முதல்வர் பதவியிலிருந்து விலக எடியூரப்பா பிடிவாதம்! மேலிடத்திற்கு ஆதரவாளர்கள் எச்சரிக்கை
முதல்வர் பதவியிலிருந்து விலக எடியூரப்பா பிடிவாதம்! மேலிடத்திற்கு ஆதரவாளர்கள் எச்சரிக்கை
முதல்வர் பதவியிலிருந்து விலக எடியூரப்பா பிடிவாதம்! மேலிடத்திற்கு ஆதரவாளர்கள் எச்சரிக்கை

தன் குடும்பத்தினருடன் மொரீஷியசில் ஒரு வார சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு, முதல்வர் எடியூரப்பா நேற்று காலை பெங்களூரு திரும்பினார். விமான நிலையத்தில் அவரது ஆதரவு அமைச்சர்கள் வரவேற்றனர். பின்னர், ரேஸ் கோர்ஸ் ரோட்டிலுள்ள தன் இல்லத்தில், அமைச்சர்கள், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில், எடியூரப்பாவை கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து மாற்றுவது என்று அவசர முடிவெடுக்க வேண்டாம். அதையும் மீறி மாற்றுவது என முடிவெடுத்தால், மோசமான பின்விளைவுகள் ஏற்படும் என, மேலிட தலைமையை, எடியூரப்பா ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் எச்சரித்ததாக தெரிகிறது.
இதையடுத்து, பா.ஜ., தலைவர் நிதின் கட்காரிக்கு, எடியூரப்பா விரிவாக கடிதம் எழுதி அனுப்பியதாக தகவல் வெளியானது. அக்கடிதத்தில், கர்நாடக மாநிலத்தில், மூன்று ஆண்டுகளாக நடந்துள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்து பா.ஜ., பொதுச் செயலர் அனந்தகுமார் தலைமையில் கமிட்டி ஒன்று அமைத்து, விசாரித்து கொள்ளலாம். இந்த கமிட்டியில், கர்நாடக மாநில மேலிட பொறுப்பாளர் தர்மேந்திர பிரதான், மூத்த தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோரையும் உறுப்பினர்களாக சேர்க்கலாம்.
இந்த கமிட்டி, 'ஜி' பிரிவில் ஒதுக்கப்பட்ட நிலங்கள், முறைகேடான சுரங்கங்கள் குறித்தும் விசாரிக்கலாம். அந்த குழு அளிக்கும் அறிக்கைக்கு பின், நான் தவறு செய்திருப்பதாக நிரூபிக்கப்பட்டால், எவ்வித நடவடிக்கைக்கும் நான் உடன்படுகிறேன் என, குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.
பின்னர், தன்னை சந்தித்த நிருபர்களிடம் முதல்வர் எடியூரப்பா கூறியதாவது: அடுத்த இரண்டாண்டுகள் நானே தொடர்ந்து முதல்வராக நீடிப்பேன். முதல்வர் பதவியிலிருந்து விலகுவேன் என்ற பேச்சுக்கே இடமில்லை. லோக் ஆயுக்தா அறிக்கை கிடைத்த பின், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, மேலிட தலைவர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்பேன்.
பா.ஜ.,வில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். பிளவு எதுவுமில்லை. பா.ஜ., அரசால், முன்னாள் பிரதமர் தேவகவுடா, அவரது மகன் குமாரசாமி ஆகியோர், அவர்களின், 'ஓட்டு வங்கி' குறைந்து வருவதாக கவலைப்படுகின்றனர். பா.ஜ., அரசு பதவியில் இருக்கும் வரை, அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது. சந்தோஷ் ஹெக்டே சமர்ப்பிக்கும் அறிக்கைக்கு பதிலளிக்க தயாராகவுள்ளோம். அவர் மீது எனக்கு மிகவும் மரியாதை உள்ளது. இன்னும் அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. புதன் கிழமை (நாளை) சமர்ப்பிப்பதாக கூறியுள்ளார்.
தொலைபேசி ஒட்டுக்கேட்பு குறித்து சந்தோஷ் ஹெக்டே புகார் கூறியுள்ளார். மூன்று மாதமாக கூறாத அவர், தற்போது கூறுவது ஏன்? இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளேன். தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து மத்திய அரசு தாராளமாக விசாரணை நடத்திக்கொள்ளலாம். மத்திய அமைச்சர் கிருஷ்ணா தலைமையில் கமிட்டி அமைத்து, சந்தோஷ் ஹெக்டே, தேவகவுடாவையும் சேர்த்து விசாரணை நடத்தலாம். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
கர்நாடக அரசியல் சூழ்நிலை குறித்து தேசிய தலைவர் கட்காரி, டில்லியில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தியதாக கூறப்படுவதை, எடியூரப்பா மறுத்தார்.
நாளை அறிக்கை: இதற்கிடையில், சந்தோஷ் ஹெக்டே, வரும் புதன்கிழமை(நாளை) தன் அறிக்கையை தாக்கல் செய்வதாக தெரிவித்துள்ளார். தொலைபேசி ஒட்டுக்கேட்பு வருத்தமளிக்கிறது. என் அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அவசியம் தேவை என தெரிவித்தார். முதல்வருக்கு உத்தரவு: நில மோசடி குறித்து தன் மீது வழக்கு தொடர கவர்னர் பரத்வாஜ் அனுமதி கொடுத்தது சரியல்ல என, கர்நாடக ஐகோர்ட்டில் முதல்வர் எடியூரப்பா தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், அரசு தரப்பை ஒரு வாதியாக கருதி, பதில் மனு தாக்கல் செய்யும் படி, கர்நாடக ஐகோர்ட், முதல்வர் எடியூரப்பாவை கேட்டு கொண்டுள்ளது.
சுரங்க ஊழல் தொடர்பாக, கடந்த, 14 மாதங்களில், 1, 800 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக லோக் ஆயுக்தா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. லோக் ஆயுக்தா அறிக்கை முறையாக இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை. இருப்பினும், இது குறித்த விவரம் கடந்த வாரம் அனைத்து பத்திரிகைகளிலும் வெளியாகி விட்டது. தொலைபேசி ஓட்டுக்கேட்பு மூலம் இந்த தகவல் வெளியாகி விட்டதாக சந்தோஷ் ஹெக்டே தெரிவித்திருந்தார்.