ADDED : ஆக 25, 2011 11:19 PM

புதுடில்லி: ''நான் தவறு செய்திருக்கலாம். ஆனால், ஊழலுக்கு ஒருபோதும் துணை போனது இல்லை. ஊழல் மூலம் நான் சொத்து குவித்துள்ளதாக, எதிர்க்கட்சிகள் கருதினால், என் சொத்துக்களை அவர்கள் ஆய்வு செய்யலாம்,'' என, பிரதமர் மன்மோகன் சிங், லோக்சபாவில் நேற்று பேசினார். லோக்சபாவில் நேற்று, ஊழல் தொடர்பாக நடந்த விவாதத்துக்கு பதில் அளித்து, பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: ஊழல் நமக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. அதை ஒழிக்க, தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு தாக்கல் செய்துள்ள லோக்பால் மசோதா, ஜன் லோக்பால் மசோதா, அருணா ராயின் மசோதா ஆகியவை குறித்து விவாதிக்க, அரசு தயாராக உள்ளது. விவாதத்துக்கு பின், நிலைக்குழுவின் பரிசீலனைக்கு, மசோதா அனுப்பி வைக்கப்படும்.
ஒட்டுமொத்தமாக ஊழலை ஒழிக்க, எந்த மசோதா பயனுள்ளதாக இருக்குமோ, அந்த மசோதாவை பார்லிமென்டில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மசோதாக்களும், பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். ஊழலை ஒழிக்க, ஒரே ஒரு நடவடிக்கை மட்டும் போதாது. பல்வேறு துறைகள் ரீதியான நடவடிக்கை அவசியம்.
பா.ஜ., உறுப்பினர் முரளிமனோகர் ஜோஷி, பார்லிமென்டில் பேசும்போது, என்னை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசினார். ஊழலுக்கு துணைபோவதாக பேசினார். கடந்த ஏழு ஆண்டுகளாக, பிரதமராக இருக்கிறேன். என் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறியுள்ளனர். ஆனால், நான் யாரையும் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தது இல்லை. எந்த ஒரு உறுப்பினரின் நடத்தை பற்றியும் விமர்சித்தது இல்லை. நிதி அமைச்சராகவும், பிரதமராகவும், நாட்டின் பெருமையை உயர்த்தும் அளவுக்கு, நானும் சிறிய அளவில் பங்காற்றியுள்ளேன். அதே நேரத்தில், என் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்படுவது, என்னை வேதனைப்படுத்துகிறது. நானும் பதிலுக்கு குற்றச்சாட்டுகளை கூறி, இந்த சபையை, வாக்குவாதங்கள் நடக்கும் சபையாக மாற்ற விரும்பவில்லை. லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், என் சொத்துக்களை ஆய்வு செய்யலாம். கடந்த 41 ஆண்டுகளில் நான், சொத்து குவித்துள்ளேனா என்பதை, அவர் ஆய்வு செய்யலாம். அரசுப் பதவியை, சொத்துக்கள் குவிப்பதற்காக, நான் பயன்படுத்தினேன் என அவர் நிரூபித்தால், அவர் என்ன தீர்ப்பளித்தாலும், ஏற்கத் தயார். நான் பிரதமராக இருந்த காலத்தில், தவறு செய்திருக்கலாம். தவறு செய்யாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தவறு செய்வது மனித இயல்பு. அதே நேரத்தில், ஊழலுக்கு துணைபோவதாக என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை, கடுமையாக மறுக்கிறேன். இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.