ADDED : செப் 30, 2011 11:17 PM
சின்னாளபட்டி : தலைவர் பதவியை ஏலம் விட முயற்சிப்பதாக புகார் எழுந்த பிள்ளையார் நத்தம் ஊராட்சியில், மனு பரிசீலனையிலும் குழப்பம் எழுந்தது.
ஆத்தூர் ஒன்றியம் பிள்ளையார்நத்தம் ஊராட்சி தலைவர் பதவி, பெண்களுக்கு (பொது) ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பதவியை, ஊர்பிரமுகர்கள் ஒன்றுகூடி ரூபாய் 5 லட்சத்திற்கு ஏலம் விட முயற்சிப்பதாக, புகார் எழுந்தது. கலெக்டர் நாகராஜன் விசாரணை செய்து, ஏலம் விட முயற்சித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்தார்.இதன் பிறகு, ஆறு பேர் தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்தனர்.
நேற்று காலை, மனு பரிசீலனைக்காக செல்வராணி, செல்வி, ஜெயந்தி, பவுலி, ஜீவா ஆகியோர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருந்தனர். நீண்ட நேரமாகியும் இவர்கள் அழைக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்து, உதவி தேர்தல் அதிகாரி தேவேந்திரனிடம் கேட்டனர்.'' அழைத்த நேரத்தில் வராததால் உங்கள் மனுக்கள் தள்ளுபடியாகி விட்டன. சாந்தி என்பவரது மனு மட்டும் ஏற்கப்பட்டது,'' என, அவர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் கூச்சல் எழுப்பியவாறு வெளியே சென்றனர். அலுவலக உதவியாளர் ஒருவர், அதிகாரி அழைப்பதாக கூறி, மீண்டும் அழைத்து சென்றார். ஐந்து பேரின் மனுவும் ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து உதவி தேர்தல் அதிகாரி தேவேந்திரன் கூறுகையில், ''பிள்ளையார்நத்தம் ஊராட்சிக்கான மனுதாரர்களை அழைக்குமாறு கூறியபோது, அலுவலக உதவியாளர்கள் தகவல் தெரிவிக்காமல், வெளியில் சென்றுள்ளனர். மனுதாரர்கள் யாரும் வரவில்லை என, கருதினோம். மனுதாரர்கள் நேரில் வந்து கூறியதும், மனுக்கள் ஏற்கப்பட்டன,'' என்றார்.