ADDED : செப் 28, 2011 12:41 AM
தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே மின்சாரம் தாக்கியதில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த வாலிபர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது, தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியில் வெளியிடத்திற்கு செல்லக்கூடிய உயர்அழுத்த மின்சார டவர் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சுமார் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் அங்கு செட் அமைத்து தங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று அவர்கள் டவர் அமைக்கும் பணிக்கு சென்றனர். அங்கு மின்வயர்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது மின்வயர் அருகில் சென்ற மற்றொரு மின்வயரில் உரசியதாக கூறப்படுகிறது. இதில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த அப்துல்பத்திக்(25) மீது மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் தூக்கி வீச்சப்பட்டார். கருகிய நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.