Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/படிப்பதில் அக்கறை செலுத்த வேண்டும் மாணவர்களுக்கு ரங்கசாமி அறிவுரை

படிப்பதில் அக்கறை செலுத்த வேண்டும் மாணவர்களுக்கு ரங்கசாமி அறிவுரை

படிப்பதில் அக்கறை செலுத்த வேண்டும் மாணவர்களுக்கு ரங்கசாமி அறிவுரை

படிப்பதில் அக்கறை செலுத்த வேண்டும் மாணவர்களுக்கு ரங்கசாமி அறிவுரை

ADDED : செப் 20, 2011 10:40 PM


Google News

புதுச்சேரி : ஆசிரியர் சொல்படி மாணவர்கள் நடந்தால் வாழ்க்கையில் உயரலாம் என்று முதல்வர் ரங்கசாமி பேசினார்.

ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளியில் சிறந்த ஆசிரியர்களுக்கு ஊக்கப்பரிசுடன் கூடிய விருது வழங்கும் விழா மற்றும் பொதுத்தேர்வில் இந்திய அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் விழா நேற்று நடந்தது.

பெரியகாலாப்பட்டிலுள்ள நவோதயா வித்யாலயா பள்ளி ஆடிட்டோரியத்தில் நடந்த விழாவில், நவோதயா வித்யாலயா சமிதியின் துணை ஆணையர் சடகோபன் வரவேற்று பேசினார். டில்லி நவோதயா வித்யாலயா சமிதியின் இணை ஆணையர் டி.சி.எஸ்.நாயுடு நவோதயா பள்ளிகளின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்து பேசினார். கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் வாழ்த்தி பேசினார்.



விழாவில் முதல்வர் ரங்கசாமி, இந்திய அளவில் நவோதயா பள்ளிகளில் சிறந்து விளங்கிய முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் 20 பேர்களுக்கும், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் 13 பேர்களுக்கும் விருதுகளை வழங்கி பேசியதாவது: நவோதயா பள்ளிகளில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்குக் காரணம் நவோதயா பள்ளிகள் நல்ல கல்வியைக் கொடுப்பதால்தான். மாணவர்கள் திறமையை வளர்ப்பதற்கு கல்வி அவசியமானதாகும். ஊக்கப்பரிசு கொடுப்பதன் மூலம் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் திறமையை வளர்த்துக்கொள்ள முடியும். இங்குப் படிக்கும் மாணவர்கள் உயர்கல்வி பெற்று வருங்காலத்தில் புதுச்சேரிக்குப் பெருமை சேர்க்க வேண்டும். குறிப்பாக புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் ஐ.ஏ.எஸ்.,தேர்வில் வெற்றி பெற வேண்டும்.



ஆசிரியர் சொல்படி மாணவர்கள் நடந்தால் வாழ்க்கையில் உயரலாம். பள்ளிப்பருவத்தில் படிக்கும் எண்ணத்தை தவிர மாணவர்கள் வேறு எதிலும் அக்கறை செலுத்தக்கூடாது. படிப்பு மட்டுமல்லாமல் இலக்கிய நூல்கள், நெறிமுறை நூல்கள், பொது அறிவு தொடர்பான புத்தகங்களையும் படித்தால் வாழ்க்கையில் நல்ல நிலையை அடையலாம். இவ்வாறு முதல்வர் பேசினார். விழாவில் டில்லி நவோதயா வித்யாலயா சமிதி அகாடமி உதவி ஆணையர்கள் எஸ்.கே.கார்க், சீனுவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.பள்ளி முதல்வர் வினாயத்தான் நன்றி கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us