Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஜெகன் மோகன் - ஜனார்த்தன ரெட்டி தொடர்பு: சி.பி.ஐ., விசாரணை

ஜெகன் மோகன் - ஜனார்த்தன ரெட்டி தொடர்பு: சி.பி.ஐ., விசாரணை

ஜெகன் மோகன் - ஜனார்த்தன ரெட்டி தொடர்பு: சி.பி.ஐ., விசாரணை

ஜெகன் மோகன் - ஜனார்த்தன ரெட்டி தொடர்பு: சி.பி.ஐ., விசாரணை

ADDED : செப் 11, 2011 11:48 PM


Google News
Latest Tamil News

ஐதராபாத் :சுரங்க ஊழல் தொடர்பாக, சமீபத்தில் கைது செய்யப்பட்ட, கர்நாடக முன்னாள் அமைச்சரும், சுரங்கத் தொழில் அதிபருமான ஜனார்த்தன ரெட்டிக்கும், ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் இடையேயுள்ள வணிகத் தொடர்பு குறித்து, சி.பி.ஐ., போலீசார் விசாரிக்கத் துவங்கியுள்ளனர்.



சுரங்க முறைகேடு தொடர்பாக, கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, அவரது உறவினர் ஸ்ரீனிவாச ரெட்டி ஆகியோர் சமீபத்தில் சி.பி.ஐ., போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் தற்போது, ஐதராபாத் சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவைச் சேர்ந்த ஜனார்த்தன ரெட்டிக்கு, ஆந்திர முதல்வராக இருந்த மறைந்த ராஜசேகர ரெட்டி, 2004-09ம் ஆண்டுகளில், ஓபலாபுரத்தில் சுரங்கம் அமைத்து தொழில் நடத்த அனுமதி தந்தார்.ஓபலாபுரம், ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது, கர்நாடக எல்லையையொட்டியுள்ள பகுதி. அது மட்டுமல்லாமல், 2007ம் ஆண்டில் ராஜசேகர ரெட்டி, அவரது சொந்த மாவட்டமான கடப்பாவில், உருக்கு ஆலை அமைப்பதற்காக, ரெட்டி சகோதரர்களுக்கு 10 ஆயிரத்து 600 ஏக்கர் நிலத்தையும் ஒதுக்கிக் கொடுத்தார்.



ஓபலாபுரம் சுரங்கத்தில் வெட்டியெடுக்கப்பட்ட இரும்புத் தாதுக்களை, 'பிராமணி' உருக்கு ஆலைக்கு சப்ளை செய்ததாக ரெட்டி சகோதரர்கள் கணக்கு காட்டியுள்ளனர். ஆனால், அந்த உருக்கு ஆலை இன்னும் செயல்படத் துவங்கவில்லை. இதனால், பல்வேறு முறைகேடான வகைகளில் இரும்புத் தாது அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.கர்நாடக பா.ஜ.,வில் செல்வாக்கு மிக்க ரெட்டி சகோதரர்களுக்கும், ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி குடும்பத்தினருக்கும் வணிகத் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, சி.பி.ஐ.,யின் பார்வை ஜெகன் மோகன் பக்கம் திரும்பியுள்ளது. இருவருக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்கப்படுகிறது.



'ரெட் கோல்டு', 'ஆர்.ஆர்., குளோபல்' என்ற இரண்டு நிறுவனங்களின் ஆவணங்களை, சி.பி.ஐ., போலீசார் சமீபத்தில் ஆய்வு செய்தனர். அப்போது, ஓபலாபுரம் சுரங்க நிறுவனத்தின் துணை நிறுவனமான ஆர்.ஆர்., குளோபல் நிறுவனம், ஜெகன் மோகன் ரெட்டிக்குச் சொந்தமான, 'ஜெகதி பப்ளிகேஷன்'சில் பெருமளவு பணம் முதலீடு செய்துள்ளது. ஜெகதி பப்ளிகேஷன்ஸ் மூலம், 'சாக்சி' என்ற செய்தித் தாளும், ஒரு தெலுங்கு செய்திச் சேனலும் நடத்தப்படுகின்றன.ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை ஜெகன் மோகன் ரெட்டி மறுத்துள்ளார்.



அவர் கூறுகையில், 'ரெட்டி சகோதரர்கள் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள். மேலும், அவர்கள் பா.ஜ.,வில் இருப்பவர்கள். அப்படியிருக்க, நான் ஏன் ஜனார்த்தன ரெட்டிக்காக கவலைப்பட வேண்டும்?' என தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து, ஆந்திர மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜ்யசபா உறுப்பினருமான அனுமந்த ராவ் கூறுகையில், 'ஜெகனின் தந்தை ராஜசேகர ரெட்டி, ஆந்திர மாநிலத்தைக் கொள்ளையடிக்க ரெட்டி சகோதரர்களுக்கு அனுமதியளித்தார். இப்போது, ஜெகன் மோகன், அவர்களைப் பற்றி தெரியாது எனக் கூறுகிறார்' என்றார்.



வீடுகளில் சோதனை : பெல்லாரியில் உள்ள ஜனார்த்தன ரெட்டியின் நெருங்கிய உதவியாளர்கள் குருலிங்கே கவுடா, ராஜசேகர கவுடா ஆகியோரது வீடுகளில் சி.பி.ஐ., போலீசார் நேற்று அதிரடிச் சோதனை நடத்தினர். ஐதராபாத்தில் இருந்து சென்ற சி.பி.ஐ., சூப்பிரடெண்ட் வெங்கடேஷ் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவினர் இந்த சோதனையை நடத்தினர்.சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனார்த்தன ரெட்டியின் உதவியாளர்களான குருலிங்கே கவுடா, பெல்லாரி நகர வளர்ச்சிக் குழுமச் சேர்மனாக பதவி வகித்து வருகிறார். ராஜசேகர கவுடா கிராம ஊராட்சி உறுப்பினராக உள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us