பார்லி., கூட்டத்தொடரில் பங்கேற்க கோரிய கல்மாடி மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
பார்லி., கூட்டத்தொடரில் பங்கேற்க கோரிய கல்மாடி மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
பார்லி., கூட்டத்தொடரில் பங்கேற்க கோரிய கல்மாடி மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
புதுடில்லி: 'ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் கல்மாடியால், தன் தொகுதி பிரச்னைகளை எப்படி ஞாபகம் வைத்துக் கொள்ள முடியும்'என, அரசு தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டதை அடுத்து, சுரேஷ் கல்மாடி, பார்லி., கூட்டத் தொடரில் பங்கேற்க அனுமதி கோரி, தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை, டில்லி ஐகோர்ட் ஒத்தி வைத்துள்ளது.
டில்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில், பெரிய அளவில் ஊழல் நடந்ததாகப் புகார் எழுந்தது.
இந்த மனு, நீதிபதி ராஜிவ் சகாய் என்ட்லா, முன்பாக, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கல்மாடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அசோக் தேசாய், கடந்த இரண்டு ஆண்டுகளில், கல்மாடி, பார்லி., கூட்டத் தொடரில் பங்கேற்றது தொடர்பான வருகைப் பதிவேட்டையும், கூட்டத் தொடரில் பங்கேற்று, அவர் கேட்ட கேள்விகள் குறித்த விவரங்களையும் தாக்கல் செய்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில், 80 முதல் நூறு சதவீதம் வரை, அவருக்கு வருகைப் பதிவேடு இருப்பதாகவும், காமன்வெல்த் போட்டிகள் நடந்த காலத்தில் மட்டுமே, கூட்டத் தொடரில், அவரால் பங்கேற்க முடியாமல் போனதாகவும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், 154 கேள்விகளை, சபையில் அவர் கேட்டதாகவும், அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கல்மாடியின் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசுத் தரப்பில் ஆஜரான, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.எஸ்.சந்திகோக் வாதாடியதாவது: கல்மாடிக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையின் அடிப்படையில்,ஞாபக மறதி உள்ளிட்ட பல்வேறு நோய்களால், அவர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் இருக்கும் கல்மாடியால், அவரது தொகுதி குறித்த விஷயங்களை, எப்படி நினைவில் வைத்துக் கொள்ள முடியும். பார்லிமென்ட் நடவடிக்கைகளை, அவரால் எப்படி புரிந்து கொள்ள முடியும். பார்லிமென்ட் நடவடிக்கைகளில் பங்கேற்பதற்காக, நேர்முகமாகவும், மறைமுகமாகவும், அனைத்து விதமான முயற்சிகளிலும் கல்மாடி ஈடுபட்டுள்ளார்.
இவ்வாறு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாதாடினார். சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தயான் கிருஷ்ணன்,'கோர்ட் காவலில் இருக்கும் ஒருவர், பார்லிமென்ட் கூட்டத் தொடரில் பங்கேற்கலாம் என, எந்த விதிமுறையிலும் கூறப்படவில்லை. ஆனால், கூட்டத் தொடரில் பங்கேற்பதற்கு, அவருக்கு சிறப்பு உரிமை இருப்பதாக, கல்மாடி கூறியுள்ளார். அவரின் இந்த வாதத்தை ஏற்கக் கூடாது'என்றார். இதையடுத்து, இந்த வழக்கின் மீதான தீர்ப்பை, டில்லி ஐகோர்ட் ஒத்தி வைத்தது.