கமிஷன் குறைப்பால் சிறுசேமிப்பு முகவர்கள் டெபாசிட் சேகரிப்பு நிறுத்தம்
கமிஷன் குறைப்பால் சிறுசேமிப்பு முகவர்கள் டெபாசிட் சேகரிப்பு நிறுத்தம்
கமிஷன் குறைப்பால் சிறுசேமிப்பு முகவர்கள் டெபாசிட் சேகரிப்பு நிறுத்தம்
மதுரை : கமிஷன் தொகை குறைப்பு அறிவிப்பை தொடர்ந்து சிறுசேமிப்பு முகவர்கள் (ஏஜன்ட்கள்) போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை இத்திட்டத்தில் ஒரு போஸ்ட் ஆபீசுக்கு 200 பேர் வீதம் பல ஆயிரம் பேர் முகவர்களாக பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு திடீரென கமிஷன் தொகையை குறைக்கப் போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பி.பி.எப்., திட்டத்தில் ஒரு சதவீத கமிஷனையும் நிறுத்தப்போவதாக கூறியுள்ளனர். இக்கமிஷன் தொகைக்கு இணையாக மாநில அரசும் ஊக்கத் தொகை, விருது வழங்கும். அதையும் நிறுத்த உள்ளனர். இதனை எதிர்த்து முகவர்கள் தீவிரமாக போராட முன்வந்துள்ளனர். இந்த போராட்டம் ஏற்கனவே கேரளா உட்பட பல மாநிலங்களில் நடத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் தீவிரமடைந்து வருகிறது. முதற்கட்டமாக சோனியா, பிரதமர், ராகுல் ஆகியோருக்கு பேக்ஸ் மூலம் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர்.
நேற்று முதல் 16ம் தேதி வரை டெபாசிட் சேகரிப்பதை நிறுத்தி உள்ளனர். ஒவ்வொரு போஸ்ட் ஆபீசிலும் சிறுசேமிப்பு தொகை பெற்று வரும் முகவர்களிடம் அதை டெபாசிட் செய்யாதவாறு கேன்வாசிங் செய்தனர். ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுனர் ஷியாமளா தலைமையிலான குழு, முகவர்களுக்கான கமிஷனை ரத்து செய்யும்படி பரிந்துரை அளித்துள்ளதே இப்போராட்டத்திற்கு காரணம். மதுரை மாவட்ட முகவர்கள் சங்க தலைவர் மோதிலால், மூத்த ஏஜன்ட்கள் ராஜவேலு, அமுதன் கூறுகையில், 'இதனால் எங்கள் வாழ்வாதாரமே பாதிக்கப்படுகிறது. குழுவின் பரிந்துரையை திரும்பப் பெற வேண்டும். இதற்காக போராடி வருகிறோம். அடுத்து ஒரு நாள் தர்ணா போராட்டமும், தொடர்ந்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரதமும் மேற்கொள்வோம்,' என்றனர். மதுரையில் தினமும் பல லட்சம் ரூபாய் வரை சிறுசேமிப்பு, டெபாசிட் என முகவர்கள் சேகரித்து தபால் அலுவலகங்களில் பணத்தை சேர்ப்பர். ஆறுநாள் போராட்டத்தால் பல லட்சம் ரூபாய் சேமிப்பு இழப்பு ஏற்பட்டுள்ளது.