நரிக்குடி அருகே இரு பிரிவினர் மோதல் : வீடுகள், கார்கள் உடைப்பு; பதட்டம்
நரிக்குடி அருகே இரு பிரிவினர் மோதல் : வீடுகள், கார்கள் உடைப்பு; பதட்டம்
நரிக்குடி அருகே இரு பிரிவினர் மோதல் : வீடுகள், கார்கள் உடைப்பு; பதட்டம்

நரிக்குடி : விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே, இரு பிரிவினரிடையே ஏற்பட்ட திடீர் மோதலில், வீடுகள் மற்றும் கார்கள் அடித்து உடைக்கப்பட்டன.
மாலை 6.30 மணிக்கு இருஞ்சிறையைச் சேர்ந்த முருகன், தன் மனைவியுடன், மறையூர் காலனி அருகே பைக்கில் வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு, நிற்காமல் சென்றது. இதனால், மறையூர் காலனியைச் சேர்ந்த ஒரு பிரிவினர் குருபூஜைக்கு சென்று திரும்பிய வேனின் கண்ணாடியை உடைத்தனர். இதனால் ஆத்திரமடைந்து, வேனில் வந்தவர்கள் மற்றும் உடன் வந்த அனைவரும், தங்கள் வாகனங்களை நிறுத்தி, ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, இரு பிரிவினரும் கற்களை வீசி தாக்கிக்கொண்டதில், வீடுகளின் ஓடுகள் உடைக்கப்பட்டன. வாழை மரங்களும் சாய்க்கப்பட்டன.
வேன், டாடா சுமோ கார் உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. போலீசார் பேச்சு நடத்திய பின், பூஜைக்கு சென்று வந்தவர்கள் வாகனங்களில் சென்றனர். இதனிடையே, வீடுகளை உடைத்ததாகக் கூறி, மறையூர் காலனியினர் திடீர் மறியல் நடத்தினர். அருப்புக்கோட்டை போலீசார் பேச்சு நடத்தியதால், அவர்களும் கலைந்து சென்றனர். தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவியதால், போலீசார் குவிக்கப்பட்டனர். இரு பிரிவினரும் நடத்திய மறியலால், அப்பகுதியில் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.