நோயாளிகளின் கால் டாக்சிகளாக செயல்படும் ஆம்புலன்ஸ்கள்
நோயாளிகளின் கால் டாக்சிகளாக செயல்படும் ஆம்புலன்ஸ்கள்
நோயாளிகளின் கால் டாக்சிகளாக செயல்படும் ஆம்புலன்ஸ்கள்

மேலை நாடுகளை ஒப்பிடும்போது, இங்கு நவீன மருத்துவ வசதிகள் பெருகி வந்தாலும், ஆம்புலன்ஸ் சேவையில் நாம் இன்னும் பின்தங்கியே உள்ளோம். சென்னையில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. ஆனால், அடிப்படை மருத்துவ வசதிகள் உள்ள ஆம்புலன்ஸ்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
தமிழகத்தில், 108 இலவச ஆம்புலன்ஸ் சேவையோடு, அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், ஸ்கேன் மையங்கள், தன்னார்வ சேவை மையங்கள் ஆகியவை ஆம்புலன்ஸ் சேவைகளை நடத்தி வருகின்றன. ஆம்புலன்ஸ் சேவை நடத்துவதற்கு வேனும், டிரைவரும் இருந்தால் போதும் என்பது தான் இன்றைய நிலை.
விபத்தில் காயமடைந்தவர்கள், மாரடைப்பு போன்ற அவசர சிகிச்சை தேவை உள்ளவர்களுக்கு, ஆம்புலன்ஸ் உள்ளே முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும். இதற்கு, ஆம்புலன்சில் சிகிச்சை வசதிகள் இருக்க வேண்டும். ஆக்சிஜன், சக்சன், சுவாசக் குழாய்களில் உள்ள அடைப்பை நீக்குவதற்கான கருவிகள், அவசர சிகிச்சைக்கான மருந்துகள் இருக்க வேண்டும். இவற்றுக்கும் மேலாக இச்சிகிச்சை அளிப்பதற்கு, பயிற்சி பெற்ற செவிலியர் அல்லது மருத்துவப் பணியாளர் இருக்க வேண்டும்.
'பேசிக் லைப் சப்போர்ட்' வகை ஆம்புலன்ஸ்களில் முதலுதவி சிகிச்சை வசதிகள், சக்சன். டிரிப் ஏற்றுவதற்கான வசதிகள் உட்பட அடிப்படை மருத்துவ வசதிகள் இருக்க வேண்டும். 'அட்வான்ஸ் லைப் சப்போர்ட்' ஆம்புலன்ஸ்களில் மாரடைப்பு போன்ற உடனடி சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு ஆம்புலன்ஸ் உள்ளே சிகிச்சை அளிக்க, அதில் பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளரும் இருக்க வேண்டும்.ஆம்புலன்ஸ்களை வேறு பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடாது. தமிழகத்தில் இயக்கப்படும் பெரும்பாலான ஆம்புலன்ஸ்கள் இந்த விதிகளை மதிப்பதில்லை. சென்னை உட்பட தமிழகத்தில் இயக்கப்படும் பல ஆம்புலன்ஸ்கள் எல்லா பணிகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.
ஆம்புலன்ஸ்களுக்கு, வட்டார போக்குவரத்து அலுவலர் அனுமதி கொடுத்தால் போதும் என்று விதி உள்ளது. இதுகுறித்து, மோட்டார் வாகன ஆய்வாளர் கிரிராஜன் கூறும்போது, ''இப்போது ஆம்புலன்ஸ்களின் செயல்பாடுகளை கண்காணிக்க அமைப்பு ஏதும் இல்லை. வாகனத்துக்கு வரி செலுத்தி, இன்சூரன்ஸ் மற்றும் தகுதியான டிரைவர் இருந்தால் போதும்; நாங்கள் ஆம்புலன்ஸ்களுக்கு அனுமதி கொடுத்து விடுவோம். அதில், அடிப்படை மருத்துவ உபகரணங்கள் உள்ளதா, தகுதியான மருத்துவ ஊழியர்கள் உள்ளனரா என பரிசோதிப்பது எங்கள் பணி அல்ல,'' என்றார்.
போக்குவரத்து போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் சிவானந்தம் கூறும் போது, ''ஆம்புலன்ஸ்களின் மேல் பகுதியில் இருக்கும் விளக்கு, சைரன், நிறம் போன்றவற்றில் விதிகள் பின்பற்றப்படுகின்றதா என்பதை மட்டுமே போலீஸ் கண்காணிக்க முடியும். ஆம்புலன்சில் உள்ள மருத்துவ வசதிகள் குறித்து நாங்கள் ஆய்வு நடத்த முடியாது,'' என்றார்கோர்ட் உத்தரவையடுத்து டில்லியில், ஆம்புலன்ஸ்களை பதிவு செய்யவும், கண்காணிக்கவும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆம்புன்ஸ் வண்டிகளில் என்னென்ன மருத்துவ வசதிகள், உபகரணங்கள் இருக்க வேண்டும் என, இக்குழு பட்டியல் வெளியிட்டுள்ளது. ஆம்புலன்ஸ் அகலம், நீளம், உயரம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதையும் நிர்ணயித்துள்ளது.
இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் ஆம்புலன்ஸ்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அவ்வப்போது திடீர் ஆய்வு செய்து, விதிகளை மீறும் ஆம்புலன்ஸ்களின் அனுமதியை ரத்து செய்யும் அதிகாரமும் இக்குழுவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.இதுபோல், தமிழகத்திலும் ஆம்புலன்ஸ்களை பதிவு செய்யவும், அவ்வப்போது ஆய்வு செய்யவும் தனிக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். அக்குழுவில் போலீஸ், டாக்டர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இடம் பெற வேண்டும், முறைப்படுத்த தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.-எஸ்.ராமசாமி-