விலங்குகளுக்கான தீவன உற்பத்தியில் வண்டலூர் பூங்கா சாதனை : ஆண்டுக்கு ரூ.10 லட்சம் மிச்சம்
விலங்குகளுக்கான தீவன உற்பத்தியில் வண்டலூர் பூங்கா சாதனை : ஆண்டுக்கு ரூ.10 லட்சம் மிச்சம்
விலங்குகளுக்கான தீவன உற்பத்தியில் வண்டலூர் பூங்கா சாதனை : ஆண்டுக்கு ரூ.10 லட்சம் மிச்சம்
வண்டலூர் : வண்டலூர் பூங்காவில், பராமரிக்கப்பட்டு வரும் விலங்குகளுக்கான தீவனப் புற்களை, பூங்கா நிர்வாகமே விளைவித்துள்ளது.
இந்த விலங்குகளுக்கு, தினசரி 1,500 கிலோ புற்கள் தேவைப்படுகிறது. இதுவரை, இந்த விலங்குகளுக்கான தீவன புற்களை மாதவரம், காட்டுப்பாக்கம் ஆகிய இடங்களிலிருந்து, கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. பசும்புற்கள் மட்டுமல்லாமல், வைக்கோலும் கொள்முதல் செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு ஆண்டுக்கு, தீவன புற்களுக்காக மட்டும் பூங்கா நிர்வாகம், 10 லட்சம் ரூபாய் செலவழித்து வந்தது. விலங்குகளுக்கு தேவையான தீவன புற்களை உற்பத்தி செய்யும் திட்டம் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது. ஆனால், போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தினால், தொடர்ந்து வெளியில் இருந்தே புற்கள் தருவிக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன், பூங்கா அதிகாரிகள் சிலரின் கடும் முயற்சியால், தீவன புற்கள் உற்பத்தி மீண்டும் துவங்கப்பட்டது.
இது குறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறியதாவது: வண்டலூர் பூங்காவை பொறுத்த வரையில், தீவன பயிர்களை உற்பத்தி செய்ய போதுமான நிலம் மற்றும் பாசன வசதி உள்ளது. எனவே தான், இத்திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்து, தற்போது 4.75 எக்டேர் பரப்பளவில், தீவன பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. நவீன தீவன புல் வகையான, கோ 4 ரகம் பயிரிடப்பட்டுள்ளது. ஓட்டேரி முனையில், 3.75 எக்டேரிலும், பூங்காவின் வடபுறத்தில் ஒரு எக்டேரிலும் தற்போது கோ 4 ரக புற்கள் விளைந்துள்ளன. தற்போது, தினசரி 3,000 கிலோ அளவிற்கு தீவன புற்களை அறுவடை செய்யலாம். இதனால், வண்டலூர் பூங்கா விலங்குகளுக்கான பசுந்தீவன உற்பத்தி தன்னிறைவடைந்துள்ளது.
மேலும், பூங்கா நிர்வாகம் தீவன புற்கள் கொள்முதலுக்காக செலவிட்ட, ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் என்பதும் மீதப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, புரதச்சத்து நிறைந்த வேலிமசால், குதிரை மசால், முயல்மசால் உள்ளிட்ட தீவன பயிர்களையும் விளைவிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
*வண்டலூர் பூங்காவின், நீர் பறவைகள் சரணாலயத்திலுள்ள மிகப் பெரிய ஏரியில் இருந்து, தீவன புற்களுக்கான பாசன வசதி கிடைக்கிறது. பறவைகளின் எச்சம் கலந்த ஏரி நீர், சிறந்த உரம் என்பதால், தீவன புற்கள் செழிப்பாக, விரைவாக வளர்கின்றன.
மதம் பிடித்த யானையை சீராக்கும் வாழை மரம்
எஸ்.உமாபதி