/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பன்னீர் திராட்சை சாகுபடி பரப்பளவு அதிகரிக்க வலியுறுத்தல்பன்னீர் திராட்சை சாகுபடி பரப்பளவு அதிகரிக்க வலியுறுத்தல்
பன்னீர் திராட்சை சாகுபடி பரப்பளவு அதிகரிக்க வலியுறுத்தல்
பன்னீர் திராட்சை சாகுபடி பரப்பளவு அதிகரிக்க வலியுறுத்தல்
பன்னீர் திராட்சை சாகுபடி பரப்பளவு அதிகரிக்க வலியுறுத்தல்
ADDED : ஆக 01, 2011 10:26 PM
பேரூர் : தொண்டாமுத்தூரில் நடப்பாண்டு திராட்சை சாகுபடி மகசூல், பாதிக்கு மேலாக குறைந்து போயுள்ளது.
சாகுபடி பரப்பை அதிகரிக்க அரசு முன்வரவேண்டுமென, திராட்சை விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் கம்பத்துக்கு அடுத்தபடியாக, தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் பன்னீர் திராட்சைகள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. இதில், ஆறுமுகக்கவுண்டனூர், தீத்திபாளையம், மாதம்பட்டி, செல்லப்ப கவுண்டன்புதூர், கரடிமடை, பூலுவபட்டி, தீனம்பாளையம், தாளியூர் உள்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பன்னீர் திராட்சை பயிர் செய்யப்படுகிறது. கடந்த மூன்றரை மாதத்துக்கு முன், பழங்கள் பிடிப்பதற்காக, திராட்சை கொடிகளில் கவாத்து செய்யப்பட்டது. ஒரு மாதம் கழித்து பெய்த மழையால், திராட்சை கொடிகளில் நோய் தாக்கப்பட்டது. கவாத்து செய்யப்பட்ட திராட்சை கொடிகளில் பிடித்த பழங்கள் 60 முதல் 70 சதவீதம் பாதிக்கப்பட்டது. இதனால், திராட்சை மகசூல் பாதிக்கு மேலாக குறைந்து போயுள்ளது. இதன் காரணமாக, தொண்டாமுத்தூரில் இருந்து, கோவை மார்க்கெட்டுக்கு தினசரி கொண்டு செல்லப்படும் பழங்களின் எண்ணிக்கை 50 டன்னிலிருந்து குறைந்து, தற்போது 15 டன் பழங்கள் மட்டுமே அனுப்பி வைக்கப்படுகின்றன. குளிர்பதன கிடங்கு அமையுமா?: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், இப்பகுதியில் இரண்டாயிரம் ஏக்கருக்கு மேல் பயிர் செய்யப்பட்டு வந்த இத்தொழில், தற்போது பாதியாக குறைந்து போய்விட்டது. திராட்சை விவசாயம் லாபகரமானது என்றாலும், ஒரு ஏக்கருக்கு கல்கால், கம்பி, பந்தல், கொடிமர நடவு, ஆள்கூலி என 3 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. கவனத்துடன் பயிர்பாதுகாப்பு செய்தால் மட்டுமே, ஒரு ஏக்கருக்கு ஏழு முதல் 9 டன் வரை மகசூல் எடுக்கலாம். மானியத்துடன் வங்கிக் கடனுதவி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர். திராட்சை தொழில்நுட்ப ஆலோசகர் மாணிக்கம் கூறுகையில்,''நிதியுதவி இல்லாத காரணத்தால் பரப்பளவு குறைந்து வருகிறது. குளிர்காலங்களில் அழுகி வீணாகும் பல டன் திராட்சை பழங்களை பாதுகாத்திடவும், திராட்சை குளிர்பதன கிடங்கு மற்றும் ஒயின் தொழிற்சாலையை இப்பகுதியில் அமைத்திடவும் அரசு முன்வர வேண்டும். இது, திராட்சை தொழிலுக்கும், தொழிலைச் சார்ந்துள்ள விவசாயிகளுக்கும் பெரும் ஊக்கமாக அமையும்,''என்றார். விலை உயர்வு: கடந்த இரண்டரை மாதம் முன் பெய்த மழையால், ஒரு கிலோ திராட்சை 15 முதல் 20 ரூபாய்க்கும், ஆறு கிலோ கொண்ட திராட்சை பழப்பெட்டி, 120 முதல் 140 ரூபாய் வரை மட்டுமே விற்பனையானது. தற்போது, பருவமழை சீசனாக இருந்தாலும், பழங்களுக்கு அதிகமான விலை கிடைத்துள்ளது. ஒரு கிலோ திராட்சை 35 முதல் 40 ரூபாய் வரைக்கும், ஆறுகிலோ கொண்ட திராட்சை பழப்பெட்டி 260 முதல் 280 ரூபாய் வரைக்கும் விற்பனையாகிறது. தென்மேற்கு பருவமழை சீசனில் முன் எப்போதும், இந்தளவுக்கு பழத்துக்கு விலை கிடைக்கவில்லையென திராட்சை விவசாயிகள் தெரிவித்தனர்.