகிறது.