பாதியில் நிற்கும் முந்திரி ஏற்றுமதி மண்டல பணிகள் : விரைந்து முடிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா?
பாதியில் நிற்கும் முந்திரி ஏற்றுமதி மண்டல பணிகள் : விரைந்து முடிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா?
பாதியில் நிற்கும் முந்திரி ஏற்றுமதி மண்டல பணிகள் : விரைந்து முடிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா?
சென்னை : பண்ருட்டியில் நடைபெற்று வரும் முந்திரி பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி மண்டல, திட்டப் பணிகள் முழுமையடையாமல் பாதியில் நிற்கிறது.
தமிழகத்தில் முந்திரி விளையும் பகுதிகளில், முந்திரி பதப்படுத்தப்பட்டு, அவற்றை ஏற்றுமதி செய்வதற்காக, முந்திரி சார்ந்த ஏற்றுமதி மண்டலம் அமைக்க, தமிழக அரசு 2005ம் ஆண்டு திட்டமிட்டது. கடலூர், தஞ்சாவூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களை உள்ளடக்கி, கடலூரில் முந்திரிக்கான ஏற்றுமதி மண்டலம் ஒன்றை அமைக்க, மத்திய அரசின் 'அபெடா' வுக்கும், (மத்திய வேளாண் விளைபொருட்கள் பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம்), தமிழக அரசின் வேளாண் துறைக்கும் இடையே, ஏப்ரல், 2005ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இத்திட்டத்தை மூன்று கட்டங்களாக, ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. முதல் கட்டமாக, பண்ருட்டியில் முந்திரி பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி மண்டலம் அமைக்க, 'டிட்கோ' நிறுவனம், சந்தானம் அண்டு அசோசியேட்ஸ் என்ற தனியார் நிறுவனத்துடன், 17 கோடி ரூபாய் திட்ட செலவில், 2007ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் ஒப்பந்தம் செய்தது. இத்திட்டத்திற்கு, மத்திய அரசின், 'அசைடு' (அசிஸ்டன்ஸ் டூ ஸ்டேட் பார் இன்ப்ராஸ்ட்ரக்சர் டெவலப்மென்ட் பார் எக்ஸ்போர்ட்) திட்டத்தின் கீழ், நான்கு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியது. இதில்,'டிட்கோ' நிறுவனம், இரண்டு கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த காட்டாண்டி குப்பத்தில், இத்திட்டம் 2.5 ஏக்கரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், 6,000 சதுர அடியில் கச்சா முந்திரியை பதப்படுத்தும் யூனிட்டும், 20 ஆயிரம் சதுர அடி பொது பதப்படுத்துதல் மற்றும் பார்சல் செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் பாதி அளவு நிறுவப்பட்டுள்ளன. தற்போது, நாளொன்றுக்கு 2 டன் முந்திரி பதப்படுத்தப்படுகிறது. குறைந்தளவு ஏற்றுமதியும் நடக்கிறது. ஆனால், முழு அளவு ஏற்றுமதி இன்னும் நடைபெறவில்லை. ஒரு கோடி ரூபாய்க்கும் கீழ் தான் வர்த்தகம் நடைபெறுகிறது. இதை முழுமையாக செயல்படுத்தும் போது, ஆண்டொன்றுக்கு 5 கோடி ரூபாய்க்கு மேலாக ஏற்றுமதி செய்யப்படும்.
இத்திட்டத்தில், இதுவரை 30க்கும் மேற்பட்ட முந்திரி விவசாயிகள் பயன்பட்டு வருகிறார்கள். திட்டம் முழுமையடையும் போது, 350க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெறுவர். இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள முந்திரி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும், இத்திட்டம் இன்னும் முழுமையடைவில்லை. இத்திட்டத்திற்கான முதல் கட்ட பணிகள், சென்ற ஜூலை மாதத்தில் முடிய வேண்டியது. காலதாமதத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து, விவசாயத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'நிதி பற்றாக்குறை காரணமாகவே பணிகள் தொடர்ந்து நடப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தம் போட்ட தனியார் நிறுவனத்தின் நிலையும் இது தான். எனவே, அரசு நிதியுதவி வழங்கினால் தான், முந்திரி பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி மண்டலம் அமைக்கும் பணி முடிவடையும்' என்றார். எனவே, கடலூர், தஞ்சாவூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களின் பொருளாதார, வேலை வாய்ப்பு வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு, முந்திரி ஏற்றுமதி மண்டல பணிகள் முழுமை அடைவதற்கு, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
கட்டுமான பொறுப்பை அரசு ஏற்க மாஜி எம்.எல்.ஏ., கோரிக்கை இதுகுறித்து பண்ருட்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., வேல்முருகன் கூறியதாவது: முந்திரி விலை நியாயமான முறையில், விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும் என்றால், முந்திரி பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி மண்டலத்தை தனியாருடன் சேராமல், தமிழக அரசே அமைக்க வேண்டும் என, இத்திட்டம் தொடங்கிய போதே, சட்டசபையில் பேசினேன். ஆனால், அரசு அதை ஏற்கவில்லை. மேலும், முந்திரி தொழிலில், பல லட்சம் குடும்பங்கள் ஈடுபட்டிருப்பதால், அதிகளவில் முந்திரி பதப்படுத்தும் நிலையங்களை அரசு அமைக்க வேண்டும். இவ்வாறு வேல்முருகன் கூறினார்.