Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/செயற்குழுவில் தி.மு.க., உறுப்பினர்கள் தேர்தல் தோல்வி காரணம் குறித்து காரசாரம்

செயற்குழுவில் தி.மு.க., உறுப்பினர்கள் தேர்தல் தோல்வி காரணம் குறித்து காரசாரம்

செயற்குழுவில் தி.மு.க., உறுப்பினர்கள் தேர்தல் தோல்வி காரணம் குறித்து காரசாரம்

செயற்குழுவில் தி.மு.க., உறுப்பினர்கள் தேர்தல் தோல்வி காரணம் குறித்து காரசாரம்

ADDED : ஜூலை 24, 2011 03:25 AM


Google News
சென்னை:பரபரப்புடன் கூடிய தி.மு.க., செயற்குழுவில், தேர்தல் தோல்விக்கான காரணங்கள் காரசாரமாக விவாதிக்கப்பட்டன. தேர்தல் தோல்விக்கு, கூட்டணிக் கட்சிகளே காரணம் என, பெருவாரியான உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். கூட்டணிக் கட்சிகளை குற்றம் சாட்டிய அதே அளவுக்கு, குடும்ப ஆட்சியையும் சுட்டிக் காட்டினர். '2ஜி' விவகாரத்தாலும், செயற்குழு சூடுபிடித்தது.கோவையில், தி.மு.க., செயற்குழு நேற்று மாலை துவங்கியது. தி.மு.க., தலைவர் கருணாநிதி, செயற்குழுவை துவக்கி வைத்து பேசினார். அவரைத் தொடர்ந்து, பொதுச் செயலர் அன்பழகன் பேசினார். இவர்களுக்குப் பின், செயற்குழு உறுப்பினர்கள் பேசினர்.ஸ்டாலின், அழகிரி கோஷ்டிகளுக்கு இடையேயான மோதல் உச்சகட்டத்தில் இருக்கும் நிலையில், பதட்டத்துடனே செயற்குழு காணப்பட்டது. பொதுவான விஷயங்களை விட, கட்சித் தலைமையில் மாற்றம் வேண்டும் என, ஸ்டாலின் தரப்பினர் உறுதியாக உள்ளனர். தலைமை மாற்றம் ஸ்டாலினுக்கு சாதகமாக இருந்துவிடும் என்பதால், 'கருணாநிதியே தலைவராகத் தொடர வேண்டும்; தொடருவார்' என, அழகிரி பகிரங் கமாக அறிவித்து விட்டார்.

இதனால், தலைமை மாற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக அழகிரி கோஷ்டியினர் நினைக்கின்றனர். ஆனால், செயற்குழுவிலும், பொதுக்குழுவிலும் ஸ்டாலினுக்கு உள்ள ஆதரவைக் கொண்டு, மாற்றங்களைக் கொண்டு வந்துவிடலாம் என்ற அச்சமும் அழகிரி கோஷ்டியினருக்கு இருக்கிறது. இதனால், செயற்குழுவுக்கு முன்னதாக, கருணாநிதியை அழகிரி சந்தித்தார். அப்போது, செயற்குழு மற்றும் பொதுக்குழு தீர்மானங்கள் பற்றி அவர்கள் விவாதித்ததாகக் கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக, கோவையில் முகாமிட்டுள்ள ஸ்டாலின், இறுக்கமாகவே காணப்பட்டார்.

கருணாநிதியுடன் கோபித்துக் கொண்டு வெளிநாடு சென்றதாகக் கூறப்பட்ட முன்னாள் அமைச்சர் துரைமுருகன், செயற்குழுவுக்கு வந்திருந்தார்.

செயற்குழுவில், அழகிரி ஆதரவாளர்களுக்கு எதிராக சிலர் பேசியதால் பரபரப்பானது. அழகிரியின் ஆதரவாளர்கள் 117 பேரின் பட்டியலை வாசித்து, அவர்களை கட்சியிலிருந்து நீக்குமாறு தலைமையை வலியுறுத்தியதாகத் தெரிகிறது. இதற்கு, அழகிரி கோஷ்டியினர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கூட்டணிக் கட்சியாக இருந்துகொண்டு, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடப்பதை எல்லாம் காங்கிரஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது என்றும் செயற்குழு உறுப்பினர்கள் குற்றம் சாட்டிப் பேசினர். கட்சிக்கு எந்த பயனும் இல்லாமல், கட்சி மூலம் கிடைத்த அமைச்சர் பதவியை, தங்களது நிறுவனத்துக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார் என தயாநிதி மீது கடும் தாக்குதலை, செயற்குழுவில் பேசியவர்கள் முன்வைத்ததாகவும் கூறப்படுகிறது. உடன்பிறப்புகளின் ஆவேச பேச்சுக்கள், செயற்குழுவை பரபரப்பாக்கியதாக தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us