கோவிட் பரிசோதனையை கைவிட தமிழக அரசு முடிவு
கோவிட் பரிசோதனையை கைவிட தமிழக அரசு முடிவு
கோவிட் பரிசோதனையை கைவிட தமிழக அரசு முடிவு
ADDED : மே 20, 2025 06:14 AM

சென்னை : தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்வதை நிறுத்த, அரசு திட்டமிட்டுள்ளது.
ஆசிய நாடுகளில் கொரோனா தொற்று பரவத் துவங்கி உள்ளது. குறிப்பாக, ஹாங்காங், சிங்கப்பூரில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து காணப்படுகிறது. தமிழகத்திலும் கொரோனா பரவல் உள்ளது. இங்கு தினமும், 10 பேர் வரை பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
அதேநேரம், 'இது வழக்கமான ஒன்றுதான், தீவிர பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது இல்லை. டெங்கு, மலேரியா காய்ச்சல் போல, கொரோனாவும் இருந்துகொண்டே தான் இருக்கும். கடந்த, 2020, 2021ல் ஏற்பட்டது போல, தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை' என, பொது சுகாதாரத்துறை கூறுகிறது.
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் பொதுமக்கள் அச்சப்படும் வகையில், கொரோனா பரவல் இல்லை. கொரோனாவும் வழக்கமான காய்ச்சல் போல்தான் உள்ளது. எட்டு கோடி மக்கள் தொகையில், ஓரிருவர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.
தமிழகத்தில் மட்டுமே, கொரோனா பரிசோதனையை தொடர்ந்து செய்து வருகிறோம். கொரோனாவின் தீவிரம் குறைந்து, இரண்டு ஆண்டுகளை கடந்தாலும், வீரியத்தை கண்டறிய தொடர்ந்து பரிசோதித்து வருகிறோம்; மரபணு பரிசோதனையும் அவ்வப்போது செய்யப்படுகிறது. அதில், தீவிர பாதிப்பு ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. மற்ற மாநிலங்களில், கொரோனா பரிசோதனை செய்யப்படுவதில்லை.
தமிழகத்தில் செய்யப்படுவதால், இங்கு கொரோனா அதிகரித்துள்ளது போன்ற தோற்றம் ஏற்பட்டு, மக்களை அச்சமடையச் செய்கிறது. எனவே, தேவை ஏற்படாதபோது, கொரோனா பரிசோதனை செய்வதை கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.