ஏற்றுமதி தடையால் ரூ.80 கோடி சின்ன வெங்காயம் முடக்கம் : கோவையில் விவசாயிகள் கண்ணீர்
ஏற்றுமதி தடையால் ரூ.80 கோடி சின்ன வெங்காயம் முடக்கம் : கோவையில் விவசாயிகள் கண்ணீர்
ஏற்றுமதி தடையால் ரூ.80 கோடி சின்ன வெங்காயம் முடக்கம் : கோவையில் விவசாயிகள் கண்ணீர்
ADDED : செப் 20, 2011 11:01 PM
வெங்காய ஏற்றுமதிக்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளதால்,கோவையில், ரூ.80 கோடி மதிப்பிலான சின்ன வெங்காயம், கிடங்குகளில் முடங்கியுள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில், சாம்பார் வெங்காயம் என அழைக்கப்படும் சின்ன வெங்காயம், ஆண்டுக்கு இரு முறை, ஜனவரி மற்றும் மே மாதங்களில் பயிரிடப்படுகிறது. இந்த ஆண்டு, மே மாத சீசனில், 5,000 ஏக்கரில் பயிரிடப்பட்டது. ஒரு ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து, விவசாயிகள் சின்ன வெங்காயத்தை பயிரிடுகின்றனர். ஜூலை கடைசி முதல், செப்டம்பர் இரண்டாம் வாரம் வரை, இதற்கான அறுவடைப் பணிகள் நடந்தன. தற்போது, பயிர் பதப்படுத்தப்பட்டு, விற்பனைக்காக, கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளது. வெங்காய ஏற்றுமதிக்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளதால், வெங்காய வியாபாரிகள் தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, பல்லடம், உடுமலை, குடிமங்கலம், தாராபுரம் பகுதிகளில், விவசாயிகளிடம் விலைகேட்டு வரவில்லை. இதனால், ஒரு ஏக்கருக்கு 4,500 கிலோ வெங்காயம் வீதம், ஒட்டுமொத்தமாக, 40 லட்சம் கிலோ வெங்காயம், அந்தந்தப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பட்டறைகளில் முடங்கியுள்ளது. இந்தியாவில், 50 சதவீதத்துக்கும் குறைவான மக்கள் மட்டுமே, இந்த வெங்காயத்தைப் பயன்படுத்துகின்றனர். ஏற்றுமதி ரகம் என்பதாலும், ஏற்றுமதி ஆர்டரை கருத்தில் கொண்டும், இப்பகுதி விவசாயிகள் இதனை அதிகமாகப் பயிரிட்டு வருகின்றனர்.
தற்போது, மத்திய அரசு விதித்துள்ள ஏற்றுமதி தடையால், 80 கோடி ரூபாய் மதிப்பிலான வெங்காயம் அழுகி வீணாவதோடு, விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
ரூ.50 ஆயிரம் செலவு எப்படி? : விதை வெங்காய விலையேற்றம், உழவு, அடியுரம், நடவுக்கூலி, களைக்கொல்லி, பயிர்ப் பாதுகாப்பு என, ஒரு ஏக்கருக்கு 50 ஆயிரம் வரை செலவாகிறது. பட்டறைகளில் வைக்கப்பட்டுள்ள ஈரமான வெங்காயம் உலர்ந்து போனால், எடை குறையும். பெரும்பாலும், ஈர வெங்காயமே, மொத்த விற்பனைக்கு வைக்கப்படுகிறது. உலர்ந்து விட்டால், கூடுதல் எடை கிடைக்காமல் போவதோடு, அண்டை மாவட்டங்களில் வெங்காயப் பயிர் அறுவடை நேரமும் வந்தால், ஒட்டுமொத்த வெங்காய இருப்பும், விற்பனையே ஆகாமல், அழுகும் நிலை ஏற்படும். தற்போது, வெளிச் சந்தையிலேயே, ஒரு கிலோ எட்டு ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஏற்றுமதி தடை வந்தது ஏன்? : இந்தியாவில், வெங்காய விலை அவ்வப்போது ஏறி, நுகர்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் போது, வெங்காய விலை ஏற்றத்தால், அரசே ஆட்டம் கண்டுவிடும் சூழ்நிலை ஏற்பட்டது. எனவே, வெங்காயம் விலை ஏறும்போதெல்லாம், அந்தந்த நேரத்தில் ஆட்சியில் இருக்கும் அரசு, விலையைக் கட்டுப்படுத்த, சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
கடந்த ஜனவரியில், வெங்காயம் விலை, உள்ளூர் சந்தையில், 80 ரூபாய் வரை ஏறியது. அப்போது, வெங்காய ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தி, இந்திய மக்கள் தேவையைப் பூர்த்தி செய்ய முனைந்தது மத்திய அரசு. அதன் விளைவாக, குறிப்பிட்ட அளவு வரை, வெங்காய ஏற்றுமதிக்குத் தடை விதித்து உத்தரவிட்டது. தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு, கிலோ 25 ரூபாய் முதல் 35 ரூபாய் விலையில், சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது, உள்நாட்டுச் சந்தையில் விலை மலிந்ததாலும், அதிக அளவில் வெங்காய உற்பத்தி இருப்பதாலும், ஏற்றுமதிக்கான தடையை, மத்திய அரசு நீக்க வேண்டும் என, வெங்காய வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
பயிரிடப்படும் பகுதிகள் : கோவை மாவட்டத்தில், தொண்டாமுத்தூர், ஆலாந்துறை திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், உடுமலை, குடிமங்கலம், தாராபுரம், அவிநாசிப்பாளையம், வாளவாடி, தெக்கலூர், மங்களம் உள்ளிட்ட பகுதிகளில், வெங்காயம் பயிரிடப்படுகிறது.
-நமது நிருபர்-


