ADDED : ஆக 07, 2011 01:46 AM
தர்மபுரி: பாலக்கோடு அருகே பள்ளிக்கு சென்ற மாணவி கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.
பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு செவ்வந்தி (15) என்ற மகளும் ஒரு மகனும் உள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் கோவிந்தசாமி இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால், சித்ரா தனது குழந்தைகளை அழைத்து கொண்டு பாலக்கோடு அடுத்த தொட்லாம்பட்டியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். செவ்வந்தி பாப்பாரப்பட்டியிலுள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.ஸி., படித்து வந்தார். கடந்த 4ம் தேதி காலை பள்ளிக்கு சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பாததால், சித்ரா மற்றும் அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடினர். நேற்று முன்தினம் பாலக்கோடு அடுத்த வெள்ளாளமுத்தூர் பகுதியில் உள்ள செல்லியம்மன் கோவில் கிணற்றில் செவ்வந்தி பிணமாக மிதந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பாலக்கோடு போலீஸார் விசாரணை நடத்தினர். 'மகள் சாவில் மர்மம் உள்ளதாக' செவ்வந்தியின் தாய் சித்ரா பாலக்கோடு போலீஸில் புகார் செய்தார். போலீஸார் விசாரிக்கின்றனர்.