சதுரகிரி மலை பாதைகளில் கடைகள் : மலையேறுவதில் பக்தர்கள் சிரமம்
சதுரகிரி மலை பாதைகளில் கடைகள் : மலையேறுவதில் பக்தர்கள் சிரமம்
சதுரகிரி மலை பாதைகளில் கடைகள் : மலையேறுவதில் பக்தர்கள் சிரமம்

வத்திராயிருப்பு : சதுரகிரி மலையில் இன்று ஆடி அமாவாசை விழா நடக்கும் நிலையில், இதை காண பல லட்சம் பக்தர்கள் மலை ஏறுகின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அமாவாசை வழிபாடு, இன்று காலையில் துவங்குகிறது. இதனால், நேற்று பக்தர்களின் வருகை மிக அதிகளவில் இருந்தது. வனப்பகுதிக்குள் நுழையும் பக்தர்களிடம், தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் வனத்துறையினர், பாலித்தீன், பீடி, சிகரெட், மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதையறிந்த சிலர், கூல்டிரிங்ஸ் உடன் மதுவை கலந்து கொண்டு சென்றனர்; அதையும் பறிமுதல் செய்தனர்.
அடிவாரம் முதல், மலை உச்சியில் கோவில் வளாகம் வரை நடை பாதைகளில் கடைகள் அமைக்க, வனத்துறையினர் தடை விதித்தனர். ஆனால், மாங்கேனி, அத்தியூத்து, கோணத்தலைவாசல், காராம்பசுத்தடம், கோரக்கநாதர் குகை, சின்னப்பசுக்கிடை, நாவல் ஊற்று, இரட்டை லிங்கம் கோவில் ஆகிய இடங்களில் மிக குறுகிய பாதைகளில் அதிக கடைகள் அமைக்கப்பட்டிருந்ததால், இந்த இடங்களில் மலை ஏறுபவர்களும், இறங்குபவர்களும் சிரமப்பட்டனர்.
இந்த இடங்களில் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வர உள்ளதால், கடைகளை அகற்றுவது மிக அவசியம். அத்துடன் கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் தேவை. மலை உச்சியில் கழிவறை வசதிகள் இல்லாததால், கோவில் வளாகத்திலிருந்து வெள்ளைப்பாறை மடம் வரை நடைபாதை முழுவதும், பக்தர்கள் மலஜலம் கழித்து அசுத்தப்படுத்தியுள்ளனர். அந்த இடத்தில் மூக்கை பிடித்தபடி பக்தர்கள் கடந்து சென்றனர்.
கோவில் விழா ஏற்பாடுகளை, சென்னை அறநிலையத்துறை ஆணையர் முத்தையா கலைவாணன், மதுரை இணை ஆணையர் சுதர்சன், உதவி ஆணையர் வில்வமூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர். நேற்று விசேஷ அலங்காரத்தில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலையில் சிவராத்திரி வழிபாடு துவங்கியதும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
வனப்பகுதிக்குள் வரி வசூலித்த ஊராட்சி : சதுரகிரி மலையில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள், ஏராளமானோர் அத்துமீறி நடைபாதை கடை அமைத்திருந்தனர். இதை வனத்துறையினர் அகற்ற முற்பட்டனர். ஆனால், அக்கடைகளை அங்கீகரித்து 50 ரூபாய் வீதம் சாப்டூர் ஊராட்சியைச் சேர்ந்தவர்கள் உரிமக்கட்டணம் வசூலித்தனர்.
இதனால், சில கடைக்காரர்கள் கடையை காலி செய்ய மறுத்து தகராறு செய்தனர். யார் இடத்திற்கு யார் வரி வசூலிப்பது என்ற அடிப்படை தெரியாமல், பணம் வசூலிப்பதிலேயே ஊராட்சி நிர்வாகம் குறியாக இருந்தது. அடிப்படை வசதிகள் எதையும் செய்து தரவில்லை.
இது ஒருபுறம் இருக்க, மலைப்பாதையில் டியூப் லைட் வசதி செய்து தருவதற்காக கோவில் நிர்வாகத்தில் டெண்டர் எடுத்தவர்கள், அந்த டியூப் லைட்டுகளை நடைபாதை கடைகளுக்கு முன் கட்டி, ஒவ்வொரு கடைக்காரர்களிடமும் 50 ரூபாய் வீதம் வசூலித்தனர். ஆளாளுக்கு போட்டி போட்டு வசூலித்தும் கடை காலி செய்யப்பட்டதால், அவர்கள் கண்ணீருடன் வெளியேறினர்.