Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மாட்டுச்சந்தையை காலையில் செயல்படுத்த முடிவு

மாட்டுச்சந்தையை காலையில் செயல்படுத்த முடிவு

மாட்டுச்சந்தையை காலையில் செயல்படுத்த முடிவு

மாட்டுச்சந்தையை காலையில் செயல்படுத்த முடிவு

ADDED : ஜூலை 11, 2011 09:35 PM


Google News
திருப்பூர் : இரவில் போலீஸ் கெடுபிடி, இனம் பார்த்து வாங்க முடியாமல் போவது உள்ளிட்ட காரணங்களால், திருப்பூர் மாட்டுச்சந்தையை காலையில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர், தென்னம்பாளையத்தில் மாட்டுச்சந்தை செயல்படுகிறது. வாரம்தோறும் ஞாயிறு இரவு 10.00 மணி முதல் அதிகாலை 2.00 மணி வரை, திங்கள் அதிகாலை 4.00 மணி முதல் காலை 8.00 மணி வரை செயல்படுகிறது. குண்டடம், காங்கயம், முத்தூர், கொடுவாய், வெள்ளகோவில் உள்ளிட்ட திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.கறவை மாடு, வளர்ப்பு கன்று, பூச்சி மாடுகள், காலாச்சி, காங்கயம் காளைகள் என அனைத்து ரக மாடுகளும் விற்பனைக்கு வருகின்றன. கேரளா, மன்னார்காடு, பாலக்காடு, பொள்ளாச்சி, செங்கப்பள்ளி பகுதிகளில் இருந்து அதிகளவு வியாபாரிகள், திருப்பூர் சந்தையில் மாடுகள் வாங்க குவிகின்றனர். தரம் மற்றும் இனத்தை பொறுத்து 40 ஆயிரம் ரூபாய் வரை மாடுகளுக்கு விலை நிர்ணயித்து வாங்குகின்றனர். வாரம்தோறும் செயல்படும் இச்சந்தையில் ஐந்து லட்சம் ரூபாய் வரை வர்த்தகம் நடக்கிறது.கால்நடை வியாபாரிகள் சங்க தலைவர் மணி கூறியதாவது:தென்னம்பாளையம் சந்தைக்கு திருப்பூர் மாவட்டம் முழுவதிலும் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. பல்வேறு பகுதிகளில் இருந்து டெம்போ, லாரிகளில் வியாபாரிகள் மாடுகளை சந்தைக்கு கொண்டு வருகின்றனர். போலீஸ் கெடுபிடிக்கு பயந்து, இரவு நேரத்தில் சந்தைக்கு வர வியாபாரிகள் தயங்குகின்றனர்; சந்தைக்கு மாடுகள் வரத்து குறையும் நிலை உள்ளது. மேலும், இரவு நேரத்தில் மாடுகளின் தரம், மடி பார்த்து வாங்க முடியாமல் போவதால், வளர்ப்பு மாடுகள் விற்பனை குறைகிறது. வியாபாரிகள், விவசாயிகள் பயன்பெறும் வகையில், வரும் வாரம் முதல், திங்கள்தோறும் அதிகாலை 4.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை சந்தை செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. காலை நேரத்தில் மாடுகளை தரம் பார்த்து வாங்கலாம் என்பதால், வர்த்தகம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது, என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us