PUBLISHED ON : ஆக 24, 2011 12:00 AM

'தங்கம் விலை இறங்க வாய்ப்புண்டு!'
'தங்கத்தின் விலையில் மாற்றம், ஏற்ற இறக்கம்' பற்றி சொல்கிறார், மும்பை 'காம்டிரெண்ட்ஸ் ரிஸ்க் மேனேஜ்மென்ட் சர்வீசஸ்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஞானசேகர் தியாகராஜன்: நாட்டில் ஒருபுறம் விலைவாசி அதிகரித்துக் கொண்டே போக, ஆபரணங்களின் விலை மறுபுறம் எகிறிக் கொண்டு செல்கிறது. தற்போது தங்கத்தின் விலை எதிர்பார்த்ததை விட, மிக அதிகமாக ஏறியுள்ளது. தொழிட்நுட்பத்தின் அடிப்படையில் பார்த்தால், தங்கத்தின் விலை ஏறினாலும், பின் இறங்க வாய்ப்பு இருக்கிறது. உலகில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள், மற்ற காரணங்களால் தங்கத்தின் விலை உச்சத்தில் இருக்கிறது. உலகில் உள்ள பங்குச் சந்தைகள் அனைத்துமே, இறக்கத்தில் இருக்கின்றன. இதன் காரணமாக, பங்குச் சந்தையில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள், நஷ்டத்தைக் குறைக்க தங்கத்தை விற்பர். அப்படி விற்கும் போது, தங்கத்தின் விலை இறங்க வாய்ப்பு இருக்கிறது. இன்றைய நிலையில், தங்கத்தின் விலை, ஒரு அவுன்சுக்கு 1,650 ரூபாய்க்கு (10 கிராம் தங்கம் 24,500 ரூபாய் ) கண்டிப்பாக இறங்க வாய்ப்பிருக்கிறது. விலை இன்னும் ஏறுமோ என்று ஆபரணமாக வாங்க நினைப்பவர்கள், இன்னும் பொறுத்திருந்து, விலை குறையும் போது வாங்குவது கஷ்டத்தை குறைக்கும். இன்னும் மூன்று மாதத்தில், ஒரு கிராம் தங்கத்தின் விலை, 2,881 ரூபாய் வரை உயர வாய்ப்பிருக்கிறது. ஆவணி மாதம் தொடங்கினாலே நம்மூர்களில் திருமண சீசன். அது மட்டுமல்லாமல், பண்டிகைக் காலங்களும் வந்துவிடும். இதற்கெல்லாம் தங்கம் வாங்கியாக வேண்டிய நிலை பலருக்கு ஏற்படும். தங்கத்தின் விலை குறைந்தால், நம்மவர்களில் பலர் சந்தோஷமாக வாங்குவர்.