கோர்ட்டில் முறையிட்டுக் கொள்ளுங்கள்: மத்திய அரசு அறிவுரை
கோர்ட்டில் முறையிட்டுக் கொள்ளுங்கள்: மத்திய அரசு அறிவுரை
கோர்ட்டில் முறையிட்டுக் கொள்ளுங்கள்: மத்திய அரசு அறிவுரை
UPDATED : ஆக 17, 2011 01:20 AM
ADDED : ஆக 16, 2011 11:44 PM

புதுடில்லி:'போராட்டம் நடத்துவதற்கு அனைவருக்குமே உரிமை உள்ளது.ஆனால், எந்த இடத்தில், எந்தச் சூழ்நிலையில்,எந்த நேரத்தில் என்பதெல்லாம், மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். உலகெங்கிலும் நடத்தப்படும் எந்த ஒரு போராட்டமுமே, சில வரைமுறைகளுக்கு உட்பட்டுத்தான் அனுமதியளிக்கப்படுகிறது. எனவே, சட்டத்திற்கு உட்பட்டு நடத்தப்படும் எந்தப் போராட்டத்தையுமே அரசாங்கம் வரவேற்கிறது' என்று, உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார்.
பார்லிமென்டின் இரு சபைகளும் ஒத்திவைக்கப்பட்ட பிறகு, மத்திய அரசின் சார்பில் அமைச்சர்கள் சிதம்பரம், கபில்சிபல், அம்பிகா சோனி ஆகியோர் கூட்டாக நிருபர்களைச் சந்தித்தனர். அப்போது, உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது:இன்றைய நிகழ்வுகள் மகிழ்ச்சிக்குரியவை அல்ல. இருப்பினும், பெரும் மனச் சுமையுடன் கடமை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிரான இயக்கத்தினருக்கும், டில்லி போலீசாருக்கும் கடந்த 2ம் தேதி முதலே, பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வந்தது.உண்ணாவிரதம் இருப்பதற்காக, அனுமதி கேட்ட அவர்களுக்கு, முதலில் சில இடங்களை போலீசார் பரிந்துரைத்தனர். அதன்படி, ஜெயப்பிரகாஷ் நாராயணன் பூங்காவில் உண்ணாவிரதம் இருக்க, அனுமதியை போலீசார் வழங்கினர். சட்டம் - ஒழுங்கு ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு, சில நிபந்தனைகளை போலீசார் விதித்தனர்.அவற்றை ஏற்பது குறித்து, கடைசி வரை எந்தப் பதிலையும் ஹசாரே தரப்பினர் கூறவில்லை. இந்நிலையில், பொது அமைதியை கருத்தில் கொண்டு, ஜெயப்பிரகாஷ் நாராயணன் பூங்காவை ஒட்டிய பகுதியில், 144 தடையுத்தரவு போடப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை ஹசாரேயை டில்லி போலீசார் சந்தித்து, அவரது திட்டம் குறித்துக் கேட்டுள்ளனர். அதற்கு, தாம் தடையுத்தரவை மீறுவதாக, அன்னா ஹசாரே போலீசாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது, சி.ஆர்.பி.சி., பிரிவு 161,107 ஆகியவற்றின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரோடு சேர்ந்து, டில்லி நகரத்தின் ஆங்காங்கே சில பகுதிகளில், 1,300 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.போராட்டம் நடத்துவதற்கு, அனைவருக்குமே உரிமை உள்ளது. அந்த உரிமையை அரசாங்கம் மதிக்கிறது. ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிப்பது போன்ற செயல்களில், இந்த அரசாங்கம் ஒருபோதும் ஈடுபட்டதில்லை.
ஆனால், தாங்களே ஒரு சட்டத்தை இயற்றிக் கொண்டு வந்து, அந்த சட்டத்தைத் தான் நிறைவேற்ற வேண்டுமென, எந்த ஒரு தனி நபரும் போராட்டத்தில் இறங்கினால், அதை அரசாங்கம் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. ஆனால், ஹசாரே விஷயத்தில், அனைத்துமே முறைப்படி நடந்துள்ளது என்றே கூற வேண்டும்.இந்த கைது தவறானது என்று கருதுவார்களேயானால், கோர்ட்டில் முறையிட, அவர்களுக்கு முழு உரிமை உள்ளது. உண்ணாவிரதம் இருப்பதற்கு, கோர்ட் அனுமதி அளிக்குமானால், தாராளமாக உண்ணாவிரதத்தை மேற்கொள்ளலாம்.
அரசாங்கம் தடுக்கப் போவதில்லை.போராட்டம் நடத்துவதற்கு, அனைவருக்குமே உரிமை உள்ளது.ஆனால், எந்த இடத்தில், எந்தச் சூழ்நிலையில், எந்த நேரத்தில் என்பதெல்லாம், மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.உலகெங்கிலும் நடத்தப்படும் எந்த ஒரு போராட்டமுமே, சில வரைமுறைகளுக்கு உட்பட்டுத்தான் அனுமதியளிக்கப்படுகிறது.எனவே, ஜனநாயக நாட்டில் சட்டத்திற்கு உட்பட்டு நடத்தப்படும் எந்தப் போராட்டத்தையுமே, அரசாங்கம் வரவேற்கிறது.இவ்வாறு, சிதம்பரம் கூறினார்.