Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ரூ.50 லட்சத்தில் சமுதாய கூடம் :அமைச்சர் தகவல்

ரூ.50 லட்சத்தில் சமுதாய கூடம் :அமைச்சர் தகவல்

ரூ.50 லட்சத்தில் சமுதாய கூடம் :அமைச்சர் தகவல்

ரூ.50 லட்சத்தில் சமுதாய கூடம் :அமைச்சர் தகவல்

ADDED : ஜூலை 11, 2011 11:50 PM


Google News
கிருஷ்ணகிரி : ''கிருஷ்ணகிரி அடுத்த கட்டிகானப்பள்ளியில், 50 லட்ச ரூபாய் மதிப்பில் சமுதாய கூடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் முனுசாமி தெரிவித்துள்ளார். தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் முனுசாமி கிருஷ்ணகிரி நகரம் மற்றும் கிருஷ்ணகிரி ஒன்றியத்தை சேர்ந்த பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். கட்டிகானப்பள்ளி பஞ்சாயத்து பாரதியார் நகரில் துவங்கிய மக்கள் குறை கேட்பு முகாம் தேவசமுத்திரம், கீழ்புதூர், மேல்புதூர், புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் எம்.ஜி.ஆர்., நகர், ஸ்ரீராம் நகர், அகச்சிப்பள்ளி ஆகிய இடங்களில் நடந்தது. எட்டு இடங்களில் நடந்த மக்கள் குறைகேட்பு முகாமில், 500க்கும் மேற்பட்ட மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட அமைச்சர் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுத்தியளித்தார்.

பாரதியார் நகரில், 25க்கு மேற்பட்ட குடும்பங்கள், 20 ஆண்டுகளாக அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பதாகவும், அவர்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை என்று அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். விரைவில் அவர்களுக்கு பட்டா பெற்றுதர அமைச்சர் உறுதியளித்து அப்பகுதிக்கு குடிநீர் மற்றும் சாக்கடை, கழிவறை வசதிகள் செய்து தர பஞ்சாயத்து தலைவர் மற்றும் பஞ்சாயத்து யூனியன் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து கட்டிகானப்பள்ளி பஞ்சாயத்து புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளுக்கு ஏற்கெனவே விடப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டுள்ள, 3 பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என்றும், அப்பகுதி மக்களுக்கு வசதியாக சமுதாய கூடம் ஒன்று அமைத்துதர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். கோரிக்கைகளை ஏற்ற அமைச்சர், 50 லட்ச ரூபாய் மதிப்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய சமுதாய கூடம் ஒன்று விரைவில் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். கட்டிகானப்பள்ளியை சேர்ந்த முருகன் என்பவர் தன் மகன் சிவப்பிரகாசத்தின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதால், தன்னுடைய சிறுநீரகத்தை மகனுக்கு மாற்றி பொருத்த மருத்துவ உதவி செய்யுமாறு கோரிக்கை வைத்தார். சிவப்பிரகாசத்தின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு உதவ, சென்னை பொது மருத்துவமனையின் முதல்வருக்கு பரிந்துரை கடிதம் வழங்கிய அமைச்சர் அறுவை சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக, உறுதி அளித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., முனிவெங்கடப்பன், பொறுப்பாளர்கள் அசோக்குமார், காத்தவராயன், கேசவன், கோவிந்தராஜ், கட்டிகானப்பள்ளி பஞ்சாயத்து தலைவர் பெருமாள், சாந்தமூர்த்தி, கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us