ADDED : ஜூலை 28, 2011 03:05 AM
ஈரோடு:பவானியில் விநாயகர் சதுர்த்திக்கான, விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி
தீவிரமாக நடந்து வருகிறது.ஈரோடு மாவட்டத்தில் ஆண்டுதோறும் விநாயகர்
சதுர்த்தி வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மாவட்டத்தில் பவானி அருகே
லட்சுமிபுரத்தில் விநாயகர் சிலைகள் உற்பத்தி செய்யப்பட்டு, மாவட்டம்
முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. உற்பத்தியில் புது வடிவம் கொடுப்பதால்,
பவானி விநாயகர் சிலைகளுக்கு, ஈரோட்டில் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களிலும்
பெரும் வரவேற்பு உண்டு. இந்த ஆண்டு செப்டம்பர் 1ல் விநாயகர் சதுர்த்தி தின
விழா கொண்டாடப்படுகிறது.பவானியில் உள்ள சிலை விற்பனையாளர்களிடம் ஆர்டர்கள்
தற்போது குவிந்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் புதுப்புது
வடிவங்களில் விநாயகர் சிலைகள் வந்துள்ளதாக, சிலை விற்பனையாளர்கள்
தெரிவிக்கின்றனர்.
பவானி காலிங்கராயன்பாளையம் பால விநாயகர் சிலை தயாரிப்பாளர்கள் சக்திவேல்,
ஸ்ரீகுமார் ஆகியோர் கூறியதாவது:ஈரோடு மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்திக்கு
பவானியில் இருந்துதான் சிலைகள் உற்பத்தி செய்யப்படும். ஒரு அடி முதல், 15
அடி வரை உள்ள விநாயகர் சிலைக்கு ஆர்டர்கள் வந்துள்ளது. யானை வாகனம், மயில்
வாகனம், எலி வாகனம், ஐந்து வாகனங்கள், இரண்டு வாகனத்தில் விநாயகர்
அமர்ந்திருப்பது போலவும், விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
நடப்பாண்டு ஸ்பெஷலாக பள்ளி கொண்ட விநாயகர் சிலை தயாரிக்கப்பட்டு
வருகிறது.சுற்றுச் சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், கிழங்கு
மாவு, களிமண் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்ட, விநாயகர் சிலைகள் விற்பனை
செய்யப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விநாயகர் சிலைகளுக்கான
'ஆர்டர்' வரலாம் என்று எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.