மதுரை காங்., வேட்பாளர் தேர்வில்கூத்து:சிலவற்றுக்கு ஆளில்லை..சிலவற்றுக்கு அடிதடி...
மதுரை காங்., வேட்பாளர் தேர்வில்கூத்து:சிலவற்றுக்கு ஆளில்லை..சிலவற்றுக்கு அடிதடி...
மதுரை காங்., வேட்பாளர் தேர்வில்கூத்து:சிலவற்றுக்கு ஆளில்லை..சிலவற்றுக்கு அடிதடி...
ADDED : அக் 02, 2011 11:56 PM

கோஷ்டி பூசலுக்கு பெயர் பெற்ற மதுரை காங்கிரசில், மாநகராட்சியில் சில வார்டுகளில் போட்டியிட ஆளில்லை. தேட வேண்டியிருந்தது. சிலவற்றில் போட்டியிட அடிதடி சண்டையும் நடந்தது.மலரும், மணமும் போல காங்கிரசும், கோஷ்டி பூசலும் தவிர்க்க முடியாதவை. தி.மு.க., தனித்து போட்டி என அறிவித்தவுடன் மதுரை காங்., நிர்வாகிகள் பலருக்கு கிலி பிடித்து விட்டது. தி.மு.க., அ.தி.மு.க.,வுடன் மாறி மாறி கூட்டணி வைத்த பலத்தில் தேர்தல்களில் வெற்றி பெற்று வந்த காங்கிரசாருக்கு தனித்து நிற்க தைரியமில்லை. இதனால் வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்ற பல நிர்வாகிகள் மேயருக்கு சீட் கேட்டு மேலிடத்தில் மனு செய்த கையுடன் பட்டும் படாமல் ஒதுங்கி விட்டனர்.
மேயருக்கு வாசன் தரப்பை சேர்ந்த சிலுவை அறிவிக்கப்பட்டதும், மற்றவர்கள் அமைதியாகி விட்டனர். சிலுவையும் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்ற போது வார்டு தலைவர்களுக்கு கூட தகவல் தெரிவிக்காததால், பலர் செல்லவில்லை.மாநகராட்சி வார்டு கவுன்சிலர் வேட்பாளர் பட்டியலிலும் வாசன் தரப்பு கையே ஒங்கியது. சிதம்பரம் கோஷ்டியினருக்கு 7 இடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டன. சில வார்டுகளை கேட்டு சிதம்பரம் கோஷ்டியினர் தனியாக வேட்பு மனு செய்தனர். அவர்களுக்கு கட்சி அங்கீகார கடிதம் வழங்கப்படவில்லை. மதுரையில் வார்டு கவுன்சிலர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டன்று, தல்லாகுளத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன், அனுப்பானடி சுகுமார் போன்றவர்கள், வேட்பாளர்களாக அறிவிக்காததை காட்டி தர்ணாவில் ஈடுபட்டனர். பின் அவரை அங்கிருந்த நிர்வாகிகள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
மேலும் ஒரு வார்டில் போட்டியிட கட்சி நிர்வாகி மனைவிக்கு சீட் கொடுக்கப்பட்டது. ஆனால் நிர்வாகியின் தம்பி மனைவிக்கு தி.மு.க.,வில் சீட் வழங்கப்பட்டதும், அவர் பின்தங்கி விட்டார். இதனால் அந்த வார்டில் சுயேச்சையாக நின்ற பெண்ணை காங்., வேட்பாளராக நிர்வாகிகள் அங்கீகரித்தனர். இப்படி வேட்பாளர் தேர்வு கமிட்டி அமைத்தது முதல் வேட்பு மனு தாக்கல் முடியும் வரை கோஷ்டி பூசல் காங்கிரசை அல்லோகலப்படுத்தியது. - நமது சிறப்பு நிருபர் -


